எச்.ஐ.வி-யைக் கட்டுப்படுத்தும் மரபணு கண்டுபிடிப்பு
20 Sep,2013
எயிட்ஸ் நோய்க்குக் காரணமான எச்.ஐ.வி வைரஸ், மனித உடலில் பரவாமல் தடுப்பதற்கு உதவும் மரபணுவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரியில் நடைபெற்ற ஆராய்ச்சியில், மனித உடலிலுள்ள எம்.எக்ஸ்.2 என்ற அந்த மரபணுதான் எச்.ஐ.வி கிருமி வளர்வதைத் தீர்மானிக்கும் காரணி என்பது தெரியவந்துள்ளது.
சோதனையின்போது, இரண்டு மனித உயிரணுக்களில் எச்.ஐ.வி வைரஸ் செலுத்தப்பட்டது. இவற்றில் ஓர் உயிரணுவில் எம்.எக்ஸ்.2 மரபணு செயலிழக்கச் செய்யப்பட்டு, மற்றோர் உயிரணுவில் உயிர்ப்புடன் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எம்.எக்ஸ்.2 மரபணு செயல்படாத உயிரணுவில் செலுத்தப்பட்ட எச்.ஐ.வி வைரஸ் பல்கிப் பெருகியது. ஆனால் எம்.எக்ஸ்.2 மரபணு உயிர்ப்புடன் இருந்த உயிரணுவில் வைரஸ் வளர்ச்சியடையவில்லை. இதன்மூலம், எச்.ஐ.வி வைரஸ் மனித உடலில் பரவுவதும், பரவாததும் எம்.எக்ஸ்.2 மரபணுவின் செயல்பாடுகளைப் பொருத்துதான் அமையும் என்பது உறுதியாகியுள்ளது.
இந்தப் பரிசோதனைக்குத் தலைமை வகித்த டாக்டர். கெரொலின் கூஜன் கூறும்போது,
"எச்.ஐ.வி வைரஸ் நமது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை மீறி எப்படி ஊடுருவுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்த ஆராய்ச்சி உதவியுள்ளது. இதனைக் கொண்டு எயிட்ஸ் நோய்க்கு புதிய மருந்துகளை உருவாக்க முடியும்.
தற்போது எயிட்ஸ் நோயாளிகளின் ஆயுளை நீட்டிக்கும் மருந்துகள் பல உள்ளன. இருந்தாலும், அவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதால் உடலில் மருந்து எதிர்ப்பு சக்தி உருவாகும் அபாயம் உள்ளது'' என்று தெரிவித்தார்.