மூத்த குடிமக்களே! -ஆபத்தான வியாதிகள்
மனிதனுக்கு குழந்தை பருவம், சிறுவர் பருவம், வாலிப பருவம், நடுவயது பருவம் (40 -59), முதியவர் பருவம் 60 வயதுக்கு மேல் என்று பிரிக்கலாம். ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்றாற் போல வியாதிகள் பல வருவதுண்டு. உதாரணமாக நாற்பது, ஐம்பது வரை உயிருக்கு ஆபத்தான வியாதிகள் வருவதில்லை. வியாதிகள் வருவதெல்லாம் 60 வயதுக்குமேல். முதியவர்களுக்கு வரும் வியாதிகள், பல உள்ளன. இந்த வியாதிகளோடு தான் அவர்கள் வாழ வேண்டிய நிலை, இந்த வியாதிகளை கண்காணித்து வாழ வேண்டிய சூழ்நிலை.
உடலிலுள்ள உறுப்புகள், முடி நரைத்தல், தோல் சுருங்குதல் தோலிலுள்ள நீர் குறைந்து உலர்ந்து அரிப்பு, ஒவ்வாமை என்ற அலர்ஜி, கண்பார்வை மங்குதல், கேட்ராக்ட். சிலருக்கு ஆஸ்துமாவினால் கார்புல்மினேல் (corpulminale) சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு இவைகளால் சிறுநீரக கோளாறு, சர்க்கரை நோயால் ஏற்படும் இதய நோய்கள், ரத்தக் கொதிப்பால் ஏற்படும் இதய நோய்கள். மூத்த குடிமக்களுக்கே உரித்தான மூட்டு தேய்மான நோய்கள், ஆர்த்தரைட்டீஸ், எலும்பிலுள்ள சுண்ணாம்பு சத்து குறைந்து ஆஸ்டியோ பொராசிஸ் என்ற வியாதிகள். இதனால் எலும்பு முறிவுகள் அதிகமாகிறது.
இரண்டு வியாதியாவது: மூத்த குடிமக்கள், இந்த வியாதிகளில் ஏதாவது இரண்டு மூன்று வியாதிகள் இல்லாமல் வாழ்வு இல்லை. அப்படி கூறினால், நீங்கள் நம்பாதீர்கள். எம்.பி.பி.எஸ்., எம்.டி., (பொது மருத்துவம்), டி.எம்., (இதய நோய்) முதலிய உயர் பட்டப்படிப்பு படித்த காலத்திலும் உதவி பேராசிரியர், பேராசிரியர் என்ற பதவி வகித்த காலத்திலும், மேல் நாட்டில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த காலத்திலும், இந்த வியாதிகள் முதியோரைத் தாக்கியதைப் பார்த்து, வைத்தியம் பார்த்துள்ளேன். ஆனால், இன்றோ பல அரிய டையக்னாஸ்டிக் கருவிகள், மருந்துகள், அறுவை சிகிச்சைகள் வந்துள்ளன. இதனால், எவ்வளவு முதியோர் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ள முன் காலத்தை போல கைத்தடிகள் இல்லாமல், மூட்டு மாற்று சிகிச்சை மூலம் நடந்து படியேறிப் போகின்றனர். இதற்கு என்ன விலை கொடுக்க வேண்டும்?
மூட்டு மாற்று சிகிச்சையால், சில லட்சங்கள் செலவாகிறது. முதியோர் கீழே விழுந்து எலும்பு ஒடிந்தால் பிளேட் வைத்து அறுவைச் சிகிச்சைக்கு எவ்வளவு செலவு, இதற்கு ஆகும் மாத்திரை மருந்துகள் செலவு, வாழ்நாள் முழுவதும் செலவு என்பது தெரியுமா?
