குழந்தையின்மை பிரச்னைதான் இன்று பல குடும்பங்களை ஏங்கவைக்கிற நிஜம். குழந்தை இல்லை என்று மருத்துவமனைக்குச் செல்லும் தம்பதிகளிடம் அவர்களின் மருத்துவ வரலாறு கேட்கப்படும். அதில் இடம்பெறும் முக்கியமான கேள்வி ‘சிகரெட், மதுப் பழக்கம் உள்ளதா?’ என்பதே.
குழந்தையின்மைக்கு ஹார்மோன் குறைபாடு, மன அழுத்தம் என ஏராளமான காரணங்கள் உள்ளன. அவற்றில் தவிர்க்கக்கூடிய காரணிகளில் முதலாவதாக இருப்பது, சிகரெட், மது உள்ளிட்ட போதைப் பழக்கங்களே!
போதை வஸ்துக்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே இங்கு குழந்தையின்மைப் பிரச்னை அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம். அதிலும், சிகரெட், மது என இரண்டு போதைப் பழக்கங்களுக்கும் அடிமையானவர்களுக்கு, குழந்தையின்மைக்கான வாய்ப்பு இரட்டிப்பாகிறது.
சிகரெட்
சிகரெட் பிடிப்பவர்களுக்கு இரண்டு வகையான பிரச்னைகள் ஏற்படும். நன்றாக உடலுறவில் ஈடுபடமுடியும். ஆனால், விந்தணுக்கள் தரமற்றதாக இருப்பதால், குழந்தையின்மை பிரச்னை வருவது ஒரு வகை. ஆணுறுப்பில் விறைப்புத்தன்மையின் குறைபாடு காரணமாக உடலுறவில் முழுமையாக ஈடுபட முடியாமல் போகும் நிலை இரண்டாவது வகை.
தரமற்ற விந்தணுக்கள்
ஆணின் உடலில் பல்லாயிரம் கோடி விந்தணுக்கள் உள்ளன. உடலுறவின்போது, ஆண்களிடம் இருக்கும் ஒரு நல்ல விந்தணுவும், பெண்ணிடம் இருக்கும் ஒரு நல்ல சினைமுட்டையும் இணைந்தாலே கரு உருவாகிவிடும். பல்லாயிரம் கோடி விந்தணுக்கள் இருந்தும் ஏன் குழந்தையின்மைப் பிரச்னை வருகிறது என சந்தேகம் எழக்கூடும். விந்தணுக்களைப் பற்றி முழுமையாக அறிய, நாம் விந்தணுக்களின் இயங்குதிறனையும், விந்து அமைப்பியலையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
இயங்கு திறன்
ஆண்களுக்கு இயல்பாகவே 30 சதவிகித விந்தணுக்கள்தான் நன்றாக முன்னோக்கி வேகமாக இயங்கும் திறன் கொண்டிருக்கும். சிகரெட் பிடிக்கும்போது, அதில் உள்ள நச்சுக்கள் இந்த 30 சதவிகித நல்ல விந்தணுக்களைப் பாதிக்கின்றன. இதனால், அவை தரம் இல்லாதவையாக மாறுகின்றன.
விந்தணுக்கள் இருந்தும், இயங்கும் திறன் இல்லை என்றால், அதனால், முட்டையை அடைவதில் பாதிப்பு ஏற்படும். இதனால், கரு உருவாகாது. ஒருவேளை இந்தத் தரமற்ற விந்தணுக்கள் முட்டையை அடைந்து கரு உருவானாலும், கலைந்துவிடும் அபாயம் இருக்கிறது அல்லது, பிறக்கும் குழந்தைக்கு ஏதேனும் உடல்நலக் குறைபாடு ஏற்படவும் வாய்ப்பு அதிகம்.
ஒருவர் சிகரெட் பிடிப்பது அவரை மட்டும் பாதிப்பது இல்லை. அவருக்குப் பிறக்கும் குழந்தைக்கு மரபுரீதியாகவே பல்வேறுவிதமான உடல்நலக் குறைபாடுகள் வருவதற்கும் சிகரெட்தான் முக்கியமான காரணம்.
கரு கலைந்தால் பெண்களிடம்தான் பிரச்னை எனத் தவறாக நினைக்கின்றனர். இயங்குதிறன் குறைந்த, தரமற்ற விந்தணுக்கள் காரணமாகவும் கரு கலையலாம். அதற்கு சிகரெட் மிக முக்கியக் காரணம்.
விந்து அமைப்பியல் (Morphology)
விந்தணு என்பது ஒரு தலை, ஓர் உடல், ஒரு வால் மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும். பொதுவாகவே உடலில் குறிப்பிட்ட அளவுக்கு சில விந்தணுக்கள் உருமாறி இரண்டு தலை கொண்டதாகவும், இரண்டு வால் கொண்டதாகவும் இருக்கும். ரத்தத்தில் கலந்தி
ருக்கும் சிகரெட் நச்சுக்கள், விந்தணுக்களின் வடிவத்தை அதிக அளவில் மாற்றிவிடும். இதனால், ஒழுங்கான வடிவம்கொண்ட விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதுவும் குழந்தையின்மைக்கு காரணமாகிறது.
