மனிதர்களின் நினைவு திறனை மிக வேகமாக அழித்து வருகிறது இணையம் - ஆய்வில் அதிர்ச்சி
02 Jul,2015
மனிதர்களின் நினைவு திறனை மிக வேகமாக அழித்து வருகிறது இணையம் - ஆய்வில் அதிர்ச்சி
கடைசியாக எப்போது நீங்கள் ஒரு போன் எண்ணை நினைவு வைத்துக்கொள்ள முயற்சித்தீர்கள்? உங்கள் சகோதர/ சகோதரியின் எண்களாவது நினைவில் இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்பது தான் பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கிறது.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் மனிதர்களின் நினைவு திறன் மிக வேகமாக அழிந்துவருகிறது என்றும் அதற்கு முக்கிய காரணம் இணையம் தான் எனவும் தெரியவந்துள்ளது. இணைய பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கை சமீபத்தில் ஆயிரம் அமெரிக்கர்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலனவர்கள் தங்களின் நெருங்கிய நண்பர்களின் எண்கள் கூட நினைவில் இல்லை என தெரிவித்துள்ளார்கள். 44 சதவீதம் பேர் தங்களின் சகோதர/ சகோதிரியின் எண்கள் கூட ஞாபகம் இல்லை என கூறியுள்ளனர். 90 சதவீதம் பேர் இணையத்தை தங்கள் மூளையின் ஒரு பகுதியாக கருதுவதும் தெரியவந்துள்ளது.
எல்லா தகவல்களும் கையில் இருக்கும் ஸ்மார்ட் போனிலேயே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் போது, ஏன் இவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.
ஆனால் நவீன கல்வி முறைக்கு அடிப்படையே ஞாபக திறன் தான். தற்போது அனைத்துமே உள்ளங்கையில் அடங்கிவிட்ட நிலையில் கல்வி முறையின் அடிப்படையே கேள்விக்கு உள்ளாகியுள்ளது.