இளம் வயதினருக்கும் மார்பக புற்றுநோய் பாதிப்பு வருகிறது. ஆரம்பத்தில் கண்டறிந்தால், முற்றிலும் குணப்படுத்தலாம். 40 வயதுக்கு மேலான பெண்கள், ‘மேமோகிராம்’ செய்து கொள்வது அவசியம்; ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரும்’ என்கிறார் சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனை, புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் ஜெயக்குமார். அக்டோபர் மாதம், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இது தொடர்பான கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள்:
மார்பக புற்றுநோய் பாதிப்பு எந்த அளவில் உள்ளது; அக்டோபரில், பிரத்யேகமாக விழிப்புணர்வு மாதம் கொண்டாடுவது ஏன்?
உலக அளவில், பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில், மார்பக புற்றுநோய் முதல் இடத்தில் உள்ளது. உலகில் ஆண்டுதோறும், 1.4 கோடி பெண்களும், இந்தியாவில், 1.15 லட்சம் பெண்களும், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில், 73 லட்சம் பேரும், இந்திய அளவில், 53 ஆயிரம் பேரும், இதனால் இறக்கின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம். எனவே, அக்டோபர் மாதம், விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப் படுகிறது.
இது பாரம்பரிய நோயா? இதற்கான காரணம் என்ன?
வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், உணவு பழக்கம், உடல் பருமன் அதிகரிப்பு, மரபணு
மாற்றங்கள், குழந்தை பேறு இல்லாமை, 12 வயதுக்கு முன் மாதவிடாய் துவங்குதல், 54 வயதிற்கு பிறகும் மாதவிடாய் நீடிப்பது, கதிர்வீச்சுக்கு உட்படுதல் போன்றவற்றால், மார்பக புற்றுநோய் வருகிறது. குடும்பத்தில், முன்னோரில், ஏதேனும் ஒரு நபருக்கு, இந்த பாதிப்பு இருந்திருந்தால், சந்ததியினருக்கு, 20 சதவீதம் வர வாய்ப்புள்ளது.
எந்த வயதில் நோய் பாதிக்கும்? ஆண்களையும் பாதிக்குமா?
பொதுவாக, 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு வரும். தற்போது, இளம் வயது பெண்களுக்கு, 30 வயதிலும் வருகிறது. ஆண்களுக்கும், ஒரு சதவீதம் மார்பக புற்றுநோய் பாதிப்பு வருகிறது.
அறிகுறிகள் என்ன? வெளிப்படையாக தெரியுமா?
ஆரம்ப நிலையில், எந்த அறிகுறியையும் காட்டு வதில்லை. ஆனால், நோய் பரவ பரவ, மார்பகத்தின் தோற்றம் மாறுபடும்; தொடுதலின்போது வித்தியாசத்தை உணர முடியும். தாக்கம் அதிகரித்தால் மார்பகம், அக்குள்களில் வீக்கம் ஏற்படும். மார்பின் மேல் உள்ள தோலில் மாற்றங்கள் தெரியும்.மார்பக காம்புகளில் சாதாரண திரவம்; ரத்தத்துடன் கூடிய திரவம் கசிதல்; மார்பு காம்புகள் உட்புறமாக திரும்பிக் கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். முற்றிய நிலையில், முதுகு வலி, மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்படலாம்.
இதற்கான சிகிச்சை முறைகள் என்ன? முற்றிலும் குணப்படுத்த முடியுமா?
மார்பக புற்றுநோய் கட்டிகளை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம். கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. புற்று நோயை மருந்துகள் மூலம் குணப்படுத்தும் முறையே கீமோதெரபி எனப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின், 21 நாட்களுக்கு ஒருமுறை, ஆறு முதல் எட்டு தவணைகளில், கீமோதெரபி தரப்படும்.முற்றிய நிலை என்றால், மார்பகத்தை அகற்ற வேண்டிய நிலை வரலாம்; அகற்றினால், வேறொரு பகுதியில் இருந்து தசையை எடுத்து வைத்து, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மூலம், மார்பகத்தை உருவாக்க முடியும்.
மார்பக புற்றுநோய் பாதிப்பை ஆரம்பத்தில் கண்டறிந்தால், முற்றிலும் குணப்படுத்த முடியும். பாதிப்பில் நான்கு நிலைகள் உள்ளன. முதல் இரண்டு நிலைகளில், 95 சதவீதமும், மூன்றாம் நிலையில், 50 சதவீதமும் காப்பாற்ற முடியும். நான்காம் நிலையில் காப்பாற்றுவது கடினம்; 10 சதவீதம் பேரை குணப்படுத்த வாய்ப்புள்ளது.
கீமோ தெரபியால் பக்க விளைவுகள் அதிகம் என்கிறார்களே?
கீமோ தெரபி கொடுக்கும்போது, வாந்தி, முடி உதிர்தல், அசதி மற்றும் ரத்த அணுக்கள் குறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். வாந்தி, அசதி போன்றவை, ஓரிரு நாட்களில் சரியாகி விடும். கீமோ தெரபி சிகிச்சை முடிந்ததும், உதிர்ந்த முடிகள் தானாக வளர ஆரம்பித்து விடும்; முடியை விட உயிர் முக்கியம் என்பதை உணருங்கள்.
மார்பக சுய பரிசோதனை செய்வது அவசியமா? அதற்கான வழிமுறைகள் என்ன?
பொதுவாக, 20 வயதுக்கு மேலான பெண்கள், மாதம் ஒரு முறை, தங்கள் மார்பகங்களை தாங்களே, கையால் அழுத்திப் பார்த்து, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண்ணாடி முன் நின்று, இரண்டு மார்பகமும் தோற்றத்தில் ஒன்றாக உள்ளதா; ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா; சருமத்தில் மாற்றம் உள்ளதா; காம்பு பகுதி உள் இழுக்கப்பட்டுள்ளதா என, பார்க்க வேண்டும். ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், உடனே, டாக்டரிடம் செல்வது முக்கியம்.
‘மேமோகிராம்’ என்றால் என்ன?; நவீன சிகிச்சை முறையா?
மார்பகத்தை, ‘எக்ஸ் – ரே’, ‘ஸ்கேன்’ மூலம் பரிசோதிப்பதே, ‘மேமோகிராம்’ எனப்படுகிறது. அறிகுறிகள் ஏதும் தெரியாத நிலையில், இப்பரிசோதனையில், மார்பக புற்றுநோய் பாதிப்பை கண்டறிய முடியும். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஆண்டுக்கு ஒருமுறை, இந்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
ஆண்டுதோறும், டாக்டர்களின் ஆலோசனைப்படி, உடல் நல பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்த உறவுகளில் யாருக்கும் மார்பக புற்று நோய் இருந்தால், தொடர் பரிசோதனை அவசியம். குடும்பத்தில், பலருக்கு புற்றுநோய் இருந்தால், ஒட்டு மொத்த குடும்ப நபர்களும், டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும். கொழுப்பு சத்துள்ள உணவைத் தவிர்ப்பதோடு, உடல் பருமனையும் குறைக்க வேண்டும். காய்கறி, பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். மன அழுத்தத்தில் சிக்கி விடக் கூடாது. தியானம், எளிய உடற்பயிற்சிகள்
செய்வதால், பாதிப்பு வராமல் தப்ப முடியும்.
டி.ஜெயக்குமார்,
புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்,