நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால், நல்ல கொழுப்பு கிடைப்பதோடு, ஆரோக்கியத்துக்கு தேவையான, பல்வேறு சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன.
இதே எண்ணெயை, குளியலுக்கும் பயன்படுத்துவது வழக்கம். நம் முன்னோர், காலந்தொட்டு, பாரம்பரியமாக மேற்கொண்ட நடைமுறை, வாரம் ஒருமுறை, எண்ணெய் குளியல் எடுப்பது. இது, ஒரு வகையான ஆயுர்வேத முறை.
குறிப்பாக, பெண்கள் வெள்ளிக்கிழமையிலும், ஆண்கள் சனிக்கிழமையிலும் நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ள வேண்டுமாம். மேலும், நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளும் போது, அதில் பூண்டு, மிளகு, சீரகம் மற்றும் சுக்கு ஆகியவற்றை சேர்த்து, வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அந்த நல்லெண்ணெயை, நன்கு தேய்த்து குளிக்க வேண்டும்.
நவ நாகரீகம் என்கிற பெயரில், இதையெல்லாமல் மறந்ததன் விளைவால் தான், முடி உதிர்வதோடு, பல்வேறு நோய் பாதிப்புகளுக்கும் ஆளாக வேண்டியுள்ளது. வாரமொரு முறை, நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால், கிடைக்கும் நன்மைகளின் பட்டியல் இதோ:
அடர்த்தியான முடி வளரும்: நல்லெண்ணெய் குளியலின் மூலம், மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் இருக்கும்.
உடல் சூட்டை தணிக்கும்: நல்லெண்ணெய் கொண்டு, வாரம் ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறும். உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
பொலிவான சருமம்: எண்ணெய் குளியல் என்று சொல்லும் போது, தலைக்கு மட்டுமின்றி, உடலுக்கும், நல்லெண்ணெய் தேய்த்து, மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும்.
பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால் நீங்கும்.
இயற்கையான உணவை உட்கொண்டால் நோய்களில் இருந்து நாம் விடுபடலாம். காலை எழுந்தவுடன் அரை எலுமிச்சை பழத்துடன், 20 கிராம் தேன் கலந்து சிறிதளவு தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.
அதன் பின் காலை 8:00 மணி முதல் இரவு எட்டு மணி வரை மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பழச்சாறு சாப்பிட வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்டவர்களும், ஆரோக்கியமாக உள்ளவர்களும், இந்த பழச்சாற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இவை ரத்தத்தில் கலந்து புத்துணர்வு பெறலாம்.
பழச்சாறு மட்டுமே சாப்பிடும் வேளையில், கடினமான வேலைகளை செய்யக்கூடாது. ரசாயன மாறுதல் காரணமாக தலைவலி, வயிற்றுவலி, உடல்வலி ஏற்படும். இதை கண்டு பயப்படக்கூடாது.
ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, மாதுளை போன்ற பழங்களை நாள் தோறும் உட்கொண்டால், உடல் வலிமை பெறும். பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புக்கள் நீர்த்துவம் பெறும். பழங்களை உட்கொண்டு வந்தால், சிறுநீர் பிரச்னை ஏற்படாது. இவை எளிதில் ஜீரணமாகும் என்பதால், மலச்சிக்கலும் ஏற்படாது.
கொய்யா, எலுமிச்சை, ஆரஞ்சு, பப்பாளி பழங்களில் வைட்டமின் சி சத்து நிறைய உண்டு. காலை உணவுக்கு பதிலாக பழங்களை உண்டு வந்தால், உடலில் ஏற்படும் பல்வேறு நோய்கள் பறந்து போய்விடும். பழத்துடன் காய்கறிளை சேர்த்து சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பழத்தை சாறுவடிவில் பருகவேண்டும்.அதிக அளவில் பழங்களை உண்பதால், உடலில் உள்ள நச்சுத்தன்மையை குறைக்கும்.
கல்லீரல் பிரச்னை, அஜீரணம் போன்றவை குணமாக, எலுமிச்சை சாற்றைஉட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்விற்கு பழங்களை தொடர்ந்து சாப்பிடலாம்.