நாடக மேடையில் தொடங்கி, தமிழ் சினிமாவின் முதல் 'சகலகலா நாயகனாக' புகழ்பெற்ற நடிகர் சேர்த்த 1000 ஏக்கர் நிலம், 124 வீடுகளின் நிலை என்னவானது? தற்போது அவர்களது குடும்பம் தங்குவதற்கு கூட ஒரு வீடு இல்லாமல் போனது ஏன்?.. யார் அவர்?.
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித் காம்போ கொண்டாடப்படுவதற்கு முன்னோடி எம்.கே. தியாகராஜ பாகவதர்-பி.யூ.சின்னப்பா. எம்.கே.டி எனப்படும் தியாகராஜ பாகவதர் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்றால், பி.யூ.சின்னப்பா முதல் சூப்பர் ஆக்டர்.
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித் காம்போ கொண்டாடப்படுவதற்கு முன்னோடி எம்.கே. தியாகராஜ பாகவதர்-பி.யூ.சின்னப்பா. எம்.கே.டி எனப்படும் தியாகராஜ பாகவதர் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்றால், பி.யூ.சின்னப்பா முதல் சூப்பர் ஆக்டர்.
இந்த இரண்டு ஸ்டார்களும் நாடகத் துறையிலிருந்து சினிமாவுக்குள் வந்தவர்கள். இப்படியான தமிழின் மகா நடிகராக கொண்டாடப்பட்ட நடிகர் பி.யூ.சின்னப்பா குடும்பத்தின் தற்போதைய நிலைமைதான் பேசுபொருளாகி உள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த உலக நாதப்பிள்ளை - மீனாட்சி அம்மாள் தம்பதியரின் மூத்த மகனாகப் பிறந்த சின்னப்பாவுக்கு, நாடக நடிகரான தந்தையின் வழியில் 5 வயதிலேயே கலை ஆர்வம் தொற்றிக்கொண்டது. அடுத்த வருடமே 'சதாரம்' நாடகத்தில் குட்டித் திருடனாக நடித்துப் பாராட்டு பெற்ற இவர், பின்னர் குஸ்தி, சிலம்பம் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். 12 வயதில், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் வெறும் 15 ரூபாய் மாதச் சம்பளத்தில் சேர்ந்தார்.
நாடகக் கம்பெனி முதலாளியான ஸ்ரீசச்சிதானந்தப் பிள்ளை தங்கியிருந்த வீட்டில், சின்னப்பா பாடிய நாடகப் பாடலின் சாரீரமும் ஈடுபாடும் அவர் கவனத்தைக் கவர்ந்தது. பாடிக்கொண்டிருந்த சின்னப்பாவின் தனித்துவமான திறமையைப் பார்த்த முதலாளி, உடனடியாக அவரது சம்பளத்தை 15 ரூபாயிலிருந்து 75 ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் சின்னப்பாவின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இந்தச் சம்பள உயர்வுக்குப் பிறகு நாடக உலகில் கதாநாயகனாக (ராஜபார்ட்) உயர்ந்த சின்னப்பா, தமிழ் சினிமாவில் உடல் வலிமையிலும் சாதனை படைத்தார். ஆம், அவர் சுமார் 190 பவுண்ட் எடை வரை தூக்கி பரிசுகள் பெற்ற பலசாலி. அவர் நடித்த 'சந்திரகாந்தா' நாடகம் திரைப்படமாக உருவானபோது, அதில் சுண்டூர் இளவரசனாகத் தோன்றியதன் மூலம், தமிழ் சினிமாவின் முதல் பாடவும், நடிக்கவும், சண்டையிடவும் தெரிந்த 'சகல கலா கதாநாயகனாக' ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
உத்தமபுத்திரன், கண்ணகி, ஜகதலப் பிரதாபன் போன்ற தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்து அவர் மக்கள் மனதைக் கவர்ந்தார். இவருக்கு எம்.ஜி.ஆர்., எம்.ஜி.சக்ரபாணி உள்ளிட்ட பல நடிகர்கள் நண்பர்களாகக் கிடைத்தனர். இதில் எம்ஜிஆர் இவரை குருநாதராக ஏற்றுக்கொண்டார். சின்னப்பா 'பிருதிவிராஜன்' படத்தில் தன்னுடன் நடித்த ஏ. சகுந்தலாவை காதலித்து மணந்தார்.
