‘மொபைல் போனில் நீண்ட நேரம் பேசுவது; நெருங்கிய உறவில் திருமணம் செய்வது; இஷ்டம் போல் காதை சுத்தம் செய்வது போன்றவற்றால் கேட்கும் திறன் குறையும். கவனமாக இருங்கஸ’ என்கிறார், சென்னை, அரசு பொது மருத்துவமனை, காது, மூக்கு, தொண்டை பிரிவு இயக்குனர் கணநாதன்.
இந்தியாவில், 6.3 சதவீதம் பேருக்கும், தமிழகத்தில், 16.55 சதவீதத்தினருக்கும் கேட்கும் திறன் பாதிப்பு உள்ளது. கடந்த, 2000ல், ஆயிரம் குழந்தைகளுக்கு, ஒருவர் என்றிருந்த பாதிப்பு, தற்போது, 1000:6 என்றளவில் உயர்ந்துள்ளது.
செப்., 29ல், உலக காது கேளாதோர் தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், பாதிப்புக்கு என்ன காரணம் என்ற கேள்விகளுக்கு, டாக்டர்
கணநாதன் அளித்த பதில்கள்:
1. காது கேளாமை பிரச்னை ஏன் வருகிறது; பிறவியிலும் பாதிப்பு உள்ளதே?
தாயின் மூன்று மாத கர்ப்ப காலத்திலேயே, குழந்தையின் காது நன்கு வளர்ந்து விடும். மூளை காய்ச்சல், டைபாய்டு பாதிக்கும் போது, சாப்பிடும் மாத்திரைகளாலும் பிறவியில் கேட்கும் திறன் குன்றி விடுகிறது. இதனால், தாய்மார்கள் கர்ப்பமான முதல் மூன்று மாத காலத்தில், காதை பாதிக்கும் வகையிலான மருந்து, மாத்திைரகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. காதுகளில் கிருமி தொற்று, மருந்து, மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவு, விபத்து, அதிக சத்தம் மற்றும் பரம்பரை பாதிப்பாகவும், கேட்கும் திறன் குறையும்; வாழ்க்கை முறை மாற்றமும் முக்கிய காரணம்.
2. பிறவி பாதிப்பை எப்படி கண்டறிவது? ‘காக்ளியர் இன் பிளான்ட்’ என்றால் என்ன?
பிறந்த குழந்தை அடிக்கடி அழும். அதுபோன்று அழாமல் இருப்பது; சத்தம் கேட்டால் திரும்பிப் பார்க்காமல் இருப்பது; பேச்சு, கதைகளில் ஆர்வம் காட்டாமல் இருப்பது போன்றவை, பிறவி குறைபாடுகள். காது, மூக்கு, தொண்டை டாக்டரிடம் காண்பித்து, ஆலோசிக்க வேண்டும். ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்தலாம்.பிறவி பிரச்னைக்கு தீர்வு காண, செய்யப்படும் சிகிச்சையே, ‘காக்ளியர் இன் பிளான்ட்’ அறுவை சிகிச்சை.
3. ‘காக்ளியர் இன் பிளாண்ட்’ சிகிச்சைக்கு அதிக பணம் செலவாகும் என்கிறார்களே?
காதின் உள் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து, கேட்கும் கருவியை பொருத்தும் சிகிச்சை இது. எட்டு லட்சம் ரூபாய் செலவாகும். முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்படுகிறது. இந்த சிகிச்சையை, பிறந்த ஒன்பது மாதங்களில் செய்யலாம்.
இந்த அறுவை சிகிச்சையால் மட்டும், கேட்கும் திறன் வந்து விடாது; ஓராண்டுக்கு தொடர் பயிற்சி பெறுவது அவசியம். நீண்ட காலம் காது கேட்காவிட்டால், கேட்கும் திறன் சார்ந்த மூளையின் பகுதி கேட்கும் திறனை இழந்து விடும். இரண்டு வயதுக்குள் செய்வது நல்லது. ஆறு வயதுக்கு மேல், ‘சக்சஸ்’ அளவு குறைந்து விடுகிறது.
4. காய்ச்சல் வந்தால் சிலருக்கு கேட்கும் திறன் போய் விடுகிறதே; காதுக்கும், பேச்சுக்கும் தொடர்பு உண்டா?
மூளைக்காய்ச்சல், டைபாய்டு நோய் பாதிப்புகள் வந்தால், சிலருக்கு கேட்கும் திறன்; பேச்சுத்திறனை பாதிக்கும். டாக்டரின் ஆலோசனை பெற்று, சிகிச்சை, பயிற்சிகள் அளித்தால் ஓரளவு மேம்படும். நெருங்கிய உறவில் திருமணம் செய்வோருக்கும், குழந்தைகள் கேட்கும் திறன் வாய்ப்புள்ளது. பரம்பரையாக, 30 சதவீத பாதிப்பு வரலாம். கேட்கும் திறன் இருந்தால் தான், குழந்தைகள் பேச்சுத்திறன் மேம்படும். காது கேட்கவில்லை என்றால், பேச்சுத்திறன் குறையும் என்பதால், கவனமாக இருங்கள். கேட்கும் திறன் குறைந்தால், காது கேட்கும்
கருவி பயன்பாட்டால் கேட்கும் திறனை மேம்படுத்த வேண்டும்.
