‘துள்ளுவதோ இளமை’ பட நடிகர் அபிநய் காலமானார்... தமிழ் சினிமாவில் சோகம்!
11 Nov,2025
கடந்த 2002-ம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘துள்ளுவதோ இளமை’. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் நடிகர் அபிநய். தமிழ் தவிர மலையாளம் உள்ளிட்ட திரையுலகிலும் நடிக்கத் தொடங்கினார்.
15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதுபோக சில விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். துப்பாக்கி பட வில்லன் வித்யூத் ஜம்வாலுக்கு பின்னணிக் குரல் கொடுத்தவரும் இவர்தான். தவிர 2004-ம் ஆண்டு வெளியான ‘சிங்கார சென்னை’, 2005-ம் ஆண்டு வெளியான ‘பொன் மேகலை’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார்.
சூர்யாவின் ‘அஞ்சான்’, கார்த்தியின் ‘பையா’, ‘காக்கா முட்டை’ ஆகிய படங்களில் சில கதாபாத்திரங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் 44 வயதாகும் அபிநய் தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். படங்கள் வாய்ப்பு இல்லாததால் வருமானமின்றி வறுமையில் சிக்கினார்.
கல்லீரல் பாதிக்கப்பட்டு உடல்நலமும் குன்றி, ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறினார். சில மாதங்கள் முன்பு வயிறு வீங்கிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அபிநயின் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த சூழலில் தான் அண்மையில் சிகிச்சைக்கு பண உதவி கோரியும் அபிநய் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அவருக்கு நடிகர் தனுஷ், அபிநய்க்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருந்த நிலையில், தனுஷ் இந்த நிதியுதவியை வழங்கினார். அதேபோல் நடிகர் KPY பாலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினார். இதன்பின் உடல்நலம் குன்றியபோதும் அபிநய் மீண்டும் படத்தில் நடித்திருந்தார்.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் காலமானார். அண்மையில் படவிழாவில் பங்கேற்ற அவர், அப்போதே தனக்கு உடல்நிலை மோசமாகி வருவதாக பேசியிருந்தார். இந்த நிலையில் தான் தற்போது மரணமடைந்துள்ளார். அவரின் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.