நீச்சல் தெரியாமல் 60 மணிநேரம் நடுக்கடலில் போராடிய பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட தாய்வான் நபர்!
09 Jan,2014

நீச்சல் தெரியாமல் 60 மணிநேரம் நடுக்கடலில் போராடிய பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட தாய்வான் நபர்!
கடல் நீரில் 60 மணிநேரம் (3 நாட்களுக்கு அண்ணளவாக) உயிருடன் போராடிக் கொண்டிருந்த தாய்வான் நபர் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் ஊடக கவனத்தை பெற்றிருக்கிறது. ட்செங் லியென் ஃபா எனும் 42 வயதான இந்நபர், ஹுவாலியன் கடற்கரைப் பகுதியில் இராட்சத அலைகளால் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
சுமார் 60 மணிநேரத்திற்கு பின்னர் 75 கி.மீ தொலைவில் மற்றுமொரு கடற்கரையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இவருக்கு நீச்சல் தெரியாத போதும், கடலில் மிதக்கக் கூடிய வகையில் மரப்பலகைத் துண்டு ஒன்றை பற்றிப் பிடித்தபடி கடலிலேயே மிதந்தவாறு இவர் மறுகரைக்கு வந்துள்ளார்.
நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்பு பணியாளர்கள் இவரை மீட்டெடுத்துள்ளனர். உடலில் சற்று நீரிழப்பு மற்றும் கைத் தோல்களில் உப்பு நீரினால் கொப்பளங்கள் உண்டானதை தவிர வேறெந்த பாரிய காயங்களும் இன்றி இவர் மீட்கப்பட்டுள்ளார்.
நீர் ஆகாரமின்றியும், உணவு இன்றியும் உமார் 60 மணிநேரம் இவர் நடுக்கடலில் உயிருக்கு போராடிய படி இருந்து மறுகரைக்கு வந்து சேர்ந்தது நிச்சயம் அதிசமே என்கின்றனர் மருத்துவர்கள். மறுகரையின் அருகே சாலை விளக்குகளை பார்த்ததால் ஓரளவு நம்பிக்கை கொண்டு இறுதிவரை நடுக்கடலில் போராடினேன் என்கிறார் இவர்.
இளம் விலாங்கு மீன்களை கடற்கரையில் இருந்து சேர்த்து எடுத்து விற்பனை செய்து மேலதிக பணம் சம்பாதிக்கும் நோக்கிலேயே கடற்கரையில் அதிக நேரம் இவர் செலவழித்திருக்கிறார். காணாமல் போயிருந்த தனது கணவர் உயிருடன் மீட்கப்பட்டதை அறிந்த மனைவியும், மகளும் அவரை நேரடியாக பார்க்க வந்த தருணத்தை ஊடகவியலாளர்கள் வீடியோவில் படம்பிடித்திருந்த காட்சி நெகிழச்செய்கிறது.
கடந்த மாதம், ஆழ்கடலில் கவிழ்ந்த கப்பல் படகில் உயிர்காப்பு ஒட்சிசன் அறையிலிருந்து ஒரே ஒரு ஆபிரிக்கர் மட்டும் மூன்று நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து செய்தி பிரசுரித்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.