முப்பது வயதினரும்: இன்று சர்க்கரை நோய் என்ற டயபட்டீஸ் நோய் 30, 40, 50 வயதுள்ளவர்களுக்கு வந்து மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். 60 வயதுக்கு மேல் இந்த வியாதி பல விளைவுகளை தாக்கி விடுகின்றது. இந்த சர்க்கரை வியாதியை மைக்ரோ வாஸ்குலர் என்ற சிறு கண்ணுக்கு தெரியாத வியாதிகளை தாக்கி விடுகின்றது. இந்த நோய் ரத்தக்குழாயின் என்டேதிலியம் என்ற உட்சுவரினை பாதித்து அடைத்து விடுகிறது. சிறிய ரத்தக்குழாய் அடைப்பால் விளைவு பெரிது. நோயாளிகள் எந்த குறையும் கூறமாட்டார்கள்.
சாதாரணமாக பொது பரிசோதனைக்கு போகும் போது, கண்டுபிடிப்பர். அதற்குள் கண்புரை, ரெட்டினா வியாதி, இதய சர்க்கரை நோய்கள், சிறுநீரக கோளாறுகளான கிட்னி பெய்லியர் என்று பலவாகிறது. சர்க்கரை நோயால்,சிறு ரத்தக் குழாய்கள் பாதிப்பால், கால்களில் ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டு கால் விரல் கள் அழுகி விடுகின் றன. இதனால், சில நேரங்களில் கால் களை, விரல்களை எடுக்க வேண்டிய நிலை. இதனால், மூத்த குடிமக்கள் வாழும் துயரம் மிகுந்த வாழ்க்கைக்கு தினம், தினம் ஆகும் செலவு.
எட்டு ஆண்டுகளுக்கு முன்: சென்னையை சேர்ந்த செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்த 62 வயதான அம்மையார், என்னிடம் ரத்த அழுத்தத்திற்கு வைத்தியம் பார்க்க வந்தார். வந்தவருக்கு சர்க்கரை நோய், அதே நேரத்தில் சிறுநீரக கோளாறும் கண்டுப்பிடிக்கப்பட்டு, யூரியா 48 மில்லி கிராம் கிரியாட்டின், 1.8 மி.கி., என்று அறியப்பட்டது. மூன்று மாதம் ஒருமுறை பரிசோதனைக்கும் ஆலோசனைக்கும் வருவார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் கிரியாட்டின் 2 மி.கி., ஆகிறது. இதை அப்படியே கிரியாட்டின் 2.5 மி.கி., மேல் ஆகாமல், பத்து ஆண்டுகள் வைத்தியம் பார்த்தேன். பத்து ஆண்டுகள் கழித்து கிரியாட்டின் 3 மி.கி., ஆயிற்று பிறகு 4 மி.கி., ஆகியது.
இப்படி சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்து, டயாலிசிஸ் செய்ய வேண்டியதாயிற்று. இதற்கிடையில், பல தடவை மூச்சிரைப்பு, படபடப்பென்று உயர் ரத்த அழுத்தம் இவைகளுக்கு மருத்துவமனையில் அனுமதித்து வைத்தியம் பார்க்க வேண்டியதாயிற்று. ஒவ்வொரு தடவை மருத்துவமனை அனுமதி வைத்தியத்திற்கு பல ஆயிரம் செலவு. வீட்டிலிருந்து வைத்தியத்தால் மருந்துக்கும், ஊசிக்கும் என்று மாதம் சில ஆயிரம். 75 வயதான அந்த பெண்ணுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய முடிவானது.
அப்போது டாக்டர் இதய நோய்க்கு முதலில் சிகிச்சைப் பெற்று பைபாஸ் செய்து, தகுதி சர்ட்டிபிகேட் கேட்டனர். பழுதடைந்த சிறுநீரகத்தை சரி செய்து அதாவது முதலில் சிறுநீரகத்தை மாற்றிய பிறகு பைபாஸ் செய்யலாம் என்று கூறி, நோயாளி வாரம் இருமுறை டயாலிசிஸ் செய்து பிறகு தினம் என்று மாறி இறுதியில் நோயாளி மரணமடைந்தார்.
