தற்கொலை எண்ணம் ஏன் வருகிறது?
16 Mar,2016
படித்து முடித்தவுடன் வேலைக்கு போய்விட வேண்டும் என்பது தான், இன்றைய இளைஞர்களின் விருப்பம். இதற்கு பெரும்பாலான இளைஞர்கள் தேர்ந்தெடுக்கும் துறை, ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும், பி.பி.ஓ., அதாவது கால்சென்டர். இந்த இரண்டிலும் வேலை செய்வோருக்கு, ‘ஷிப்ட்’ என்பது பெரிய பிரச்னை. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தான் வேலை என்று இல்லாமல், இரவு, பகல் என்று மாறி, மாறி வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் சரியான நேரத்திற்கு, தேவையான அளவு தூங்க முடிவதில்லை. தொடர்ந்து சரியான தூக்கம் இல்லாவிட்டால், மன அழுத்தம் அதிகரித்து, தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதாக ஆய்வு உறுதி செய்கிறது. நிறைய, பி.பி.ஓ., ஊழியர்களுக்கு அலுவலக வேலையும், தினசரி வேலையும் பெரிய மாறுபாடாக உள்ளது. இங்கு கிண்டி அலுவலகத்தில் உட்கார்ந்து அட்லான்டிக்கிலும், நியூயார்க்கிலும் உள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளை கேட்க வேண்டியுள்ளது. அலுவலக நேரம் முடிந்து வெளியில் வந்தால், நம்முடைய யதார்த்த சூழலை எதிர்கொள்ள வேண்டும். இந்த சூழல் வெளிப்படையாக, உடனடியான பாதிப்பை ஏற்படுத்தா விட்டாலும், நம்மையும்
அறியாமல் ஏற்படும் மன அழுத்தம், காலப்போக்கில், பலவித உடல் பிரச்னைகளையும், எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்தும்.
சமீபத்திய மருத்துவ ஆய்வுகளின் படி, 50 வயதிற்கு மேல் வர வேண்டிய ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, இப்போது, 30 வயதிலேயே வர ஆரம்பித்து உள்ளது. வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தான், இதற்கெல்லாம் முக்கிய காரணிகள்.
இதுதவிர ஒரே இடத்தில் வேலை செய்யும்போது, சக ஊழியருடன் காதல், திருமணமானவராக இருந்தாலும் உடன் வேலை பார்க்கும் நபர்களுடன் முறையற்ற உறவு, நண்பர்களுடன் பார்ட்டிக்குப் போகும் பெண்கள், மது, சிகரெட் போன்ற பழக்கத்திற்கு அடிமையாவது, அதை தொடர்ந்து ஏற்படும் பாதிப்புகள் என்று, பிரச்னை நீண்டு கொண்டே போகிறது. வெளிக் காரணிகளால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாகவே, தற்கொலைகள் அதிகரித்து உள்ளன. தற்கொலை எண்ணங்கள் இருந்தால் ஏற்படும், பொதுவான சில அறிகுறிகள்:
* சரியாக தூங்கியிருக்க மாட்டார்கள். எந்த விஷயத்திலும் அக்கறை இல்லாமல் இருப்பர். உடை அணிவதிலும் அலட்சியம் இருக்கும்
* தங்களுக்கு பிடித்த பொருளை, திடீரென்று யாருக்காவது கொடுத்து விடுவர்
* சகஜமாக யாருடனும் பேச மாட்டார்கள். எதற்கெடுத்தாலும் கோபம், எரிச்சலாக இருப்பர்
* திடீரென்று இன்சூரன்ஸ் எடுப்பர்
* முக்கியமான அறிகுறி, கண்டிப்பாக, 80 சதவீதம் பேர், யாரிடமாவது தங்கள் மனக் குறையைச் சொல்வர்; அதை காது கொடுத்து கேட்க வேண்டும்.