வெண்குஷ்டத்திற்கு புதிய மருந்து: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை
28 Aug,2015
ஆங்கிலத்தில் விட்டிலிகோ எனப்படும் வெண்குஷ்ட நோய்க்கு புதிய மருந்தினை அமெரிக்காவைச் சேர்ந்த யேல் பல்கலை மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தோலுக்கு நிறத்தை கொடுக்கும் மெலனின் நிறமியை உற்பத்தி செய்யும் மெலனோசைட்டுகளின் எண்ணிக்கை குறைவதால், இந்நோய் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, வெயிலில் அதிக நேரம் இருத்தல், நெடியுள்ள ரசாயனங்களை கையாளுதல் போன்ற காரணங்களால் வெண் குஷ்டம் ஏற்படலாம் என்று கூறுகிறார்கள்.
வெண்குஷ்டத்திற்கு லைட் தெரபி, கிரீம்கள், அறுவை சிகிச்சை என பல சிகிச்சை முறைகள் இருந்தாலும் திருப்திகரமான முன்னேற்றம் கிடைப்பதில்லை. சமீபத்தில், அமெரிக்காவின் யேல் பல்கலையைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள், மூட்டு வலி சிகிச்சைக்குப் பயன்படும் டோபாசிடினிப் எனும் வெளிப்பூச்சு மருந்து, வெண்குஷ்டத்திற்கு நல்ல பலன் கொடுப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். 53 நிரம்பிய வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மற்ற வழக்கமான சிகிச்சை முறைகளால் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் நோயாளிக்கு டோபாசிடினிப் வெளிப்பூச்சு மருந்தாக இரண்டு மாதங்களுக்கு கொடுக்கப்பட்டதில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. நோயாளியின் தோள்புறம் மற்றும் கைகளில் காணப்பட்ட வெண்குஷ்ட புள்ளிகள் மறையத் தொடங்கியதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். எதிர்காலத்தில் இந்த மருந்து; வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும் என யேல் பல்கலை விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்