நச்சுக்களை நீக்கும் விரதம்
நம்முடைய வாழ்க்கை முறை, உணவுப் பழக்கத்தால் உடலில் நச்சுக்கள் சேருகின்றன. இதைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் அகற்றும் பழக்கம் நம்முடைய பாரம்பரியத்தில் இருந்தது. இதனால்தான் வாரத்தில் ஒரு நாள் நோன்பு போன்றவை பின்பற்றப்பட்டன. தற்போது மாறிவிட்ட வாழ்வியல் முறையாலும், நேரமின்மை காரணத்தாலும் நச்சு நீக்கும் முறையை மறந்தேவிட்டனர். நவீன உலகில் அனைத்தும் ரசாயனக் கலவைகளாக மாறியுள்ளதால் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக்கொள்ள, உடலைத் தேவையான நேரத்தில் நச்சுநீக்கம் செய்தாகத்தான் வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது.
முன்பு, உடலைச் சுத்தம்செய்வது என்பது மூன்று நாள் தொடர்ந்து செய்யும் முறையாகப் பின்பற்றப்பட்டது. இன்றைய சூழ்நிலையில், மூன்று நாள் நச்சு அகற்றும் முறையெல்லாம் கடைப்பிடிக்க முடியாது என்பதால், எளிமையான முறையில் நச்சுக்களை நீக்கும் வழிகளை பற்றி விளக்குகிறார், சித்த மருத்துவர் சத்திய நாராயண மூர்த்தி.
டி டாக்ஸிஃபிகேஷனின் அவசியம்:
நிறையப் பொருட்களை பயன்படுத்தி சமைக்கிறோம். ஒன்றோடு ஒன்று முரண்படும் உணவுகளை சேர்த்துச் சமைக்கும்போது, அவை நம் உடலில் நஞ்சாகச் சேர தொடங்கும். மேலும், இன்றளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்து, விளைவிக்கப்படும் பொருட்களிலிருந்து வரும் நச்சுக்கள், உடலைப் பாதிக்கும். உடலில் அதிகஅளவு கழிவுகள் தேங்கும்போது, உடல் தன் இயல்புத்தன்மையை இழந்துவிடுகிறது. உடலின் ஆற்றலும் குறைந்துவிடும். இதனால், சீரான இயக்கங்கள் நடைபெறாமல் தடுக்கப்படலாம். இதைத் தடுப்பதற்கும், நச்சுக்களை வெளியேற்றுவதற்கும் நச்சு நீக்கும் முறை அவசியம்.
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாந்திக்கு மருந்து சாப்பிடுதல், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதிக்கு மருந்து எடுத்துக்கொள்ளுதல், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மூக்கில் மருந்து விட்டு அழுக்கை அகற்றுதல், மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண்களில் அஞ்சனமிடுதல் செய்ய வேண்டும் என்கிறது, நம்முடைய பாரம்பர்ய மருத்துவம். இப்படி செய்யும்போது, உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும், உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும், சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக வாழ உதவும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
விரதம் இருத்தல்:
வாரத்துக்கு அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை, ஒருநாள் முழுவதும் திரவ உணவை மட்டும் உண்டு, திட உணவைத் தவிர்க்கலாம். இதுபோல, அவரவரின் உடல்நிலையைப் பொறுத்து விரதம் இருக்கலாம். சர்க்கரை நோயாளிகள், விரதம் இருக்க முடியாதவர்கள் விரதம் இருக்க முயற்சிக்க வேண்டாம். அவசியம் எனில் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறலாம்.
ஒரே நாளில் நச்சுக்களை நீக்கும் முறை:
காலை 6-7 மணி அளவில் எலுமிச்சை டீ யுடன், இந்து உப்பு, மிளகு சேர்த்து மிடறு மிடறாக (Sip by sip) 15 நிமிடங்கள் வரை குடிக்க வேண்டும். காலை உணவாக, பழங்கள், காய்கறிகளை சாப்பிடலாம். மதியத்தில், கஞ்சி, காய்கறி உப்புமா போன்ற லைட்டான உணவுகளை சாப்பிடலாம். இரவில் பழங்களை (2 வாழை)சாப்பிடலாம். மறுநாள் காலை 7 மணி அளவில் நெல்லிச் சாற்றைக் குடித்து, விரதத்தை முடிக்கலாம்.
