உடலை வளைத்து, நிமிர்த்திச் செய்யும் இரண்டு நிமிட ஆசனம் இது. உடலின் வளைவுத்தன்மையை மேம்படுத்தும்.
தரையில், மண்டியிட்டு, பாதத்தை ஆங்கில வி (V) போல விரித்து, பாதம்மேல் உட்கார வேண்டும். உடல் நேராக இருக்கட்டும். இது, வஜ்ராசன நிலை. இப்போது, கண்களை மூடியபடி, கைகளை மேலே உயர்த்தி, முன்புறம் வளைந்து, நெற்றி, கைகளைத் தரையில் பதிக்க வேண்டும். பின்னர், கண்களைத் திறந்து, கையைத் தரையில் ஊன்றி முட்டி, மற்றும் கைகளால் உடலைத் தாங்கும்படி இருக்க வேண்டும். இப்போது, இடுப்பை உயர்த்தி, பாதம் மற்றும் கைகளால் உடலைத் தாங்கும்படி, மலை வடிவில் நிற்க வேண்டும். பின்னர், ஒவ்வொரு படியாகக் கடந்து பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி மூன்று முறை செய்ய வேண்டும்.
கை மணிக்கட்டில் அடிபட்டிருக்கும்போதும், தலைவலி இருக்கும்போதும் இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டாம்.
பலன்கள்
மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்வதால், மூளை சுறுசுறுப்பாக இயங்கும். மனஅழுத்தம், பயம், மனச்சோர்வு தீரும்.
தோள்பட்டை, புஜம், கால்கள் வலுப்பெறும்.
உடல் எடையைத் தூக்கி நிறுத்தும் ஆசனம் என்பதால், எலும்புகள் வலுப்பெறும். எலும்பு அடர்த்தி குறைதல் வராமல் தடுக்கும்.
முதுகு வலி சரியாகும். அடிமுதுகுவலி, நடு முதுகுவலி குறையும்.
இந்த ஆசனத்தில் உடல் முழுதும் செயல்படுவதால், உடலின் வளைவுத் தன்மை அதிகரிக்கும்.
உயர் ரத்த அழுத்தம் சீராகும்.
ஆஸ்துமா, சைனஸ் பிரச்னை இருப்பவர்கள் அவசியம் செய்ய வேண்டிய ஆசனம்.
நாட்பட்ட தலைவலி சரியாகும்.
சந்தி முத்திரை
வயதானவர்களின் நிரந்தரப் பிரச்னை, கை,கால்வலி, மூட்டுவலி மற்றும் உடல்வலி. வலி மாத்திரைகளால் பெரிய பலனும் கிடைப்பது இல்லை. மருந்துகள் இல்லாமல், ஓய்வு நேரங்களில் சில முத்திரைகளைச் செய்தாலே, மூட்டுவலி காணாமல் போய்விடும்.
சந்தி முத்திரை
வலது கை: மோதிர விரல், கட்டை விரலின் நுனிகள் தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.
இடது கை: நடுவிரல், கட்டை விரலின் நுனிகள் தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.
காலை மாலை என இருவேளையும் 20 நிமிடங்கள் செய்யலாம்.
பலன்கள்: முழங்கால் மூட்டுவலி சரியாகும். முழங்கால் மூட்டு சவ்வுக் கிழிதல், மூட்டு பலமின்மை, மூட்டில் உள்ள திரவம் குறைதல், வீக்கம், வலி சரியாகும்.
முதுகுத்தண்டு முத்திரை
வலது கை: நடு விரல், சுண்டு விரல், கட்டை விரல் ஆகிய நுனிகள் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்கட்டும்.
இடது கை: ஆள்காட்டி விரல், கட்டை விரலின் நடுப்பகுதியைத் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.
மூன்று வேளையும் 20 நிமிடங்கள் செய்யலாம்.
பலன்கள்: முதுகுவலி தேய்மானம், சயாட்டிக்கா எனும் முதுகு வலி, டிஸ்க் புரொலாப்ஸ், முதுகில் இருந்து பின்னங்கால் வழியாகப் பாதம் வரை வரும் வலி, இடுப்பின் ஏற்படும் இறுக்கம் சரியாகும்.
வாயு முத்திரை
ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடிரேகையைத் தொட வேண்டும். கட்டை விரலால் ஆள்காட்டி விரலை மிதமாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும். இரண்டு கைகளிலும் இந்த முத்திரையைப் பிடிக்க வேண்டும்.
அதிகப்படியான வாயுவே மூட்டுவலிக்குக் காரணம். தினமும் இருமுறை, 10 நிமிடங்களுக்கு வாயு முத்திரை செய்த பின், மற்ற முத்திரைகளைச் செய்ய வேண்டும்.
பலன்கள்: நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், வயிற்று உப்புசம், வாயுக்குத்தல், மூச்சுப்பிடிப்பு, அடிக்கடி ஏப்பம் வருதல், உணவு செரிக்காமை, கால்களில் குத்துவது போன்ற உணர்வு, குடைச்சல், வலி, மனஇறுக்கம் நீங்கும்.
முநீ முத்திரை
வலது கை: நடு விரல், சுண்டு விரல், கட்டை விரல் ஆகிய நுனிகள் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.
இடது கை: சுண்டு விரல், கட்டை விரலின் நடுப்பகுதியைத் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.
வாயு, சந்தி முத்திரையைச் செய்த பின், கழுத்துவலி முத்திரையை 20 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
பலன்கள்: கழுத்துவலி, கழுத்து எலும்புத் தேய்மானம், கழுத்து வீக்கம், இடுப்புவலி, கணினி முன் வேலை செய்பவர்களுக்கான மூட்டுவலி தீரும்.