எனக்கு வந்தது இந்த நோயாக இருக்குமோ?
மனிதனின் மனம் ஒரு மாயப்புதிர். திகில் கதை படித்தால் திடீரென தூக்கத்தில் திடுக்கிட்டு எழுந்திருப்போம். பேய் படம்
பார்த்தால் மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்கிற கதை உண்மையாகும். விசித்திரமான நோய்களைப் பற்றிப் படிக்கிற, கேள்விப்படுகிற போதும் இதே நிலையை அனுபவிப்பவர்கள் பலர். எங்கோ, யாருக்கோ வந்திருப்பதாகக் கேள்விப்படுகிற நோய் தமக்கும் வந்துவிடுமோ என்கிற பயம், அதே அறிகுறிகளை தாமும் உணர்வது என்கிற இந்த பீதியை அனேகம் பேரிடம் பார்க்கலாம். இந்தப் பிரச்னை இயல்பானதா? அல்லது ஏதேனும் மனநோயின் அறிகுறியா? மனநல மருத்துவர் எஸ்.பி.முருகப்பனிடம் பேசினோம்...
‘‘தினமும் ஏறத்தாழ 60 ஆயிரம் சிந்தனைகள் நம் மனதில் தோன்றுகின்றன. மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பல நோய்களைப் பற்றி நாள் முழுவதும் படிக்க வேண்டியிருக்கிறது. சில புதிய நோய்களைப் பற்றி படிக்கும் போது, ‘இவ்விதமான நோய்கள் நமக்கும் இருக்குமோ? வந்தால் என்ன செய்வது?’ போன்ற எண்ணங்கள் தோன்றுவது சகஜம். அதிகபட்சம் இந்த எண்ணம் ஒருமணி நேரம் இருக்கும். அதன் பிறகு கடந்து போய்விடும். மருத்துவம் படிப்பவர்களுக்கே, அது பற்றிய புரிதல் உள்ளவர்களுக்கே இந்தப் பிரச்னை வருகிறது என்றால் சாமானிய மனிதனுக்கு இந்த வகை பயம் ஏற்படுவது இயற்கையானதே!
வெளிநாட்டில் புதிய வைரஸ் நோய் பரவி வருகிறது என்ற செய்தியை செய்தித்தாளில் படிக்கிறீர்கள். அந்த நோய் இந்தியாவுக்குள் வந்து நமக்கு பரவிவிட்டால் என்ன செய்வது? இப்படி நினைத்து பயப்படுபவர்களும் இருக்கிறார்கள். நோய் வராமல் இருக்க மனதுள் செயல்படும் அகவிழிப்பே இவ்வகை பயங்கள் ஏற்பட ஆதார காரணம். இதை உணர்ந்தாலே பிரச்னை சரியாகி விடும். தொண்டையில் அடிக்கடி கரகரப்பும் வலியும் ஏற்படுகிறது. சளியைத் துப்பும் போது ரத்தம் வருகிறது என வைத்துக்கொள்வோம். உடனே, ‘தொண்டையில் புற்றுநோய் வந்துவிட்டதோ’ அல்லது ‘தைராய்டு கேன்சராக இருக்குமோ’ என்றெல்லாம் பயப்படுபவர்களும் ஏராளம். ஒரு சில அறிகுறிகளை மட்டுமே வைத்துக்கொண்டு இந்த நோய்தான் என்பதை யாருமே தீர்மானிக்க முடியாது.
சிலர் அறிகுறிகளைக் கண்டு பயந்து, உடனே சென்று டாக்டரை பார்ப்பார்கள். இவ்வகையான பயத்தை வணிக ரீதியிலான லாபங்களுக்கு பல மருத்துவமனைகள் பயன்படுத்திக் கொள்கின்றன. பயத்துடன் அணுகுபவரை ‘சிடி ஸ்கேன் எடுக்கவேண்டும், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தால்தான் தெரியும்’ என்று அலைபாய வைப்பதும் நடக்கிறது. பணம், நேரம் எல்லாம் நிறைய செலவழித்த பின், ‘உங்களுக்கு ஒன்று மில்லை’ என்று சொல்லி அனுப்பி விடுவார்கள். அதனால், சிறிய சந்தேகங்களுக்கு எடுத்தவுடன் மருத்துவமனையை நாடாமல் நன்றாக விஷயம் தெரிந்தவர்களிடம் பிரச்னையைச் சொல்லி விவாதியுங்கள். உங்களின் பிரச்னை சாதாரணமானது என அவர்களுக்கு தெரிந்தால் ‘ஏம்பா? இந்தப் பிரச்னை எனக்கும் இருந்துச்சு
இப்படி செய்தேன்... சரியாகிவிட்டது’ என்று அனுபவத்தைப் பகிர்வார்கள். ஒரு நோய் பற்றி படித்த தாக்கம் ஒரு வாரத்துக்கு மேல் உங்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது என்றால் காலம் தாழ்த்தாமல் மனநல மருத்துவரைப் பார்த்து ஆலோசிப்பதே நல்லது. சிலர் ஏதாவது ஒரு புதிய நோய் பற்றி படித்தாலோ, அந்த நோயால் ஒருவர் இறந்திருந்தாலோ அந்த எண்ணமானது ஆழமாக விதைக்கப்பட்டு, அது பற்றியே கவலையும் பயமும் கொள்வார்கள். அந்த நோய் தனக்கு வந்துவிட்டதாக நினைப்பார்கள். இந்தப் பிரச்னைக்கு ‘டெல்யூஷனல் டிஸ்ஆர்டர்’ (Delusional disorder) என்று பெயர். இது மனநலம் பாதித்ததன் ஆரம்ப அறிகுறி.