தற்போது நவீனமயமாகிவிட்ட இக்காலத்தில், நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்து, நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதனால் உடலில் பல பிரச்சனைகளை விரைவில் தொற்றிக் கொள்கின்றன. அப்படி உடலில் ஏதேனும் பிரச்சனை வந்தால், நாம் உடனே பெரிய டாக்டர் போன்று நமக்கு தெரிந்த மாத்திரையை வாங்கிப் போட்டு சரிசெய்து கொள்வோம். அது ஏதேனும் ஒன்று இரண்டிற்கு என்றால் பரவாயில்லை. எதற்கு எடுத்தாலும் மாத்திரை என்று மருத்துவர் பரிந்துரைக்காத மாத்திரைகளையே வாங்கி சாப்பிட்டு வந்தால், ஒரு கட்டத்தில் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாகக்கூடும். ஆகவே உடலில்
சிறு பிரச்சனை வந்தால், உடனே மாத்திரைகளைப் போடாமல், ஒருசில கை வைத்தியங்களை தெரிந்து கொண்டு, அவற்றைப் பின்பற்றினால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாமல் தடுக்கலாம். இங்கு அப்படி நமக்கு ஏற்படும் பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கான சில கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் கடுமையான வயிற்று வலிக்கு உள்ளாவார்கள். அப்படி வயிற்று வலி வந்தால், அப்போது 2-3 எலுமிச்சையை பிழிந்து, குளிர்ந்த நீரில் கலந்து, குடிக்க வேண்டும். அதிலும் இப்படி தினமும் குடித்து வந்தால், மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி ஏற்படுவதைத் தடுக்கலாம். உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருகிறதா? அப்படியெனில் ஆப்பிளின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி, அதில் சிறிது உப்பைத் தூவி, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். வாய்வுத் தொல்லையா? ஒரு டம்ளர் தண்ணீரில் 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து குடியுங்கள். வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். தொண்டைப் புண்ணிற்கு 2-3 துளசி இலையை நீரில் போட்டு குறைவான தீயில் கொதிக்க விட்டு, பின் அதனை லேசாக குளிர வைத்து, பின் வெதுவெதுப்பான நிலையில் வாயை கொப்பளிக்க வேண்டும். வாய் புண் இருந்தால், நன்கு கனிந்த வாழைப்பழத்தை தேன் தொட்டு உட்கொள்ள வேண்டும் அல்லது அவற்றை பேஸ்ட் செய்து பாதிப்பட்ட இடத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள், 1/2 கப் சுடுநீரில், ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால், சைனஸ் பிரச்சனை நீங்கும். உயர் இரத்த அழுத்தம் இருந்தால், பாலில் நெல்லிக்காய் சேர்த்து குடித்தால், இரத்த அழுத்தம் குறையும். அதிலும் இந்த முறையை அதிகாலையில் எழுந்ததும் செய்ய வேண்டும். 1 டேபிள் ஸ்பூன் தேனில், 1/2 டேபிள் ஸ்பூன் பட்டை பொடி சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் உட்கொண்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். பொடுகுத் தொல்லையா? சூடத்தை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வைத்து, பின் அதனை தினமும் இரவில் படுக்கும் முன், ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தேய்த்து ஊற வைக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், விரைவில் பொடுகுத் தொல்லை நீங்கும். உலர் நெல்லிக்காயை தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க விட்டு, பின் அந்த எண்ணெயைக் கொண்டு அன்றாடம் தலைக்கு தடவி வந்தால், இளநரை மறையும். கருவளையம் இருக்கிறதா? ஆரஞ்சுப் பழத்தின் சாற்றில் கிளிசரின் சேர்த்து கலந்து, அன்றாடம் இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவினால், கருவளையம் மறையும்.
புற்றுநோயை தடுக்கும் பூண்டுஸ
தினமும் பூண்டு சாப்பிட்டுவந்தால், எந்த நோயும் உடலைத் தாக்காது’ என்பது ஆயுர்வேத மருத்துவம் சொல்லும் அமிர்த வாக்கு.
தினமும் இரண்டு பூண்டுப் பல் சாப்பிட்டுவந்தால், உடலில் வளர்சிதை மாற்றம் சீராக நடக்கும். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு கரைந்து, உடல் எடை குறையும். ரத்தம் சுத்திகரிக்கப்படும். சிறுநீரகக் கற்கள் உருவாவது தடுக்கப்படும்.
மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும். இதனால், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.
புற்றுநோய்க்கான அபாயம் குறைவதுடன், புற்றுநோய்க் கட்டிகளை வளரவிடாமல் தடுக்கும்.
உடலில் தேவையற்ற வேதிப்பொருட்களான பாதரசம் மற்றும் காரீயம் போன்றவற்றை உடலைவிட்டு அகற்ற, பூண்டு உதவுகிறது.
