பிரபல ஹாலிவுட் நட்சத்திரம் ஜீன் ஹேக்மேன் மர்ம மரணம்? மனைவியின் உடலும் வீட்டில் சடலமாக மீட்பு
28 Feb,2025
ஆஸ்கார் விருது வென்ற ஜீன் ஹேக்மேன் மற்றும் அவரது மனைவி பெட்ஸி அரகாவா ஆகியோர் அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள சாண்டா ஃபேவில் உள்ள அவர்களது இல்லத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். 95 வயதான ஹாலிவுட் பிரபலம் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் ஜீன் ஹேக்மேன்.. 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜீன் ஹேக்மேன் இரண்டு முறை ஆஸ்கார் விருதும் வென்றுள்ளார்.
இவர் அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள சாண்டா ஃபேவில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இதற்கிடையே அவரது இன்று வீட்டிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 95 ஆகும். அதேபோல அவரது மனைவி பெட்ஸி அரகாவா (63) என்பவரும் வீட்டில் உயிரிழந்து கிடந்தார். தம்பதியினர் தங்கள் நாயுடன் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. சாண்டா ஃபே கவுண்டி ஷெரிப் (உள்ளூர் போலீஸ் தலைவர்) அடன் மெண்டோசா ஹாலிவுட் நடிகர் ஹேக்மேனின் மரணத்தை உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "ஜீன் ஹேக்மேன் மற்றும் அவரது மனைவி இருவரும் சன்செட் டிரெயிலில் உள்ள அவர்களது இல்லத்தில் இறந்து கிடந்தனர். இது குறித்து விசாரித்து வருகிறோம். அதேநேரம் இது கொலை சம்பவமாக தெரியவில்லை" என்றார். மரணத்திற்கான காரணம் அல்லது சரியாக எப்போது உயிரிழந்தனர் என்பது குறித்த மென்டோசா தெளிவுபடுத்தவில்லை.
1930 இல் பிறந்த ஹேக்மேன் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் இரண்டு முறை ஆஸ்கார் விருதுகளையும் வென்றுள்ளார். தி ஃபிரெஞ்ச் கனெக்ஷனில் ஜிம்மி "போப்பியே" டாய்லாக நடித்ததற்காகச் சிறந்த நடிகர் பிரிவிலும் , அன்ஃபர்கிவனில் லிட்டில் பில் டாகெட்டாக நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகர் பிரிவிலும் ஆஸ்கர் வென்றுள்ளார்.