இந்தியா மிக நீண்ட பாரம்பரியமும் கலாச்சாரமும் கொண்ட நாடு என்பதற்கான கதைகள் ஏராளமாக உண்டு. காரணங்கள் இல்லாத சில அதி தீவிர நம்பிக்கைகளும் இந்தியாவில் உண்டு. அவ்வாறு சொல்லப்படும் கதைகள் சிலவற்றில் அமானுஷ்யங்களும் சில உண்டு.
அமானுஷ்ய கதைகள் சொல்லப்படும் சில முக்கிய இடங்கள் அழகான சுற்றுலா தளங்களாகவும் அமைந்திருக்கின்றன.
மாஸ் கடற்கரை
பொன்னிறத்தில் மின்னும் கடற்கரை மணல், தெளிந்த நீல நிறத்தில் கடல் நீர்,, சில்லென வீசும் தென்றல் இவையெல்லாம் இந்த இடத்துக்குச் சுற்றுலாப் பயணிகளைச் சுண்டியிழுக்கும்.ஆனால் இந்த கடற்கரையைப் பற்றிச் சொல்லப்படும் கதை அப்படி சுகமானது கிடையாது. இந்த இடம் முன்னொரு காலத்தில் சுடுகாடாக இருந்ததாகவும் இங்கு இப்போதும் அந்தி சாய்ந்த பிறகு
பேய்கள் நடமாட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சூரியன் மறைந்த பிறகு சுற்றுலா பயணிகள் யாரும் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.
பங்கார்க்ஹ் கோட்டை, ராஜஸ்தான்
கோட்டைகளின் நகரம் என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் செல்லும் வழியில் பங்கார்க்ஹ் கோட்டை அமைந்துள்ளது. சூரியன் மறைந்த பிறகு யாரும் இந்த இடத்துக்குச் செல்வதில்லை. அக்பருடைய இளைய சகோதரரால் இந்த கோட்டை கட்டப்பட்டது. சூரியன் மறைந்த பிறகு, குழந்தைகள் தேம்புவது, பெண்ணின் அழுகைக்குரல், கண்ணாடி வளையல்களின் ஜல் ஜல் சத்தம் ஆகியவை இங்கிருக்கும் கோட்டை அறைகளுக்குள் இரவு முழுக்க கேட்டுக்கொண்டே இருக்குமாம். திடீரென யாரோ பேசிக்கொண்டிருப்பது போல் சத்தம் கேட்கும். திடீரென சில நிமிடங்களுக்கு மயான அமதியுடன் இருக்கவும் செய்யுமாம். அடிக்கடிஇரவு நேரங்களில் பயங்கரமான சிரிப்பு சத்தமும் இங்கு கேட்குமாம்.
குக்கரஹல்லி ஏரி, மைசூர்
நடு ராத்திரியில் இருட்டான அறைக்குள் நீங்கள் மட்டுமே இருக்கும் பொழுது, திடீரென உங்களுக்குப் பின்னால் ஒருவர் உட்கார்ந்திருப்பது போலவோ, பின்னாலிருந்து தொட்டாலோ எப்படி இருக்கும். நினைக்கவே திகிலாக இருக்கிறதா? குக்கரஹல்லி ஏரிக்கு அருகில் தனியாக பயணம் செல்பவர்குளும் அப்படிப்பட்ட அமானுஷ்யத்தைத் தான் உணர்கிறார்களாம். மிக அழகிய
இயற்கைக் காட்சிகளைக் கொண்ட இந்த ஏரியைக் காண பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தாலும் சூரியன் மறைந்த பிறகு யாரும் ஒரு நிமிடம் கூட இங்கு இருப்பதில்லையாம். அப்டி இருந்தால் உங்களுடன் உங்கள் கண்ணுக்குத் தெரியாதவர் யாரோ உங்கள் தோள் மேல் கை போட்டுக் கொண்டு உட்கார்ந்திரு்பார் என்கின்றனர் திகிலூட்டுகிறார்கள் அப்பகுதி மக்கள்.
குல்தாரா, ராஜஸ்தான்
குல்தாரா ஒரு காலத்தில் ராஜஸ்தானின் செழிப்பான கிராமங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது. ஆனால் திடீரென ஓர் இரவில் அந்த ஊரில் உள்ளவர்கள் அத்தனை பேரும் இரவோடு இரவாக ஊரை காலி செய்துவிட்டு, வேறு வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்திருக்கிறார்கள். எதனால் அவர்கள் அப்படி ஒர் நாள் இரவில் ஊரை காலி செய்தார்கள் என்பதற்கான காரணம் இதுவரையிலும் அறியப்படாத ரகசியமாகவே இருக்கிறது. பல அமானுஷ்ய ரகசியங்களை இந்த கிராமம் தனக்குள் புதைத்து வைத்திருக்கிறது.
ஜி.பி.பிளாக், மீரட்
ஜி.பி.பிளாக் பிரபலமான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் பேய்களுக்கு மிகவும் பரிச்சயமான இடம் சொல்லலாம். இங்கு இரவு நேரங்களில் நான்கு இளைஞர்கள் ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உட்கார்ந்து கொண்டு, சரக்கு அடித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியை பலரும் இங்கு பார்த்திருக்கிறார்கள். அதேபோல், இந்த வீட்டுக்குள் இருந்து நடுஇரவில் கும்மிருட்டில், சிவப்பு நிற ஆடை அணிந்து கொண்டு பெண்கள் வருவது போன்ற காட்சிகளையும் பெரும்பான்மையோர் பார்த்திருக்கிறார்கள்.
வால்மீகி நகர், சென்னை
சென்னை விமான நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் வால்மீகி நகர் அமைந்துள்ளது. அது சென்னையின் அமானுஷ்ய பூமியாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் பேய்கள் அதிகமாக நடமாடும் வீடுகளில் ஒன்றாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்த பெருமைக்குக் காரணம் அந்த ஏரியாவில் உள்ள ஒரு பாழடைந்த அமானுஷ்ய வீடு தான். அந்த வீட்டு உரிமையாளரின் மகள் 10 வருடங்களுக்கு முன்பு இறந்திருக்கிறார். அதிலிருந்து இந்த வீடு காலியாகவே இருக்கிறது. அந்த பெண் இறந்த பின்புமு் ஆவியாக இங்கே சுழன்று கொண்டிருப்பதாகவும் இந்த வீட்டை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வீட்டுக்கு குடியிருகுக வருபவர்கள் வீட்டைப் பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்துவிட்டு, துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிடுகின்றனராம்.
நேஷனல் லைப்ரரி, கொல்கத்தா
கொல்கத்தாவில் உள்ள நேஷனல் லைப்ரரியில் இந்தியாவில் அச்சிடப்பட்ட பெரும்பாலான புத்தகங்களையும் பார்த்திட முடியும். பிரிட்டிஷ் காலத்து சில அரிய நூல்களும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. இந்த லைப்ரரி இரண்டு விஷயங்களுக்கு மிகப் பிரபலம். ஒன்று அரிய புத்தகங்கள். மற்றொன்று அமானுஷ்யங்கள்.பிரிட்டிஷ் காலத்தில் இங்கு வசித்த கவர்னரின் மனைவியுடைய ஆவி இங்கு சுழன்று கொண்டிருப்பதாக் கூறப்படுகிறது.