இன்று பெரும்பாலான பெண்கள், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரின் அப்பாயிண்ட்மென்ட்டுக்கு காத்திருக்கின்றனர். காரணம், பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னைதான். மாறிவரும் வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்கம் காரணமாக ஹார்மோன் சுரப்பில் பிரச்னை ஏற்படுவதால், பி.சி.ஓ.சி. ஏற்படுகிறது. இதனால் ஒழுங்கற்ற அல்லது நீண்ட மாதவிலக்கு, அதிகப்படியான முடி வளர்ச்சி, முகப்பரு, உடல்பருமன் போன்றவை ஏற்படுகின்றன.
பொதுவான அறிகுறிகள்
சோர்வு
மனப்பதற்றம்
தூக்கமின்மை
குழப்பமான மனநிலை
மன அழுத்தம்
கண்ணால் பார்க்கக்கூடிய அறிகுறிகள்
உடல் எடை அதிகரிப்பு
முகத்தில் ரோம வளர்ச்சி
முகப்பரு
வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்தல்
முகத்தில் கரும்புள்ளி
மார்பகங்கள் குழாய்போல் சுருங்குதல்
சருமத்தில் மருக்கள்
உடலுக்குள் ஏற்படும் அறிகுறிகள்
ஓவரியில் கட்டிகள்
இன்சுலின் செயல்திறன் பாதிப்பு
குழந்தையின்மை
ஒழுங்கற்ற மாதவிலக்கு
ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பு
காரணங்கள்
உடலில் ஆன்ட்ரோஜென் என்ற ஆண்தன்மை ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதால் சினைப்பையில் நீர்கட்டிகள் ஏற்படுகின்றன. சினைப்பையில் மிகக் குறைந்த அளவில் ஆன்ட்ரோஜென் சுரக்கிறது. இதன் அளவு அதிகரிக்கும்போது சினைப்பையில் முட்டை உருவாதல் பாதிக்கப்பட்டு, சீரற்ற மாதவிலக்கு ஏற்படுகிறது. உடலில் அதிகப்படியான இன்சுலின் சுரத்தலும்கூட ஆன்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டுகிறது. தவிர, மரபியல் ரீதியாக அம்மாவுக்கு இருந்தால்கூட பெண்ணுக்கும் பி.சி.ஓ.எஸ். ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. சிகிச்சை எடுத்துக்கொள்ள தவறும்போது சினைப்பை அல்லது கர்ப்பபை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
தடுக்க
உணவு, உடல் உழைப்பின் அளவைச் சீராக்குவதன் மூலம் இந்தப் பிரச்னையில் இருந்து தப்பலாம்.
உடல் எடை
இன்சுலின் செயல்திறன் பாதிக்கப்படுவதற்கு உடல் பருமன் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிப்பதன் மூலம் இன்சுலின் மற்றும் ஆன்ட்ரோஜென் அதிக அளவில் சுரப்பதைக் கட்டுப்படுத்தலாம். ஒரு நாளைக்கு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
உணவுப் பழக்கம்
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். எனவே, உணவில் கார்போஹைட்ரேட் சத்து அதிக அளவில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக மொத்தமாக கார்போஹைட்ரேட்டைத் தவிர்த்துவிட வேண்டாம். அதற்குப் பதிலாக காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். அதிக அளவில் நார்ச்சத்துள்ள உணவை எடுத்துக்கொள்வதால், செரிமானத்தைத் தாமதப்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவு விரைவாக அதிகரிப்பது தடுக்கப்படும்.
துடிப்பான வாழ்க்கைமுறை
உடற்பயிற்சி செய்வது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். பி.சி.ஓ.எஸ். பிரச்னை இருப்பவர்கள் தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யவேண்டும். இது இன்சுலின் அதிக அளவில் சுரந்து ஆன்ட்ரோஜென் அதிக அளவில் உற்பத்தியாவதைத் தடுப்பதுடன், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.