சத்தமின்றி சாய்க்கும் ரத்த அழுத்த நோய்!
13 Sep,2015
இளைஞர்களின் உழைப்பில்லா, பரபரப்பான வாழ்க்கை முறையில் ரத்த அழுத்தம் என்பதெல்லாம் இயல்பாகிப் போனது. அதனால் ஏற்படும் விளைவுகளோ பயங்கரம்.
ரத்த அழுத்தம் என்றால் என்ன?
ரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம், தேவையை விட மிக உயர்ந்திருப்பதை ‘ரத்த அழுத்த நோய்’ அல்லது ‘ரத்தக் கொதிப்பு’ என்று கூறுகிறோம். இதைக் கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால், ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக இந்நோய் வெளியே தெரியாது. சில வேளைகளில் மிகப் பெரிய பாதிப்பை அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய பின் கண்டுபிடிக்கப்படும். எனவே இதனை ‘சைலன்ட் கில்லர்’ என்றும் கூறுவர்.
உயர் ரத்த அழுத்தத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?
மருத்துவம் பயின்ற எவரும், ரத்த அழுத்தக் கருவியின் மூலம் ரத்த அழுத்தத்தைக் கண்டு பிடித்து விடலாம். மேல் அளவு, 140-க்கு மேலேயோ அல்லது கீழ் அளவு 90-க்கு மேலேயோ இருந்தால், அந்த நோயாளியை மேற்கொண்டு பரிசோதிக்க வேண்டும். ஒரே ஒரு முறை மட்டும் அதிகமாயிருந்தால், ரத்த அழுத்த நோய் உள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. வேறு வேறு சமயங்களில் மூன்று முறை பரிசோதித்த பிறகு, ரத்த அழுத்தம் இருந்தால் அவரை ‘ரத்த அழுத்த நோயாளி’ எனக் கூறலாம்.
நீங்கள் ரத்த அழுத்த நோயாளி எனில், இந்நோய் பற்றி விரிவாக அறிந்து கொள்ளுங்கள். இந்நோயை கட்டுப்படுத்தாவிடில் மாரடைப்பு, மூளை பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும். மருத்துவரின் ஆலோசனைப்படி செயலாற்றுங்கள். உப்பு அதிகமுள்ள ஊறுகாய்,
கருவாடு, அப்பளம், சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். உப்பு, உடலில் நீரை தங்கச் செய்து இதயத்தை பலமிழக்கச் செய்யும். கால், கைகளை வீங்க வைக்கும். ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். வெண்ணெய், நெய், எண்ணெய் போன்ற கொழுப்புச் சத்து மிகுந்த உணவுப் பொருட்களை சாப்பிடாதீர்கள்.
கொழுப்பு சத்து, ரத்தக் குழாய்களை அடைத்துக் கொண்டு மேற்சொன்ன வியாதிகளை உண்டு பண்ணக் கூடும். தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யுங்கள். ஒரு நாளைக்கு, 1 மணி நேரமாவது வேகமாக நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இது உடலில் கொழுப்புச் சத்து சேர்வதை தவிர்த்து விடுவதுடன், அழுத்தத்தையும் குறைக்கும். புகை பிடிப்பவராக இருந்தால், உடனே அதை நிறுத்துங்கள். புகை பிடிப்பவர்கள் ரத்த அழுத்த நோயினால் அவதிப்படுவதோடு, அல்லாமல் மாரடைப்பு நோயினாலும் உயிரிழக்க நேரிடும்.
மருத்துவரின் ஆலோசனையின்றி அவர் சிபாரிசு செய்யும் மருந்துகளின் அளவை நீங்களாகவே குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ கூடாது. உடல் எடையை குறையுங்கள். உங்களுடைய ரத்த அழுத்தத்தின் அளவை முறையாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக, ஒரு முறை எழுதிக் கொடுத்த மருந்தை வாழ்நாள் முழுவதும் உபயோகிக்கக் கூடாது. அடிக்கடி மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று தேவைக்கு ஏற்ப மருந்துகளை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்ய வேண்டும்.