‘பி.பி எகிறுதுஸ’ டென்ஷனில் இருப்பவர்கள் சொல்லும் வார்த்தை இது. போகிறபோக்கில் சொல்லும் வார்த்தை. ஆனால், உண்மையில் ரத்த அழுத்தம் பற்றிய புரிதல்கள் நம்மிடையே மிகவும் குறைவு. உலக அளவில் அடுத்த 10 ஆண்டுகளில் உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களின் எண்ணிக்கை 156 கோடியைத் தாண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. `பிபி’ (Blood Pressure (BP)) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ரத்த அழுத்தம் நம் எல்லோருக்குமே
இருக்கும். இந்த அழுத்தம் எங்கிருந்து உருவாகிறது தெரியுமா? இதயத்தில் இருந்துதான். இதயம் துடிக்கும்போது ரத்தம் இதயத்துக்குச் செல்லும். அப்போது, இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்படும் அழுத்தத்தை சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் என்றும், ஒரு இதயத்துடிப்புக்கும் மற்றொரு துடிப்புக்கும் இடைப்பட்ட வேளையில் (Rest period) இதயம் ரத்தத்தை வெளியேற்றும்போது ரத்தக் குழாய்களில் ஏற்படும் அழுத்தத்தை டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
தொடர்ந்து, ஒருவருக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போதுதான் உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் காரண மாக, மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற முக்கியமான தொந்தரவுகள் எளிதில் வந்துவிடும். எனவேதான், `ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைத்திருப்பது அவசியம்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
ரத்தக் குழாய்கள்
ரத்தக் குழாய்கள் நெகிழ்வுத்தன்மை கொண்டவை. இதனால், ரத்தம் எளிதில் ரத்தக் குழாய் வழியாகப் பாயும். வயதாக வயதாக ரத்தக் குழாய்கள் சற்று இறுக்கமடைந்து, நெகிழ்வுதன்மை குறைவதால், ரத்த அழுத்தம் இயல்பாகவே அதிகரிக்கும். எனவேதான் வயதானவர்களுக்கு ரத்த அழுத்தம் எப்போதுமே சிறிது அதிகமாக இருக்கிறது. சிலருக்கு எளிதில் உயர் ரத்த அழுத்தப் பிரச்னையும் வந்துவிடுகிறது.
அத்ரோஸ்கிலிரோசிஸ் (Atherosclerosis)
ரத்தக் குழாய்களில் ஏற்படும் தடிமனை `ஸ்கிலிரோசிஸ்’ என்கிறார்கள். கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்போது, கொழுப்பு ரத்தக் குழாயில் மெள்ளமெள்ளப் படிந்து, ரத்தக் குழாய்களைத் தடிமானாக்கிவிடும்.
ரத்தத்தில் திடப் பொருள், திரவப் பொருள் இரண்டுமே உள்ளன. திட நிலையில், சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், தட்டணுக்கள் உள்ளன. இவை, ரத்தத்தின் மூலம் ரத்தக் குழாய்களில் சீராகப் பயணிக்கும்.
இந்த ரத்த செல்கள் ஏதாவது ஒரு காரணியால் வலுவிழந்தால், அதன் பயணம் சீராக இருக்காது. ரத்தக் குழாய்களில் ஆங்காங்கே தேங்கி, ரத்தக் குழாய்களில் மெள்ள மெள்ள அடைப்பு ஏற்பட்டு, ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதனால், மாரடைப்பு, ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம்.
சிறுநீரகக் கோளாறுகள்
சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டால், சிறுநீரகத்துக்கு ரத்தம் செல்வதில் சிக்கல் ஏற்படும். இதனை, `ரீனல் ஆர்ட்டெரி ஸ்டீனோசிஸ்’ (Renal Artery Stenosis) என்பார்கள். சிறுநீரகத்துக்குச் சீராக ரத்தம் செல்லவில்லை எனில், சிறுநீரகம் செயலிழந்துவிடும் அபாயம் உண்டு. சிறுநீரக ரத்தக் குழாய்களில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தை, `இரண்டாம் நிலை உயர் ரத்த அழுத்தம்’ என்கிறார்கள்.
சிறுநீரகத்துக்கு மேலே அட்ரினல் சுரப்பி உள்ளது. இந்தச் சுரப்பியில் இருந்து ஸ்டீராய்டு, குளுக்கோகார்டிக்காய்டு, மினரலோ கார்ட்டிக்காய்டு போன்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.
அட்ரினல் சுரப்பியில் ஹார்மோன் சீரின்றிச் சுரந்தாலோ, ஹார்மோன் சுரப்பு நின்றுபோனாலோ, உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். மரபியல் காரணமாகவும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.