புண்கள், காயங்கள் விரைவில் ஆறுவதற்கும், வாயுப் பிரச்னை வராமல் தடுப்பதற்கும் இது மருந்து.
தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு, அரை டம்ளர் பாலில் ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து, அதில் இரண்டு அல்லது மூன்று பூண்டுப் பல் சேர்த்து, நன்றாகக் காய்ச்சவும். அரை டம்ளராகச் சுண்டியதும், வெதுவெதுப்பான சூட்டில் அருந்தவும்.
இரண்டுப் பூண்டுப் பல்லை சிறிதளவு வெதுவெதுப்பான நீர் சேர்த்து அரைத்து, தோலில் ஏற்படும் எரிச்சல், சிறிய காயங்கள் மீது தடவிவர பலன் கிடைக்கும்.
பூண்டு நல்ல ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படும் தன்மைகொண்டது. தொடர்ந்து பூண்டு சாப்பிட்டுவந்தால், கெட்டக் கொழுப்பு கரைந்து, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறையும்.
வயிற்றுவலி மற்றும் குடல் பகுதியில் பிரச்னை உள்ளவர்கள், பூண்டுக் கஷாயம் சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
இரண்டு முதல் நான்கு பூண்டுப் பல்லைச் சுட்டு, தேனில் கலந்து சாப்பிட, காய்ச்சல், சளி, இருமல் குணமாகும்.
நெஞ்சு எரிச்சல், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பித்தம் உள்ளவர்கள், ஏதேனும் அறுவைசிகிச்சை செய்தவர்கள், மாரடைப்பு வந்தவர்கள் மருத்துவர் பரிந்துரையின்றிப் பூண்டினைப் பயன்படுத்த வேண்டாம்.
பூண்டுப் பல்லை வேகவைக்காமல் சாப்பிடுவது, நல்ல பலனைத் தரும். வாதம், கபம் உள்ளவர்களுக்குப் பூண்டு ஏற்றது.
ஒரு நாளைக்கு நான்கு பூண்டுப் பற்களுக்கு மேல் சாப்பிடக் கூடாது. அதிகம் சாப்பிட்டால், நெஞ்சு எரிச்சல் உண்டாகும்.
நலம் விரட்டும் நகம்
மனிதருக்கு இருக்கும் பழக்கங்களிலேயே, நகம் கடிக்கும் பழக்கம் மிகவும் மோசமான ஒன்று! காரணம், நகம் கடிக்கும் பழக்கம், பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்!
பொதுவாக, நகம் கடிப்பவர்களின் விரல் நுனிகள், மொட்டையானது போன்ற ஒருவித அருவருப்பான தோற்றத்தில் இருக்கும். மேலும், நகம் கடித்ததால், விரல் நுனிகளில் காயங்களும் இருக்கும். இந்த பழக்கத்தால், நகம் பாதிக்கப்படுவதோடு, நகத்தை சுற்றியுள்ள சருமமும் மிகவும் பாதிக்கப்படும். எப்போதும், வாயில் கையை வைத்தவாறு இருப்பதால், அப்பகுதியில் உள்ள சருமமானது நன்கு ஊறி, அங்கு தோல் உரிய ஆரம்பிக்கும். இதனால், அவ்விடத்தில் ரத்தக்கசிவு மற்றும் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பும் உண்டு!
இது ஒருபுறம் இருக்க, நகம் கடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், அந்த நகங்களை பல சமயங்களில் விழுங்கி விடுகின்றனர். இப்படி விழுங்கப்படும் நகங்கள், செரிக்கப்படாமல், வயிற்றில் அப்படியே தங்கி, செரிமான மண்டலத்தில் பெரும் பிரச்னையை உண்டாக்கும். மேலும், கண்ட கண்ட இடங்களில் கைகளை வைத்து விட்டு, ஏதேனும் யோசனையில் இருக்கும்போதோ, அல்லது பதற்றமாக இருக்கும் போதோ, அப்படியே விரலை வாயில் வைத்து நகம் கடிப்பது, பல்வேறு கிருமிகள் வயிற்றுக்குள் செல்வதற்கு வழிவகுக்கும்.
மேலும், பற்களால் நகங்களை கடிக்கும் போது, பற்களின், ‘எனாமல்’ பாதிக்கப்பட்டு, பற்கள் வலிமை இழக்கும். குழந்தைகளை பொறுத்தவரை, இளம்வயதில் இப்பழக்கம் இருந்தால், முன் பற்கள் தாறுமாறாக முளைக்கவும், தெற்றுப்பல்லாக மாறவும் வாய்ப்புண்டு. மொத்தத்தில், நகம் கடிக்கும் பழக்கம், உடல்நலத்திற்கு உகந்ததல்ல!