சினிமாவில் புகழ்பெற்ற காலத்தில் தனக்கு கிடைத்த வருமானத்தில் தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் 124 வீடுகளையும் 1000 ஏக்கர் நிலங்களையும் வாங்கி குவித்திருக்கிறார் பி.யூ.சின்னப்பா. பல வீடுகளை வாங்கிக் குவித்ததால், புதுக்கோட்டை ராஜாவே இவர் இனிமேல் வீடு வாங்கக் கூடாது என்று தடை விதித்ததாக ஒரு தகவல் உள்ளது. இந்த நிலையில்தான் 35 வயதாக இருக்கும்போது சொந்த ஊரில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோதே ரத்த வாந்தி எடுத்து சின்னப்பா உயிரிழக்க குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது.
தனக்கு பிறந்த குழந்தைகள் ராஜாக்கள் போல வாழ வேண்டும் என கோடிக்கணக்கில் பி.யூ.சின்னப்பா சேர்த்து வைத்த சொத்துக்கள் அனைத்தும் இப்போது இல்லை. மேலும் சொந்த ஊரில் அந்த சின்னப்பா குடும்பம் தங்குவதற்கு கூட ஒரு வீடு இல்லை என்பதுதான் இப்போதைய சோகம். சின்னப்பா இறந்த பின் தங்கள் பெயரில் இருந்த சொத்துக்களை விற்று சென்னைக்கு குடிபெயர்ந்தார் அவரின் மனைவி. ஆனால், இந்த சொத்துக்கள் தவிர உறவினர்கள் பெயரில் வாங்கிய சொத்துக்கள் எதுவும் சின்னப்பா இறந்த பிறகு திரும்பி வரவில்லை. பினாமிகள் ஏமாற்ற குறைவான சொத்துக்களே பி.யூ.சின்னப்பா குடும்பத்திற்கு கிடைத்திருக்கிறது.
இதற்கிடையே, தந்தை தாய் போல பி.யூ.சின்னப்பாவின் ஒரே மகனும் சினிமாவில் நடித்தார். ஆனால், தந்தைக்கு கிடைத்த வரவேற்பு மகனுக்கு கிடைக்கவில்லை. விளைவு, இருந்த கொஞ்ச நஞ்ச சொத்துக்களும் காலியாக வறுமையில் வாடியிருக்கிறது தமிழ் சினிமாவின் மகா நடிகரின் குடும்பம். கோடிக்கணக்கில் சொத்து இருந்த புதுக்கோட்டையில் தற்போது பி.யூ.சின்னப்பாவின் நினைவிடம் மட்டுமே, அதுவும் சிதிலமடைந்து நிலையில் அவர்களுக்கு சொந்தமாக இருக்கிறது.
பி.யூ.சின்னப்பாவின் மகன் யாரென தெரியுமா?. 'கரகாட்டக்காரன்' திரைப்படத்தில் கறிக்கடைக்காரராக வந்து காந்திமதி மற்றும் ராமராஜன் உடன் சண்டை போடுவாரே... அவரேதான். தமிழ் சினிமாவின் மகா நடிகரின் மகன் அந்த சிறிய வேடத்தில் நடித்ததுதான் அவரின் கடைசி படம். தனது மகன் ராஜா போல வாழ வேண்டும் என சொத்து சேர்த்தது மட்டுமல்ல, பெயரிலும் அதனை கொண்டுவந்தார் பி.யூ.சின்னப்பா. ஆம், சின்னப்பா மகனின் பெயர் ராஜா பகதூர் என்பது குறிப்பிடத்தக்கது.