இறக்கும்போது உங்கள் உயிரின் சக்தி நிலை, உங்களிடம் எஞ்சியிருக்கும் கர்மப் பதிவுகள் பொறுத்தே உங்களின் அடுத்த பிறவியின் காலம் தீர்மானிக்கப்படுகிறது என்கிறது கருட புராணம்.
`மரணத்தை அத்தனை எளிதாக யாரும் ஏற்பதில்லை. அந்தப் பயத்தின் விளைவாக உண்டான தற்காலிக சமாதானம்தான் மறுபிறவி எனும் கோட்பாடு. மற்றபடி அதில் உண்மை எதுவும் இல்லை' என்கிறது அறிவியல். `தெரியாததைத் தெரிந்து கொள்ள முயல்வதே அறிவியல். அதை இல்லை என்று மறுப்பது சரியில்லை' என்கிறது ஆன்மிகம். உண்மையில் மறுபிறவி என்பது உண்டா இல்லையா, அதுபற்றி ஆன்மிகத்தில் சொல்லப்படும் கருத்துகள் என்னென்ன என்பதை குறித்து மட்டும் இங்கே காணலாம்.
கருட புராணம், திருமந்திரம், திருவாசகம், யூகிமுனி தத்துவம் உள்ளிட்ட பல புத்தகங்கள் மறுபிறவியை வலியுறுத்துகின்றன.
"மூடமாகிய தேகத்தில் அறிவாகிய ஆன்மா ஒருவன் உண்டு. அவனுக்கு பந்த முத்தி ஒன்றும் உண்டு, முத்தியடைகின்ற பரியந்தம் பந்த விகற்பத்தால் வேறு வேறு தேகம் எடுப்பானென்றும்" வள்ளலார் மறுபிறவி குறித்து விளக்கம் அளிக்கிறார். "முற்பிறவியில் நீங்கள் எதுவாக இருந்தீர்கள் என்பதை அறிந்து கொண்டால் தற்போதைய உங்கள் வாழ்க்கை சிக்கலாகிவிடும். சென்ற பிறவியின் விருப்பு வெறுப்புகளை தாங்க வேண்டி வரும் அது உங்களது வாழ்க்கைமுறையே மாற்றிவிடும்" என்கிறார் ஓஷோ.
இறக்கும்போது உங்கள் உயிரின் சக்தி நிலை, உங்களிடம் எஞ்சி இருக்கும் கர்மப் பதிவுகள் பொறுத்தே உங்களின் அடுத்த பிறவியின் காலம் தீர்மானிக்கப்படுகிறது என்கிறது கருட புராணம். தாரணை, தியானம், சமாதி என்ற மூன்றும் கலந்த ஸம்யமம் என்ற பயிற்சியில் முன்பிறவியை அறிந்து கொள்ள முடியும் என்கிறது சித்தர் சாஸ்திரங்கள். சிலருக்கு கனவுகள், உள்ளுணர்வு போன்றவற்றின் வழியாகக் கூட முன்பிறப்பு ஞாபகம் வரலாம் என்கின்றன ஆன்மிக தத்துவங்கள். அப்போதுதான் பார்த்த இடங்கள், முன்னரே பார்த்த மாதிரி இருப்பதெல்லாம் இப்படித்தான் எனப்படுகிறது. வரலாற்றின் மீது அதீத விருப்பம், சிலவற்றின் மீது கொள்ளும் அதீத பயம் இதெல்லாம் கூட முன்பிறவியின் வெளிப்பாடுதான் என சில ஆய்வு நூல்கள் கூறுகின்றன.
ஸ்ரீகிருஷ்ணர், வசிஷ்டர், புத்தர், மகாவீரர், சாக்ரடீஸ், பிளாட்டோ, குருநானக், விவேகானந்தர் என உலகின் பெரும்பாலான ஞானிகள் மறுபிறவி குறித்து நம்பிக்கைத் தெரிவித்து தங்களது போதனைகளை வெளிப்படுத்தி உள்ளனர். இந்து, பௌத்தம், சமணம், சொராஸ்திரியம், கன்பூஷியம், தாவோயிஸம், ஷின்டோ, ஜென் போன்ற மாதங்கள் மறுபிறவியை நம்புகின்றன. முந்தையப் பிறவியில் நாம் செய்யும் பாவ, புண்ணியங்களைக் கணக்கிட்டே, அடுத்த பிறவியானது தரப்படுகிறது என்று கருடபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக தரித்திர நிலைமையோடு வாழ்பவர்கள், சென்ற பிறவியில் யாருக்கும் உதவாத கஞ்சனாக இருந்திருப்பர் என்கிறது கருட புராணம். எந்த ஒரு ஆசையும் இல்லாமல் பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை என்றும் அது கூறுகிறது.
