சென்ற ஆண்டின் கார் விற்பனையில் சாதனை புரிந்த ஜாக்குவார் நிறுவனம்
12 Jan,2014
சென்ற ஆண்டின் கார் விற்பனையில் சாதனை புரிந்த ஜாக்குவார் நிறுவனம்
உலகெங்கும் வியாபித்திருந்த பொருளாதார மந்த நிலை கடந்த சில வருடங்களாக கார் விற்பனைத் தொழிலையும் பாதித்திருந்தது. இதிலிருந்து மீண்டு இங்கிலாந்தின் மிகப் பெரிய கார் தயாரிப்பு விற்பனை நிறுவனமான ஜாக்குவார் லேண்ட்ரோவர் சென்ற வருடம் 4,25,006 வாகனங்களை விற்று விற்பனையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 38 சர்வதேச நாடுகளில் நடைபெற்றுள்ள இந்த விற்பனை கடந்த 2012 ஆம் ஆண்டைவிட 19 சதவிகிதம் அதிகமாகும்.
இந்த விற்பனையிலும் லேண்ட்ரோவர் வாகனமே 3,48,383 என்ற எண்ணிக்கையில் விற்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டு விற்பனையை விட 15 சதவிகிதம் அதிகமாகும். எனினும் ஆடம்பரமான ஜாக்குவார் கார்களின் விற்பனையும் கடந்த ஒரு வருடத்தில் இரு மடங்காக அதிகரித்து 76,668 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2013 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்திற்கு நல்லதொரு ஆண்டாக அமைந்துள்ளது. இந்த வாகனங்களின் தேவைகளுக்கான கோரிக்கைகள் வலுவாக இருப்பதற்கு நன்றி தெரிவிப்பதாக இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டாக்டர்.ரால்ப் பெத் குறிப்பிட்டுள்ளார். வடிவமைப்பு, தொழில்நுட்பம், புதுமை மற்றும் தரம் போன்ற இதன் உத்திகளே உலகளாவிய வாடிக்கையாளர்களை அடைய உதவியுள்ளன. மேலும் கடந்த வருடத்தின் புதிய தயாரிப்பான எப்-டைப் ஜாக்குவார் கார்களும் மற்றும் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் கார்களும் இந்த இலக்கை அடைய உதவியுள்ளன என்றும் அவர் கூறினார்.
தன்னுடைய புதிய எஞ்சின் தயாரிப்பு மையத்திற்கு முதல்கட்டப் பணியாளர் தேர்வை இந்த நிறுவனம் தற்போது மேற்கொண்டுள்ள நிலையில் இந்த முன்னிலை செய்தியானது வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.