உடலுறவுப் பிரச்னைகள்
சிகரெட் பிடிக்கும்போது நுரையீரல், இதய வால்வுகள், நரம்புகள், மூளை உள்ளிட்டவை மட்டும் பாதிக்கப்படுவது இல்லை, இனப்பெருக்க மண்டலமும் பாதிக்கப்படுகிறது.
ஆணுறுப்பில் இருக்கும் ரத்தக் குழாய்களைத்தான் முதலில் சிகெரெட்டில் உள்ள நிக்கோட்டின் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் தாக்குகின்றன. நிக்கோடின், அங்குள்ள ரத்தக் குழாய்களில் படியும்போது, ஆணுறுப்பில் ரத்த ஓட்டம் தடைப்பட்டு, எழுச்சி அடைந்து, விந்துவைப் பீய்ச்சி அடிக்கும் திறன் குறையும். இதனால், விந்தணுக்கள் வெளியே வர மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கும். ஆணுறுப்பு எழுச்சி அடையும் தன்மை குறைந்து, படிப்படியாக உடலுறவில் ஈடுபடவே முடியாத நிலை ஏற்படும்.
தொடர்ந்து ஐந்தாறு வருடங்களுக்கும் அதிகமாக, இடைவிடாமல் தினமும் சிகரெட் ஊதித்தள்ளுபவர்களுக்கு இந்தப் பாதிப்புக்கான வாய்ப்பு அதிகம். எனவே, புகை, மது தவிர்ப்போம்.
ஆல்கஹால் பாதிப்புகள்
ஆல்கஹால் அருந்துவதால் நன்றாக உடலுறவில் ஈடுபட முடியும் என்பது தவறான வதந்தி. அடிக்கடி ஆல்கஹால் அருந்துபவர்களுக்கு உடலுறவு தொடர்பான உணர்வுகள் தற்காலிகமாக அதிகரிக்கும். ஆனால், ஆணுறுப்பு எழுச்சி அடையும் தன்மை குறைந்துவிடும். தற்போது பதின் வயதிலேயே மது அருந்தத் தொடங்கிவிடுகிறார்கள். மது, கல்லீரலை மட்டும் அல்ல, விந்தணுக்களையும் சிதைக்கும். 18 வயதில் மது அருந்தத் தொடங்குபவர்களுக்கு, திருமண வயதில் குழந்தைப்பேறு இன்மை பிரச்னை வந்தாலோ, உடலுறவில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்றாலோ, அதற்கு ஆல்கஹால் மிக முக்கியக் காரணமாக இருக்கும். ஆணுறுப்பு எழுச்சி அடைவதில் பிரச்னை; விந்தணுக்களின் செயல்திறனும் குறைகிறது என்பதால், மது அருந்துவதை அடியோடு தவிர்ப்பதே சிறந்தது. இந்தப் பிரச்னை இருப்பவர்கள் மன அழுத்தத்தைத் தவிர்த்து சிகரெட், மதுப் பழக்கத்தைக் கைவிட்டாலே போதும், மீண்டுவிடலாம்.
சிகரெட் பழக்கத்தைத் தவிர்த்தால்?
இரண்டு முதல் ஐந்து வருடங்களுக்கும் மேலாக தொடந்து சிகரெட் பிடிப்பவர்கள், சிகரட்டை முற்றிலுமாகத் தவிர்ப்பதன் மூலம், விரைப்புத்தன்மை தொடர்பான பிரச்னைகள் (Erectile dysfunction) வருவதை, முழுமையாகவே தடுக்க முடியும். ஒரு சில ஆண்டுகள் சிகரெட் பிடித்து வந்தவர்களாக இருந்தால்கூட, சிகரெட்டை முழுமையாக விட்டுவிட்டால் அடுத்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, விந்தணுக்களின் தரம் உயர ஆரம்பிக்கும். ஒரு வருடத்தில் நல்ல முறையில் குழந்தைப்பேறு அடையவும் இயலும். எனவே, சிகரெட் பிடித்ததால் ஆண்மைத்தன்மை குறைபாடு ஏற்பட்டுவிட்டதோ எனத் அஞ்சத் தேவை இல்லை. நம்பிக்கையுடன் சிகரெட்டை விட்டால் குழந்தைப்பேறு நிச்சயம் உண்டு.
இதயம் சராசரியாக ஒரு நிமிடத்துக்கு 72 முறைகள் துடிக்கிறது. ஒவ்வொரு முறை துடிக்கும்போதும், நமது உடலில் சராசரியாக 1,000 விந்தணுக்கள் உற்பத்தி ஆகின்றன.
ஒரு விந்தணு முழுமையான வளர்ச்சிபெற 64 நாட்கள் ஆகும். இந்த 64 நாட்களில்தான், அந்த ஆணின் உடலில் உள்ள டி.என்.ஏ முழுமையாக விந்தணுவுக்கு மாறும்.
ஆண்களின் விந்துவைப் பரிசோதிக்கும்போது, ஒரு மி.லி விந்துவில் குறைந்தபட்சம் 15 மில்லியன் விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதற்குக் குறைவாக இருந்தால், உடலுறவின் மூலம் தந்தையாகும் வாய்ப்பு குறையும்.