5. இரு காதுகளின் அவசியம் என்ன?; ‘சீழ்’ வடிதல் ஆபத்தின் அறிகுறியா?
ஒரு காது இருந்தால், 95 சதவீதம் கேட்கலாம்; இரு காதுகள் இருந்தால் தான், 100 சதவீதம் கேட்க முடியும். நேராக நடக்க, உடலை இயல்பு நிலையில் செலுத்த இரு காதுகள் அவசியம். இசையைக் கேட்டல், ஒரே இடத்தில் நான்கு, ஐந்து பேர் பேசும்போது, குறிப்பிட்ட ஒருவரின் பேச்சை கவனிப்பதற்கு இரு காதுகளும் அவசியம். காதில் ஜவ்வு பாதிப்பு, சீழ் வடிதல் போன்றவற்றால், மூக்கு, காதுக்கு இடையே உள்ள துவாரம் அடைத்து விடும். இந்த இயல்பு நிலை பாதிப்பை மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்தலாம். ஜவ்வு பகுதியில் பாதித்து, கட்டியாக வளர்ந்து, எலும்பை அரிக்கும் நிலை இரண்டாம் நிலை. இதற்கு அறுவை சிகிச்சையே தீர்வு.
6. பரம்பரை பாதிப்பை தடுக்க என்ன வழி? இடைப்பட்ட வயதிலும் பாதிப்பு வருகிறதே?
பொதுவாக, 30 சதவீதம் பேருக்கு பரம்பரையாக காது கேளாமை பாதிப்பு வரலாம். 18, 20 வயதுக்குப்பின், கொஞ்சம் கொஞ்சமாக கேட்கும் திறன் இழந்து, 40 வயது வரை நீடிக்கும். காது எலும்பு கெட்டியாகி, அசைவு இன்றி போவதால் கேட்கும் திறன் குறைகிறது. ஒரு காதில் பாதிப்பு, அடுத்த காதையும் பாதிக்க வாய்ப்பு உள்ளது. இதை, 30 சதவீதமே குணப்படுத்த முடியும். இதுபோன்ற பாதிப்பு பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் அதிகம் ஏற்படும். அறுவை சிகிச்சை மூலமாக குணப்படுத்தலாம்.
7. காதுகளை அடிக்கடி சுத்தம் செய்யாவிட்டால், கேட்கும் திறன் குறையும் என்பது உண்மையா?
காதுகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்பது தவறு. காதுகளில் சேரும் அழுக்கு, தானாக வந்துவிடும். நாம் திட உணவுகளை நன்கு மென்று சாப்பிடும் போது வெளியேறும். சுத்தம் செய்கிறேன் என, ‘பட்ஸ்’, இறகு, பேப்பரை சுருட்டியும், கூரான பொருட்கள் கொண்டு, குடைந்து சுத்தம் செய்கின்றனர்; எண்ணெய், மருந்துகளை ஊற்றுகின்றனர். இது கூடாது. காதின் தோலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம். அதில் ஏற்படும் பாதிப்புகள், கிருமித் தொற்றை ஏற்படுத்தி விடும்; காதுகளில் பூஞ்சை காளான் வளர்ச்சிக்கும் இதுவே காரணம்.
8. பொதுவான அறிவுரைகள் என்ன?
இது, தீபாவளி நேரம்; பட்டாசு சத்தம் இப்போதே கேட்கிறது. அதிக சத்தம் உள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்; பட்டாசு வெடிக்கும் இடத்திற்கு போக வேண்டாம். அதிக சத்தம் கேட்கும் திறனை பாதிக்கும். அதிக சத்தமான தொழிற்சாலைகளுக்கு செல்லும்போது, சத்தத்தின் அளவைக் குறைக்கும் கருவிகள் பயன்படுத்துவது நல்லது. ‘வாக்மேன்’ல், அதிக சத்தத்தில் பாட்டு கேட்பது; மியூசிக் பார்ட்டிகளில் அதிகம் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். இயற்கை வைட்டமின் நிறைந்த, பச்சைக் காய்கறிகள், சாலட்ஸ் சாப்பிடுவது நல்லது. வயது ஆக ஆக கேட்கும் திறன் குறைவது தவிர்க்க முடியாதது.
9. மொபைல் போனில், ‘கடலை’ போடுவது ஆபத்தா?
மொபைல் போனில் நீண்ட நேரம் பேசினால் கேட்கும் திறன் குறையும். நாளடைவில் காதுகளுக்குள் இறைச்சல் வரும்; வலி வரும்; படிப்படியாக கேட்கும் திறன் குறையும். மொபைல் போனில், நீண்ட நேரம், கடலை போடுவது இப்போது குஷியாக இருக்கலாம்; எதிர்காலத்தில் கேட்கும் திறனை பாதிக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்.
டாக்டர் ஜி.கணநாதன்