எப்படி செலவு செய்ய முடியும்? மாற்று சிறுநீரகம் பொருத்திய பிறகு அந்த சிறுநீரகம் பழுதடையாமல் காக்க மருந்தும், முன்கூட்டியே உடம்பிலுள்ள ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், மற்றும் பரிசோதனை செலவு என்று மாதம் பல ஆயிரம் செலவாகிறது. வருடத்திற்கு லட்சங்களை தாண்டும் வருமானமில்லாத வயதான மூத்த குடிமக்கள் காலத்தில் எப்படி பணம் செலவு செய்ய முடியும்?
உயர் ரத்த அழுத்தம் உள்ள மூத்த குடிமக்களுக்கு ரத்த அழுத்தத்தால் ஏற்படும் டி.ஐ.ஏ., (TIA) என்ற உடலில் ஒரு பாதி வலுவையிழந்து தற்காலிகமாக ஸ்டிரோக் ஏற்பட்டு மருத்துவமனை மருத்துவம், எம்.ஆர்.ஐ., (MRI) போன்ற உயர் பரிசோதனைகள். அதன் பிறகு மருந்து, மாத்திரை செலவுகள்.
இருபது ஆண்டுகளுக்கு முன், நான் கோவை மருத்துவக் கல்லூரியில் இதய நோய் பேராசிரியராக இருந்த போது, இராம கிருஷ்ண வித்யாலயத்தில் இலவச மருத்துவ கேம்ப் நடத்திய போது, அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற முதியவர், எனக்கு இதயத்தில் பேஸ்மேக்கர் வைக்கப் பட்டுள்ளது. நான் ஓய்வுப் பெற்ற பின் (பென்ஷன்) பெற்ற பணத்தையெல்லாம் செலவு செய்துவிட்டேன். இப்போது மருந்து வாங்க பணமில்லை. எப்படி நான் ஓய்வூதியத்தில் சாப்பிடுவதா? மருந்துக்கு செலவு செய்வதா? என்று புலம்பினார். இதுபோல எத்தனைப் பேர்?
சில ஆண்டுகளுக்கு முன், மூத்த பெண்மணிக்கு இதய நோய்க்கு டாக்டர் ஆஞ்சியோ கிராம் செய்து, ஐந்து அடைப்புள்ளது, மூன்று அல்லது நான்கு அடைப்பை ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து ஸ்டென்ட் வைக்கலாம் என்று நான்கு லட்சங்கள் செலவில் ஸ்டென்ட்களை வைத்து சிகிச்சை செய்து விட்டார். இதற்கு அவர் சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் செலவு செய்துவிட்டார். பிறகு இரண்டு மாதங்களில் நோயாளிக்கு மீண்டும் நெஞ்சுவலி, மூச்சிரைப்பு வந்துவிட்டது. முன் சிகிச்சை அளித்த டாக்டர், “அடைப்பு எப்படியுள்ளது, ஸ்டென்ட் வேலை செய்கிறதா’ என்று பார்ப்போம் என்று கூறினார். அதற்கு நோயாளியின் கணவர் ஒத்துக் கொண்டார்.
மறு ஆஞ்சியோ கிராம் செய்ததில் இரண்டு ஸ்டென்ட்கள் மூடிவிட்டது தெரிந்தது. இதனால், உடனடியாக பைபாஸ் செய்ய வேண்டுமென்று கூறிவிட்டார். கையில் பணமில்லை, கடன் வாங்கியாவது தனது மனைவிக்கு பைபாஸ் செய்துவிட வேண்டுமென்று, வீட்டின் மேல் கடன் வாங்கி பைபாஸ் செய்துவிட்டார் கணவர். பிறகு ஆறு மாதங்கள் கழித்து நோயாளிக்கு அந்த பைபாஸ் கிராப்ட்டும் மூடிவிட்டது. இவ்வளவு செய்து கடன்பட்டு, மூலதனத்தையெல்லாம் இழந்த விரக்தியில், அவரும் நோயாளியும் தற்கொலை செய்து கொண்டுவிட்டனர். இதற்கு காரணம் யார்?
