ஐஏஎஸ் கனவுகளைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருந்தவர்தான் இந்த நடிகை. காலம் அவரை சின்னத்திரை, வெள்ளித்திரைக்குள் நுழைய வைத்து அழகு பார்த்தது. இன்று 6 தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். இவருடைய சீரியல் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட். யார் அவர் தெரியுமா?
கடந்த 2012 முதல் 2014-ம் ஆண்டு வரை பாலிமர் தொலைக்காட்சியில் வெளியான இந்தி டப்பிங் சீரியல்தான் ‘உள்ளம் கொள்ளை போகுதடா’. இதன் டைட்டில் பாடல் பலருக்கும் நினைவிருக்கலாம். காலம் கடந்து வரும் காதல், அதையொட்டிய திருமணம், தம்பதிகளுக்குள் நிகழும் சிக்கல்கள் என குடும்பக் கதையாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தத் தொடரில் நடித்தவர்தான் நடிகை சாக்ஷி தன்வார்.
இந்தி சீரியல்களில் பிரபலமானவர் சாக்ஷி தன்வார். கடந்த 1973-ம் ஆண்டு ராஜஸ்தானில் ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரிக்கு மகளாகப் பிறந்தார். படிப்பில் சிறந்து விளங்கியதால், சிவில் சர்வீஸஸ் தேர்வுக்குத் தயாரானார். இது அவருடைய விருப்பம் என்பதைத் தாண்டி, அவர் தந்தையின் விருப்பமாக இருந்தது. தந்தையின் கனவுகளை எட்டிப்பிடிக்க முயன்றார் சாக்ஷி.
ஆனால், காலம் எப்போதும் விசித்திரமானது. சமயங்களில் தான் நம் பாதைக்கு அது வழிவகுக்கும். மற்றபடி, அதன் பாதைக்குள் நம்மை இழுத்துச் சென்றுவிடும். அந்த வகையில், 1998-ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றுக்காக தூர்தர்ஷனில் நடைபெற்ற ஆடிஷனுக்கு நண்பரின் அழைப்பின் பேரில் சென்றார். அதில் தேர்வாகி நிகழ்ச்சி தொகுப்பாளராக சின்னத்திரை உலகில் அடியெடுத்து வைத்தார் சாக்ஷி தன்வார்.
நடிப்பு சாக்ஷி தன்வாரின் தேர்வாக இல்லை என்றபோதிலும், இயற்கையாகவே அவருக்குள் இருந்த திறமை அவரின் நடிப்புத் திறமையை உலகிற்கு வெளிக்காட்டியது. இந்தியில் ஒளிபரப்பான ‘கஹானி கர் கர் கி’ (ஒவ்வொரு குடும்பங்களின் கதை) சீரியலில் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்தார் சாக்ஷி. முக்கிய கதாபாத்திரமான இவர்தான் பிரிந்த குடும்பங்களை சேர்ப்பவர். 8 ஆண்டுகள் ஒளிபரப்பான இந்தத் தொடரின் மூலம் பெரும்பாலான வீடுகளில் அழையா விருந்தாளியாக சென்று சேர்ந்தார் சாக்ஷி.
தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தவருக்கு 2011-ல் வெளியான ‘உள்ளம் கொள்ளை போகுதடா’ தொடர் பெரிய அளவில் கைகொடுத்தது. இன்றும் பலருக்கு ஃபேவரைட் தொடராகவும், ‘நாஸ்டால்ஜியா’ அனுபவமாகவும் இருந்து வருகிறது. சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சாதித்துள்ளார் சாக்ஷி.
இந்தியாவின் அதிகபட்ச வசூல் சாதனை படமான ஆமீர்கானின் ‘தங்கல்’ படத்தில் அவருக்கு மனைவியாக நடித்திருந்தார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, கடந்த 2018-ல் பிறந்த 9 மாதங்களே ஆன பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
பெரும்பாலும் ஆடம்பர செலவுகளைத் தவிர்த்து, தேவைக்கு மட்டும் செலவு செய்யும் சாக்ஷி தன்வார் 6 தலைமுறைக்கான சொத்துகளை சேர்த்து வைத்துள்ளதாக பேட்டி ஒன்றில் அவர் உடன் நடித்த நடிகர் ராம் கபூர் தெரிவித்துள்ளார். அதன்படி அவரது சொத்து மதிப்பு ரூ.50 கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.