தலைவலி பிரச்னையா? கவனங்க!
டாக்டர் எம்.அன்ரன் ராஜி,
தூக்கத்தை தொலைப்பது தான், தலைவலி வர முக்கிய காரணம். வைரஸ் காய்ச்சலின் முன்னோட்டமாகவும், தலைவலி வரும். வலி நிவாரண மாத்திரைகளை, டாக்டரின் ஆலோசனைஇன்றி சாப்பிட்டு, நோயின் தாக்கத்தை முற்ற விடுவது, மன நோயாகவும் மாற வாய்ப்புள்ளது
1. தலைவலி ஏன் வருகிறது?
நீண்ட நாள் தலைவலி, குறுகிய கால தலைவலி என, இரண்டு வகைகள் உண்டு. நெற்றியின் இரண்டு பக்கத்திலும், காற்று சிற்றலைகள் உள்ளன. குளிர் தாக்குதலால், இவற்றின் உள்பக்க ஜவ்வு, வீக்கம் அடைந்து, மூக்கு சிற்றலை ஜவ்வில், சைனஸ் அலர்ஜியை ஏற்படுத்துவதால், தலைவலி ஏற்படுகிறது. காது, மூக்கு, தொண்டை நிபுணர் அறிவுரையின்படி, 5 நாட்கள் மாத்திரை உட்கொண்டால், சீராகி விடும்.
2. கண் பார்வை குறைபாடும் ஒரு காரணமா?
மூக்கின் நடுச்சுவர் வளைவு, ஜவ்வு வீக்கம் இருந்தாலும், அடிக்கடி தலைவலி வரும். இதை, அறுவைச் சிகிச்சை மூலமே, சரி செய்ய முடியும். கண் பார்வை குறைபாடு உள்ளோருக்கும், பின்பக்க தலைவலி வரும். கண்ணில் நீர் அழுத்தம் அதிகமானால், தலைவலி வரும்.
3. ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது?
தலையின் ஒரு பக்கத்தில் ஒற்றைத் தலைவலி வரும். நீண்டநேரம் இருக்கும். வாந்தி வந்தால் குறைந்துவிடும். சில பேருக்கு, ஆண்டுக்கணக்கில் பாதிப்பு வரும். வலி நிவாரணிகளை, டாக்டரின் ஆலோசனை இன்றி சாப்பிடுவதால், மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், ஒற்றைத் தலைவலி வரலாம். நரம்பியல் நிபுணர்களை பார்த்து, சிகிச்சை எடுப்பது அவசியம்.
4. தலைவலி வந்தால் நடக்கும்போது தள்ளாட்டம் வருமா?
இரவில் அதிகம் கண் விழிப் போர், நீண்ட நேரம் புத்தகம் படிப்போர், இரவு ஷிப்டில் தொடர்ந்து வேலை செய்வோர், ‘வெப்சைட்’டில் மூழ்கி கிடப்போர், ‘டிவி’யை நீண்ட நேரம் பார்ப்போருக்கும் தலைவலி வர வாய்ப்பு உள்ளது. தூக்கத்தை தொலைப்பது தான், இதற்கு முக்கிய காரணம். சிலருக்கு முன்பக்க தலை வலிக்கும். நடக்கும்போது தள்ளாட்டம் வரும்; மயக்கம் வரும். இத்தகைய பாதிப்புஉடையோர் நல்ல மனநல நிபுணரை சந்திப்பது நல்லது.
5. விட்டு விட்டு தலைவலி வருவது ஏன்?
தாழ்வான கட்டடங்களுக்கு குனிந்து செல்லும்போதோ, கிரிக்கெட் விளையாட்டாலோ, எதிர்பாராத விதமாக தலையில் அடிபட்டு கவனிக்காமல் விட்டால், உள் காயங்கள் ஏற்படலாம். இவர்களுக்கு, விட்டு விட்டு தலைவலி வரும். தலையில், எக்ஸ்-ரே, ‘ஸ்கேன்’ எடுத்து, பாதிப்பின் காரணம் அறிந்து, சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
6. தீராத தலைவலி, புற்றுநோயின் அறிகுறியா?
இடைவிடாத தலைவலி உள்ளோர், தூக்கத்தில் அடிக்கடி எழுந்து உட்கார்ந்து கொள்வோருக்கு, மூளையில் நீர் கட்டி, புற்றுநோய் கட்டி உருவாக வாய்ப்புள்ளது. இதற்கு, நீண்ட கால சிகிச்சை பெற வேண்டிய நிலை வரும். அதற்காக தலைவலி வருவோருக் கெல்லாம், புற்றுநோயாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
7. தலைவலிக்கும், உணவில் சேர்க்கும் உப்புக்கும் தொடர்பு உண்டா?
பெரும்பாலான வைரஸ் காய்ச்சல் களுக்கு, தலைவலி, ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். காரணம் கண்டறிந்து, உரிய முறையில் சிகிச்சை பெறுவது நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு, சர்க்கரை அளவு குறைந்தாலும், உப்பின் அளவு கூடி அல்லது குறைந்தாலும், அளவுக்கு அதிகமாக தலைவலி வர வாய்ப்புண்டு.
8. மன அழுத்தம் தலைவலிக்கு காரணமா?
தலைவலி என, கடைகளில் இஷ்டம்போல் வலி நிவாரண மாத்திரை வாங்கிப் போட்டு, நோயின் தாக்கத்தை முற்ற விடக்கூடாது. அப்படி செய்தால், மனநோயாக மாற வாய்ப்புள்ளது. தொழில் வர்த்தகர்கள், பணிகளை இழுத்துப் போட்டுச் செய்வோர், வங்கி அதிகாரிகளுக்கும் தலைவலி வர வாய்ப்புள்ளது. மன அழுத்தத்தாலும் பாதிப்பு வரலாம். வேலையை கண்டபடி இழுத்துப்போட்டு செய்யாமல், பணிகளை முறைப்படுத்தி செய்வதும், இடை இடையே ஓய்வு எடுப்பதும் நல்லது.
9. சரியான நேரத்தில் உணவு கட்டாயம் என்கிறீர்களே?
சாப்பிடாமல் பட்டினி கிடப்போர், உரிய நேரத்திற்கு சாப்பிடாமல் ஒரு வேளை மட்டும் சாப்பிடுவோர், முறையாக உணவு பழக்கம் இல்லாதோருக்கும், தலைவலி வரும். சரியான உணவு பழக்கம் அவசியம். இந்தியாவில், பெரும்பாலும் தலைவலியால் பாதிக்கப்படுவதற்கு, ரத்தக் கொதிப்பு காரணமாக உள்ளது. இதற்காக, ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பெரிய மருத்துவமனைகளில், தலைவலிக்கென பிரத்யேக பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன.
மொத்தத்தில், சரியான நேரத்தில் உணவு, சரியான தூக்கம், மன அழுத்தத்தால் பாதிக்காத வகையில் திட்டமிட்டு பணியாற்றுதல் ஆகியவற்றால், தலைவலி பாதிப்பில் இருந்து தப்பலாம்.
டாக்டர் எம்.அன்ரன் ராஜி,