அது ஏதோ ஒரு காட்டின் மரங்கள் அற்ற பகுதி போலிருக்கிறது. படைத் தலைவன் சிறிது நேரம் பேசினான். நாங்கள் அவன் முன்னால் பாறை போல உடலை இறுக்கிக்கொண்டு நிற்கிறோம். இருட்டில் மற்றவர்களைப் பார்க்க முடிந்தது ஆறுதலாக இருந்தது. வழக்கத்துக்கு மாறாக, படைத் தலைவனின் தலைக் கவசம் அவன் முகத்தைச் சற்று கூடுதலாகவே மறைத்திருந்தது.
அவன் வார்த்தைகளில் அச்சம் இருந்தது. அதைக் கம்பீரமாகக் கடந்து சென்றுவிட வேண்டும் என்ற கவனமும் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, சற்றுக் களைத்திருக்கும் எங்களை ஒரு சண்டைக்குத் தயார் செய்தாக வேண்டிய பதற்றமும் அவர் வார்த்தைகளில் தெரிந்தன.
படைத் தலைவன் பேசிய தன் சுருக்கம் இதுதான்: ‘நம் படைக்குள் ஒருவன் நுழைந்திருக்கிறான். எதிரியின் முகாமிலிருந்து வந்திருக்கிறான். நிச்சயம் அவன் எதிரிதான். ஒரு பெரிய திட்டத்துடன்தான் அவன் நுழைந்திருக்கிறான். அவனை எவ்வளவு சீக்கிரம் அடையாளம் காண்கிறோமோ, அந்த அளவுக்கு நமக்கு நல்லது. அவன் மிகவும் ஆபத்தானவன்!’ நாங்கள் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன், சந்தேகத்துடன் பார்த்துக்கொள்கிறோம்.
வரிசைகள் தளர்ந்து, ஒருவருக்கொருவர் மெதுவாக நகர்ந்து தேடத் தொடங்கினோம். நான் தற்செயலாகப் படைத்தலைவனைப் பார்த்தேன். தலைக் கவசம் என்னை ஈர்த்தது. இருட்டுக்கிடையே அவன் முகம் தெரிந்தது. அவன் அவனே இல்லை. இதுவரை நாங்கள் பார்த்திராதவன். அப்படியானால் அவன்தான் உள்ளே ஊடுருவியவன்.
ஒரு பெரும் கத்தல் என் தொண்டையிலிருந்து கிளம்பியது. யாரோ குரல் வளையைப் பிடித்துக் கொண்டது போல என்னிடமிருந்து பேச்சு வரவே இல்லை. அவன் என்னை உணர்ந்து விட்டான். இருட்டில் அவன் கண்கள் ஒரு பூனையின் பாதரச விழிகள் போலத் தூக்கலாகத் தெரிந்தன. மற்ற வீரர்கள் குழப்பத்துடன் எங்கேயோ பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள். அவன் என்னை நோக்கி வேகமாக வருகிறான்...
‘அம்மா!’ஸ நான் பதறியடித்துக்கொண்டு படுக்கையி லிருந்து எழுந்தேன். சுற்றிலும் சந்தேகத்துடன் பார்க்கிறேன். நான் இரவுகளில் மட்டும் வந்தடையும் அதே மேன்ஷன் அறை. இரவு ஒன்றரை மணி இருக்கும். சிதறி ஓடுகிற ஒரு கோழிக்குஞ்சு போல நெஞ்சு அடித்துக்கொள்வதை ரொம்ப காலத்துக்குப் பிறகு உணர்கிறேன். கனவு பாதியிலேயே துண்டிக்கப்பட்டுவிட்டாலும், அது கனவு மட்டுமே என்பதை உணரச் சில நொடிகள் தேவைப்பட்டன.
என்னை ஒரு படை வீரனாக நினைத்தால் எனக்கே அந்தச் சூழ்நிலையிலும் சிரிப்பாக இருந்தது. கனவில் என்னிடம் ஆயுதங்கள் இருந்தனவா என்பது இப்போது நினைவில் இல்லை. எதிரியை எதிர்கொள்ள வாளை எடுக்காமல், ஓவென அலற ஆயத்தமானதை நினைத்தால் எனக்கு வெட்கமாக இருந்தது.
திடீரென எனக்குள் ஒரு கேள்வி. என்னால் கத்த முடியவில்லை எனில், சற்று நேரத்துக்கு முன்னால் அறையையே கலைத்துப்போட்ட அந்த அலறல் சத்தம் யாருடையது? மிக விநோதமான அலறல் அது. அப்போதுதான் நான் இருக்கும் மூன்றாம் தளத்தில் உள்ள மற்ற அறைகளின் விளக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக ஒளிர்வதைக் கவனித் தேன்.
கதவுகள் வரிசையாகத் திறக்கப்பட்டன. ‘யாருய்யா சத்தம் போட் டது?’ என்று உறக்கம் தடைப்பட்ட எரிச்சலோடு யாரோ கேட்கிறார்கள். என் மனதில் இரண்டாவதாக ஓர் அச்சம்.
