ஆப்கனிஸ்தானில் இந்த ஆண்டு உச்சத்தை எட்டியது அபின் உற்பத்தி: ஐ.நா. தகவல்
13 Nov,2013

ஆப்கனிஸ்தானில் இந்த ஆண்டு உச்சத்தை எட்டியது அபின் உற்பத்தி: ஐ.நா. தகவல்
கடந்த 1990களில் ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட தொடர் யுத்தங்களின் விளைவாக கடந்த 2001ஆம் ஆண்டில் ஆப்கன் அரசுக்கு உதவி புரியும் விதமாக அந்நாட்டில் ஐ.நா.வின் நேட்டோ படைகள் நிலை நிறுத்தப்பட்டன. அந்நாட்டில் ஓபியம் உற்பத்தியை ஒழிக்க கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக மேற்கத்திய நாடுகள் செய்த முயற்சிகளின் விளைவாக அங்கிருந்த இரண்டு மாகாணங்களில் இந்தப் பயிர்களின் உற்பத்தி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.
வரும் 2014ஆம் ஆண்டின் இறுதியில் நேட்டோ படைகள் முற்றிலுமாக விலகிக்கொள்ள முடிவெடுத்துள்ளன. இந்த நிலையானது ஏற்கனவே தலிபான்களின் தாக்குதல்களால் ஸ்திரமற்ற நிலையில் இருக்கும் நாட்டின் பாதுகாப்பும், பொருளாதாரமும் மேலும் குழப்ப நிலைக்கே வழி வகுக்கும் என்று பொதுவான கருத்து நிலவுகின்றது.
எனவே, தங்களைப் பாதுகாத்துக்கொள்ள விவசாயிகள் இந்த வருடம் அதிக அளவில் போதைமருந்து பயிர்ப் பொருட்களை உற்பத்தி செய்துள்ளனர் என்று ஐ.நாவின் வருடாந்திர அறிக்கை தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 2,00,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள இந்த மூலப்பொருள் முற்றிலுமாக அறுவடை செய்யப்பட்டால் உலகத் தேவைகளை விடவும் அதிகமாக இருக்கக்கூடும். மேலும், சென்ற வருடத்தைவிட 36 சதவிகிதம் அதிகப்படியான உற்பத்தி இதுவாகும் என்று ஐ.நாவின் போதை மருந்துகள் மற்றும் குற்றங்கள் மீதான அலுவலகத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நாட்டில் காணப்படும் பாதுகாப்பின்மையே விவசாயிகளின் இந்த முடிவுக்குக் காரணமாகும் என்று ஆப்கன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் பாதிக்கும் மேற்பட்ட சாகுபடி ஹெல்மான்ட் பகுதியிலேயே காணப்படுவதாக ஆப்கன் நாட்டின் போதைத்தடுப்பு அமைச்சரான தின் முகமது முபாரக் ரஷிதி தெரிவித்தார். இது ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் தலிபான்கள் ஆதிக்கம் மிகுந்த பதற்றமான ஒரு பகுதியாகும்.