தசைநார் கிழிவு தடுப்பது எப்படி?
21 Nov,2015
திடீரென்று ஒருவர் தடுமாறி விழுகிறார். உடனே மருத்துவரிடம் சென்றால், கணுக்கால் மூட்டுக்கு அருகிலுள்ள, ‘லிகமென்ட்’ எனும் தசைநார் கிழிந்து விட்டது. ஒரு மாதத்திற்கு நடக்கக்கூடாது. மீறி நடந்தால், எலும்பில் முறிவு ஏற்படலாம் என்பார்.
‘தசைநார்’ என்றால் என்ன? அது எப்படி கிழியும்?
எலும்பு மூட்டுகளைப் பிணைத்திருக்கும் அமைப்பு தான், ‘லிகமென்ட்’ எனப்படும் தசைநார், ‘கொலாஜனால்’ ஆனது; நெகிழ்வுத் தன்மை கொண்டது. இது, உடலில் உள்ள தசைகளுடன் இணைந்து, எலும்புகளை இணைத்துப் பிடிக்கும். தசைநார்கள் இல்லையெனில், எலும்புகள் இணைந்து இருக்காது. உடலின் ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு எலும்புக்கும் ஏற்றவாறு, தசைநார்கள் இருக்கின்றன. கைவிரல்கள், கால் விரல்களில் இருக்கும் தசைநார்கள் மிகவும் மென்மையானவை. விளையாட்டு வீரர்கள் மற்றும் விபத்துகளில் சிக்குபவர்களுக்கு மட்டும் தான், தசைநார்கள் அதிகம் கிழியும். இதுதவிர, விபத்தில் மூட்டு பகுதியில் அடிபடுபவர்களுக்கு, தசைநார் கிழிவதற்கான வாய்ப்பு உள்ளது. சுளுக்கு ஏற்படும் சமயங்களிலும், தசைநார் கிழிந்துவிடும். தசைநார் கிழிந்துள்ளதை, பாதிக்கப்பட்ட இடத்தின் வெளிப்புறத்தில் சோதனை செய்து தெரிந்து கொள்ளலாம். எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மூலம், தசைநார் பாதிப்பை அளவிடலாம். தசைநார் பாதிப்பை, அலட்சியம் செய்யக்கூடாது. எனவே, மூட்டுகளில் வலி இருந்தால், உடனே மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
தசைநார் கிழிவுக்கு எடுக்கும் சிகிச்சையில், கொஞ்சம் கவனம் சிதறினாலும், தசைநார் பழைய நிலைக்கு திரும்பாமல் வலி ஏற்படும்.