நவம்பர், டிசம்பர் (மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள்) காலங்களில் ஏற்படும் குளிர், மழையால் மூத்த குடிமக்கள் அடிக்கடி இருமல் சளி போன்ற தொந்தரவுக்கு ஆளாவர். இவர்களுக்கு முன்பே இருந்த மவுனமான இதய நோயான ஸ்மிக் இதயம் சில நேரங்களில் இதய நோய் பெய்லியர் ஆகிவிடும். ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் குறைந்துவிடும். இதனாலும் மூச்சிரைப்பு அதிகமாகி, இது 90 சதவீதத்திற்குள் குறைந்தால் மூச்சு நின்றுவிடும். இதனால், வென்டிலேட்டரை வைத்து செயற்கையாக வென்டிலேட்டரில் மாட்டிவிட்டு, நுரையீரல், இதயத்திற்கு சிகிச்சை அளிப்பர். இதற்கு தினமும் 5,000 முதல் 10,000 வரை செலவாகலாம். இவற்றோடு சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, இதய நோய் என்று பல நோய்கள் இருந்தால் என்ன செலவு ஆகும் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.
60 வயது கடந்தவரா: இந்த வயதில் உடலில் ஏதாவது சர்க்கரை, பி.பி., மூட்டு வலி, மவுனமாக மறைந்து இருக்கும் இதய நோயான மார்புவலி, மாரடைப்பு, சர்க்கரை நோய் வரும் தன்மையுள்ளவர்கள், இதன் விளைவாக வரும் பல வியாதிகளான ஆஞ்சியோ பிளாஸ்டி, பைபாஸ் சர்ஜரி, பேஸ்மேக்கர் இவைகளுக்கு ஆகும் செலவை வராமல் தடுப்பது.
சிறுநீரகத்தால் கிட்னி பெய்லியர், கிட்னி டிரான்ஸ் பிளான்ட் மற்றும் ஸ்டிரோக் (கூஐஅ) எம்.ஆர்.ஐ., போன்ற செலவு. மூட்டினால் ஏற்படும் வலி, மூட்டு மாற்றுச் சிகிச்சை போன்றவற்றிற்கு, லட்சங்களில் ஏற்படும் செலவுகளை தவிர்க்க, நல்ல ஆரோக்கியமாக வாழ, உடலிலுள்ள இதயம், நுரையீரல் கிட்னி, மூளை முதலிய உறுப்புகளை காக்க, மூலதனத்தை (வீடு, நகை, நிலம்) காக்க நல்ல மருத்துவ ஆலோசனைபடி வாழ்வை துவக்குங்கள். வாழ்க, வளமுடன் என்றும்.
மைக்கேல் ஜாக்சனுக்கு: உலகப்புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சன், 1982ல் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் தலையில் தீக்காயம் ஏற்பட்டு, பிளாஸ்டிக் சர்ஜரி தலைக்கும் முகத்திற்கும் என்று பலவித சர்ஜரி செய்து, மருந்துகளை உட்கொண்டார். வியாதிகளின் தாக்குதல், மருந்துகள் என்று அவர் தொழில் தரத்தை பாதித்து, பல நிகழ்ச்சிகளை ரத்து செய்து, நஷ்டமடைந்தார். உலகப்புகழ், பெரும் செல்வம் இருந்தும், தனிப்பட்ட ஒழுக்க நெறியோடு வாழாததால், 50 வயதில் மரணம். பல வழிகளில் பல்லாயிரம் கோடிகள் குவித்தாலும் சில வியாதிகளை வெல்ல முடியாது.
பேராசிரியர் சு.அர்த்தநாரி எம்.டி.டி.எம்.,