பேய்கள் நிஜமானவையா? பைபிள் தரும் பதில்
09 Jun,2024
ஆம், நிஜமானவை. கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்த, ‘பாவம் செய்த தேவதூதர்கள்’தான் பேய்கள். (2 பேதுரு 2:4) தன்னையே ஒரு பேயாக ஆக்கிக்கொண்ட முதல் தேவதூதன் பிசாசாகிய சாத்தான்; பைபிள் அவனை “பேய்களுடைய தலைவன்’ என்று அழைக்கிறது.—மத்தேயு 12:24, 26.
நோவாவின் நாட்களில் கலகம்
நோவாவின் நாட்களில் வந்த பெருவெள்ளத்திற்கு முன்பு தேவதூதர்கள் செய்த ஒரு கலகத்தைப் பற்றி பைபிள் இப்படிப் பதிவு செய்திருக்கிறது: “பூமியிலிருந்த பெண்கள் அழகாக இருப்பதைத் தேவதூதர்கள் கவனித்தார்கள். அதனால், தங்களுக்குப் பிடித்த பெண்களையெல்லாம் தங்களுடைய மனைவிகளாக ஆக்கிக்கொண்டார்கள்.” (ஆதியாகமம் 6:2) அந்தப் பொல்லாத தேவதூதர்கள் பரலோகத்தில் ‘தாங்கள் இருக்க வேண்டிய இடத்தை விட்டுவிட்டு,’ பூமியிலிருந்த பெண்களோடு உறவுகொள்வதற்காக மனித உடலை எடுத்துக்கொண்டார்கள்.—யூதா 6.
பெருவெள்ளம் வந்தபோது, அந்தக் கலகக்கார தேவதூதர்கள் தங்களுடைய மனித உடலை விட்டுவிட்டு, பரலோகத்துக்குத் திரும்பிப் போனார்கள். ஆனால், கடவுள் அவர்களைத் தன் குடும்பத்தைவிட்டு ஒதுக்கித்தள்ளினார். அவர்களால் இனி ஒருபோதும் மனித உடலை எடுக்க முடியாதபடி செய்து அவர்களைத் தண்டித்தார்.—எபேசியர் 6:11, 12.