இதை கண்டுகொள்ளாமல் விட்டால் பிரச்னையானது வளர்ந்து வேலை, வருமானம், வணிகம், குடும்பம் என வாழ்க்கையின் ஆதாரத்தை பாதிக்கலாம். டாக்டர் உங்களுக்கு ஒன்றும் இல்லை என்று சொன்னாலும் ‘இந்த டாக்டர்தான் சரியில்லை’ என்று சொல்லி, நம்பிக்கை இல்லாமல் அடுத்த டாக்டரை பார்க்கப் போவார்கள். இப்படி தவறாக ஒரு விஷயத்தை புரிந்துகொண்டு அதை நம்புவது அல்லது அரைகுறையாக ஒரு விஷயத்தை தெரிந்துகொண்டு அதை உண்மை என்று நம்புவது எல்லாம் டெல்யூஷனல் டிஸ்ஆர்டரில் அடக்கம். இதில் பல வகைகள் உள்ளன. அதில் பாதிக்கப்பட்ட நபர் எந்த வகையில் இருக்கிறார் என்பதை வரையறுத்து அதற்குரிய சிகிச்சையை அளிக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு அதீதமாக யோசித்து பயப்படுபவர்களுக்கு ‘டீபெர்சனலைசேஷன்’ என்ற பிரச்னையும் வரலாம். தங்களைப் பற்றி சுய பச்சாதாபக் கவலைகள் இவர்களிடம் அதிகமாக இருக்கும். ‘எப்படி ஜம்முன்னு இருந்தேன்... இப்ப பாருங்களேன் இந்த நோயால் உடம்பு எவ்வளவு இளைச்சுப் போச்சு’ என்பார்கள். உண்மையில் அவர்கள் உடல்நலனில் எந்தப் பிரச்னையும் இருக்காது. சொன்னால் நம்ப மறுப்பார்கள். எதைப் பற்றியும் அதிகம் சந்தேகங்கள் கொள்வார்கள். அதிகம் கற்பனை செய்து பேசுவார்கள். இது கொஞ்சம் பிரச்னைக்குரிய நிலை. மனதில் எதுவும் பிரச்னை எனில் உடலிலும் பிரதிபலிக்க ஆரம்பிக்கும்.
சரியாக சாப்பிட மாட்டார்கள்... தூங்க மாட்டார்கள். எதையாவது, யாரையாவது குறைசொல்லிக் கொண்டே இருப்பார்கள். யார் மீதும் நம்பிக்கை இல்லாமல் ஒரு கட்டத்தில் வன்முறைச் செயல்களில் கூட ஈடுபடுவார்கள். இவ்வகை மனநல பிரச்னைகள் ஒரே நாளில் பூதாகரமாகி விடாது. படிப்படியாகத்தான் வளர்ந்து வந்திருக்கும். ஆரம்பநிலையிலேயே சரி செய்து கொள்வது நல்லது. மனதை கவலைப்படுத்தும் திரைப்படத்தை பார்க்கும்போதோ, கலவரப்படுத்தும் செய்திகளை படிக்கும்போதோ உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சில மணி நேரங்கள் அது பற்றிய நினைவுகள் இருக்கும். பின் அதிலிருந்து வெளியேறி வேறு வேலையில் கவனத்தை திருப்பிவிடுவோம் அல்லவா? அது போலத்தான் நோய்கள் பற்றி கேள்விப்படுகிற தகவல்களும். பயப்படத் தேவையே இல்லை!’’