3.8 அங்குல உயரத்தில் உலகிலேயே குள்ளமான ‘கின்னஸ்’ குட்டி நாய்
26 Jan,2014

3.8 அங்குல உயரத்தில் உலகிலேயே குள்ளமான ‘கின்னஸ்’ குட்டி நாய்
வட அமெரிக்காவின் கரீபியன் கடற்கரையோரமாக அமைந்துள்ள நாடுகளில் ஒன்று புயெர்டோ ரிக்கோ. இங்குள்ள டொராடோ பகுதியில் வசிக்கும் வனேஸா செம்லர் என்பவர் ஒரு அரிய வகை ‘பூச்’ ரக பெண் நாயை வளர்த்து வருகிறார்.
‘மிராக்கில் லில்லி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நாய், 2011- டிசம்பரில் பிறந்தபோது வெறும் 28 கிராம் எடையுடன் ஒரு தேக்கரண்டி அளவில்தான் இருந்தது. அவ்வளவு குட்டி உருவம் கொண்ட மிராக்கில் லில்லி, தனது வாயை திறந்து தாய் நாயின் மடியில் இருந்து பாலை உறிஞ்சி குடிக்க முடியாமல் திண்டாடி திணறியது.
இதைக்கண்டு துடிதுடித்துப் போன உரிமையாளர் வனேஸா, தாய் நாயின் மடியில் இருந்து ஒரு குவளையில் பாலை கறந்து, சொட்டு மருந்து போட பயன்படுத்தப்படும் ‘டிராப்பர்’ மூலம் மிராக்கில் லில்லிக்கு பாலூட்டி, தற்போது அரை கிலோ எடையுள்ள நாயாக தேற்றி வைத்துள்ளார்.
21-02-2013 நிலவரப்படி, உலகிலேயே குள்ளமான குட்டி நாய் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் மிராக்கில் லில்லியின் பெயர் இடம் பெற்றுள்ளது.
’எனது கட்டிலின் பக்கத்திலேயே படுத்து தூங்கும் மிராக்கில் லில்லி, மனிதர்கள் சமைத்த உணவை தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. யாராவது புகைப்படம் எடுக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொண்டால்.. நாக்கை துருத்திக் கொண்டு உற்சாகமாக ‘போஸ்’ கொடுக்க தொடங்கி விடும்’ என தனது செல்லப் பிராணியை பூரிப்புடன் புகழ்கிறார், வனேஸா செம்லர்.