உலகம் முழுக்கவே ஞானியர்களின் பெரும் நம்பிக்கையாக இருப்பது மறுபிறவிக் கொள்கை. மீண்டும் தோன்றுவேன் என்று நம்பிக்கைக் கூறியபடியே பல ஞானியர்கள் மறைந்து போயுள்ளார்கள். அது இன்றும் சித்தர்களின் ஜீவசமாதி வரை நீண்டு வருகின்றது. உண்மையில் மறுபிறவி உள்ளதா? அன்னையின் மடியிலிருந்து, மெத்தையின் விளிம்பிலிருந்து கீழே விழவிருக்கும் குழந்தை திடீரென்று அன்னையின் சேலையையோ மெத்தையின் துணியையோப் பிடித்துக் கொண்டுத் தப்பிக்கிறதே எப்படி! ஏற்கெனவே மரணத்தின் துன்பத்தை அனுபவித்த ஆன்மா அதைத் தற்போது தவிர்க்க விரும்புவதே காரணம் என்கிறார்கள் ஞானிகள். காரணம் அறியாமல் சிலரை வெறுப்பது, காரணம் புரியாமல் சிலரை விரும்புவது எல்லாம் முப்பிறப்பின் விளைவே என்றும் கூறப்படுகிறது.
முதுமக்கள் தாழி, பிரமிடுகள் என்பவை எல்லாம் இறந்தவர் மீண்டும் பிறப்பர் என்ற ஆழ்ந்த நம்பிக்கையின் வெளிப்பாடே என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். எகிப்தில் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே பதப்படுப்பட்ட உடலைப் பாதுகாத்து வைத்துள்ளனர். அந்த உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும் அவரது உறவுகள், பணியாட்களையும் கூட சேர்த்துப் புதைத்தனர். இதன் காரணம் எகிப்தில் மறுபிறவி நம்பிக்கை ஆழ்ந்து இருந்ததே.
முன்பிறப்பில் செய்த பாவ புண்ணியங்கள் அடுத்த பிறவியில் அதற்கானப் பலன்களை அளிக்கும் என்று புராணங்கள் மட்டுமல்ல, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவியங்களும் சொல்கின்றன. புராணங்கள், இலக்கியங்கள் மட்டுமல்ல, அறிவியல் ஆய்வுகளும் மறுபிறப்பைப் பற்றி சில ஆச்சர்யமூட்டும் தகவல்களைக் கொடுத்துள்ளன. கனடாவைச் சேர்ந்த அமெரிக்கப் பல்கலைக் கழக மனநிலை ஆய்வுப் பேராசிரியர் இயன் ஸ்டீவென்சன் தெற்காசிய நாடுகளில் 3000-க்கும் அதிகமான நபர்களை ஆய்வு செய்தார். அதில் பெரும்பாலான குழந்தைகள் தங்களின் முற்பிறவி குறித்து வெளியிட்ட செய்திகள் உண்மையாக இருந்ததை எண்ணி வியப்புடன் பதிவு செய்துள்ளார்.
இந்தியாவின் பெரும்பாலான மக்களின் நம்பிக்கை மறுபிறவி. உலகில் வாழும் அனைவரும் பரமாத்மாவில் இருந்து வந்த ஜீவாத்மாக்கள்தான். ஒவ்வொரு ஜீவாத்மாவும் இறுதியில் பரமாத்மாவை அடைந்தே தீர வேண்டும். அதற்காக அது மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து நன்மைகளைப் புரிந்து தீமைகளைக் குறைத்து ஒருநாள் நிச்சயம் பரமாத்மாவைப் போய்ச்சேரும். அது ஒரே பிறவியிலும் நடக்கலாம்; ஓராயிரம் பிறவியிலும் நடக்கலாம்! அது அவரவர் கர்மாவைப் பொறுத்தது என்கிறது ஆன்மிகம். நன்மையைச் செய்தால் நன்மையை அடையலாம் என்பது உலக வழக்கம் தானே! மற்றபடி மறுபிறவியை நம்புவதெல்லாம் உங்கள் விருப்பம்!