சர்க்கரை நோய்
பொதுவாகவே, சர்க்கரை நோயாளிகளுக்கு அனைத்து ரத்தக் குழாய்களும் பாதிக்கப்பட் டிருக்கும். சர்க்கரைக் கட்டுக்குள் இல்லாதபோது, உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. ஒருவேளை, சர்க்கரை நோயாளிகளுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருந்தால், சாதாரண நபரைக்காட்டிலும் அவருக்கு இதய நோய்களும், ஸ்ட்ரோக்கும் வருவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம் என்பதால் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைப்பது அவசியம்.
உயர் ரத்த அழுத்தம் யாருக்கு வரும்?
யாருக்கு வேண்டுமானாலும் இந்தப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு உண்டு. எனினும், சர்க்கரை நோயாளிகள், புகைபிடிப்பவர்கள், சிறுநீரகத் தொந்தரவு உள்ளவர்கள், இதய நோயாளிகள், உடல்பருமன் உடையவர்கள், கொலஸ்ட்ரால் பிரச்னை இருப்பவர்கள், மது அருந்துபவர்களுக்கும், சிலருக்கு மரபுவழியாகவும் உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
கோபப்பட்டால், உயர் ரத்த அழுத்தம் வருமா?
கோபம் காரணமாக நேரடியாக உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான ஆதாரம் கிடையாது. ஆனால், மன அழுத்தம் காரணமாக உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு அதிகம். மனஉளைச்சல் மிகுந்த வேலை செய்பவர்கள், மன அழுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உயர் ரத்த அழுத்தம் எளிதில் வந்துவிடுகிறது. உயர் ரத்த அழுத்தப் பிரச்னைக்கு அறிகுறிகளே தெரியாது. பரிசோதனை செய்தால் மட்டுமே தெரியும். தலைசுற்றல், மயக்கம் போன்றவை உயர் ரத்த அழுத்தம் வந்த பின்னர் வரக்கூடிய அறிகுறிகள்.
குறைந்த ரத்த அழுத்தம் ஒரு நோயா?
‘லோ பி.பி’ எனப் பேச்சுவழக்கில் சொல்லப்படும் குறைந்த ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. மனிதர்கள் எல்லோருக்கு ஒரேவிதமான ரத்த அழுத்தம் இருப்பது கிடையாது. பலருக்கு இயல்பாகவே 100/60 என்ற அளவில்கூட ரத்த அழுத்தம் இருக்கும். இதனைக் குறைந்த ரத்த அழுத்த நோயாகக் கருதத் தேவை இல்லை. நீண்ட காலம் சீராக இருக்கும் ரத்த அழுத்தம் திடீரென அடிக்கடி குறைந்தாலோ, அதிகரித்தாலோ நம் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருக்கிறது என அறிய முடியும். எப்போதோ ஒரு முறை பரிசோதித்துவிட்டு, குறைந்த அழுத்தம் எனத் தாங்களாகவே முடிவு செய்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும். சிலருக்கு, அவர்களின் இயல்பான ரத்த அழுத்த அளவைவிட திடீரென சில நேரங்களில் மட்டும் ரத்த அழுத்தம் குறைகிறது எனில், அதற்கு சிகிச்சைகள் உள்ளன.
பரிசோதனைகள்
ரத்த அழுத்தம் ஒரே நாளில் வந்துவிடுவது இல்லை. ஒருமுறை பரிசோதித்து, ஒருவருக்கு ரத்த அழுத்தம் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. 30 வயதைக் கடந்த அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். ரத்த அழுத்தப் பரிசோதனை என்பது, சாதாரணமான பரிசோதனைதான்.
பரிசோதனையில் உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவசியம் இல்லாதவர்களைத் தவிர மற்றவர்கள் மறுநாளே மாத்திரை சாப்பிடத் தொடங்க வேண்டும் என்பது இல்லை. தொடர் பரிசோதனை செய்வது அவசியம். தொடர்ந்து ஏழு நாட்களுக்கு, காலை மற்றும் மாலை ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். மொத்தமாக, 14 முறை செய்யபடும் இந்தப் பரிசோதனையில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான முடிவுகளில் உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு வாழ்வியல்முறை மாற்றம் மூலமாக ரத்த அழுத்தம் குறைகிறதா என்பதைப் பரிசோதிக்கலாம், அப்படியும் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படவில்லை என்றால், உயர் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரை, மருந்துகளைச் சாப்பிடுவது அவசியம்.