அன்று சின்னத்திரை நடிகை.. இன்று 1,200 கோடி சொத்துக்கு அதிபதி... யார் தெரியுமா?
11 Nov,2025
வெள்ளித்திரை மட்டுமல்லாமல், சின்னத்திரை சீரியல்களும் ரசிகர்களிடையே தனியிடத்தை பிடித்துள்ளன. சீரியல்கள் தொடங்கி, குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அந்த வகையில் நாம் பார்க்க போகும் இந்த நடிகை சின்னத்திரையில் முன்னணி நடிகையாக இருந்தவர். இன்று ரூ.1,200 கோடி சொத்துக்கு அதிபதியாக உள்ளார். யார் அவர்?
டிவி நடிகையாக இருந்து தொழில்துறைக்குள் நுழைந்து சாதித்தவர் தான் ஆஷ்கா கோரடியா. கடந்த 2002-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஆஜானக் 37 சால் பாத்’ என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். அடுத்து ‘பாபி’, ‘தும் பின் ஜாவோன் கஹா’ போன்ற சீரியல்கள் மூலம் தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார்.
தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் சின்னத்திரை மூலம் வீடுகளுக்குள் நுழைந்தார். மருமகள் கதாபாத்திரங்களில் நடித்தவரை குடும்பங்கள் தங்கள் வீட்டில் ஒருவராக ‘கனெக்ட்’ செய்து கொண்டனர். இதன் மூலம் கிடைத்த வெளிச்சத்தில் இந்தி பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்துகொண்டார். கடந்த 2019-ம் ஆண்டு அவர் கடைசியாக ‘தாயன்’ என்ற ஹாரர் தொடரில் நடித்தார்.
20 ஆண்டுகள் சின்னத்திரையில் கோலோச்சியவர் கரியரின் உச்சத்தில் இருந்தபோது, சின்னித்திரையிலிருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். மேலும் தொழில்துறை முனைவோராக வேண்டும் என்ற தனது கனவை பின்தொடர போவதாக அறிவித்தார். அதன்படி ’Rene Cosmetics’ என்ற மேக்கப் பிராண்ட்டை அகமதாபாத்தில் தொடங்கினார்.
2018-ம் ஆண்டு ரூ.50 லட்சம் முதலீட்டில் இந்த பிராண்ட்-டை உருவாக்கினார் ஆஷ்கா கோரடியா. வெறுமனே கடைகளில் மட்டுமல்லாமல், அமேசான், ஃபிளிப்கார்ட், நைகா, மிந்த்ரா என டிஜிட்டலில் தனது பிராண்டை விற்க தொடங்கினார் ஆஷ்கா கோரடியா. அது தனக்கான வாடிக்கையாளர்களை தேடிக்கொண்டது. இந்தியாவின் தொழில் நகரங்களில் தனது பிராண்டை விரிவுப்படுத்தினார்.
இந்த மேக்கப் பிராண்ட் தொடங்கிய 2 ஆண்டுகளில் ரூ.100 கோடி வருமானத்தை ஈட்டி அசத்தியது. தற்போது இந்த பிராண்ட் ரூ.1,200 கோடி முதல் ரூ.1400 கோடி வரை 2024-ம் ஆண்டு வருமானம் ஈட்டியுள்ளதாக ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆஷ்கா கோரடியா கூறுகையில், “16 வயதில் மும்பைக்கு வந்தேன். 23 வயதில் மும்பையில் சொந்த வீட்டை வாங்கினேன். பெரிய கனவுகளை எப்போதும் துரத்த ஆரம்பித்து வெற்றிபெற்றுள்ளேன்” என தெரிவித்தார்