‘ஒருவேளை சத்தம் போட்டது நாமதானா?’ என்ற சந்தேகத்தோடு நானும் அறையிலிருந்து வெளியே வந்தேன். இல்லை என்று மனம் அழுத்தமாக மறுத்தது. ‘ஆமாஸநானும் கேட்டேன்ஸ இப்படியா சத்தம் போடுவாங்கஸபேயைப் பார்த்த மாதிரிஸஉண்மைல மேன்ஷன்ல காத்து கறுப்பு நடமாட்டம் ஏதும் இருக்காஸ எங்கய்யா மேனேஜரு’ என்று விசாரணை தீவிரம் அடைந்தது. இந்த நேரத்திலும் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் தட்டி எழுப்பப்பட்டார்கள்.
திடீரென இரண்டாம் தளத்தி லிருந்து சிரிப்புச் சத்தம் கேட்டது. ‘ஓ நீதானாஸ என்னய்யா ஆச்சு?’ என்று யாரோ சூழலுக்குப் பொருந்தாத உற்சாகத்துடன் சிரிக்கிறார்கள். சத்தம் போட்டவன் அவனாகவே வெளியே வந்து உண்மையைச் சொல்லிவிட்டான்.
என்னைப் போலவே ஒல்லியான ஆள்தான். அசட்டுச் சிரிப்புடன், ‘ஒரு கெட்ட கனவு மாப்ளஸஅதான் டென்ஷன்ல கத்திட்டேன்’ என்று மெல் லிய குரலில் அவன் சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். ‘அதுக்காக இப்படிக் கூவுறியே மச்சான்?’ என்று நண்பர்கள் கலாய்க்கிறார்கள். நல்லவேளை, அவன் ஒப்புக்கொண்டான். இல்லையெனில் அலறியவன் நான்தான் என நான் நினைத்துக் கொண்டிருந் திருப்பேன்.
மங்கிய வெளிச்சத்தில் அவன் முகம் தெரியவில்லை. அவன் நின்றுகொண்டு பேசும் அறையை அப்போதுதான் கவனித்தேன். என் அறைக்கு நேர் கீழே உள்ள அறையில் அவன் இருக்கிறான். எனக்குள் ஆச்சர்யம் ஒரு மின்னலென இறங்கியது.
மூன்றாம் தளத்தில் ஒரு துர்க்கனவு. அதே தருணத்தில் இரண்டாம் தளத்திலும் ஒரு துர்க்கனவு. ஒரே கனவு நேர்குத்தாக இறங்கியிருக்கிறது என்றும் சொல்லலாம். இரண்டு மொக்கை ஜீவன்கள் தங்கள் தகுதிக்கு மீறி ஒரு களத்தை, எதிரியை, நெருக்கடியைச் சந்தித்து எச்சில் முழுங்கிக்கொண்டிருக்கின்றன.
பெருமூச்சு விட்டபடியே கட்டிலில் வந்து அமர்ந்தேன். அடுத்தடுத்த தளங்களில் வசிக்கும் இருவேறு நபர்களை ஒரே நேரத்தில் ஒரே கனவு துரத்துகிறது என்ற கற்பனை நீட்சி என்னை மிகவும் வசீகரித்தது.
இது ஏறக்குறையப் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு நேர்ந்த அனுபவம். அப்போது ஒரு தொலைக்காட்சித் தொடர் தயாரிக்கும் குழுவில் நான் பணிபுரிந்துகொண்டிருந்தேன். குறிப்பாக, அமானுஷ்ய சம்பவங் களை மையமாக வைத்துக் கதைகள் எழுதிக் கொடுப்பதுதான் என் வேலை. அதற்காக நிறைய பேய்க் கதைகளைத் தேடித் தேடிப் படித்துக்கொண்டிருந்தேன்.
ஒரு அமானுஷ்ய சக்தி எப்படித் திடீரென தோன்றி அச்சுறுத்த வேண்டும், புதுசு புதுசாக என்னென்ன மாதிரியான இம்சைகளை அவை உருவாக்கலாம், எப்படிப்பட்ட பரிகாரங்களால் அவை அமைதி அடையும் என்று குறிப்புகள் எழுதுவது அந்த நாட்களில் என் பொழுதுபோக்கு. நான் பகலில் பின்தொடரும் பேய் இரவில் கனவு மூலம் என்னோடு விளையாடியிருக்கிறது. என் கனவு தான் இரண்டாம் தளத்திலும் இறங்கியதாகக் கற்பனை செய்து கொள்வதில் எனக்கு அப்படி ஒரு ஆனந்தம்.
இன்னொரு தகவல். நேற்று ‘பிசாசு’ படம் பார்த்தேன். திரையரங்கை விட்டு வெளியே வந்த தும், ஏதோ பித்துப் பிடித்தது போலிருந்தது. உச்சந்தலையில் தீ பற்றி எரிவதுபோல ஓர் உணர்வு. வேக வேகமாக ஒரு கடைக்குப் போய் பேப்பர் கேட் டேன். ‘கோடு போட்டதா, கோடு போடாததா?’ என் முகத்தில் தெரிந்த உக்கிரம் உணராமல் கேட்ட கடைக்காரரைக் கழுத்தில் கவ்வுவதுபோல முறைத்துப் பார்த்தேன். பேனாவும் பேப்பருமாக நடுரோட்டில் உட்கார்ந்தேன். ‘ஆவி அமலா’ மாதிரி என் வலது கை என் கட்டுப்பாட்டை மீறி எதையோ விறுவிறுவெனக் கிறுக்கியது.