நடிகர் விஷால் உடல்நிலை எப்படி இருக்கிறது.. அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
நடிகர் விஷால் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மதகஜராஜா படத்தின் பிரி ரீலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஷாலின் கைகள் கடுமையாக நடுங்கியது தொடர்பான வீடியோக்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் பரவின.
இதனால் விஷாலின் உடல் நிலை குறித்த கேள்வி எழுந்த நிலையில் இன்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் மதகஜ ராஜா. கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி நடந்து முடிந்தது. படத்தினை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்து இருந்தது. படத்தில் சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட், அஞ்சலி மற்றும் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு என பலரும் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் விஷால் பாடிய பாட்டு அப்போதே இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது. ஆனால் சில காரணங்களால் அப்போது பொங்கல் பண்டிகையின் போது படம் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.
இந்த நிலையில் மீண்டும் இந்த படத்தை திரைக்கு கொண்டு வர பணிகள் நடந்தன. 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. அதுவும் சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் கூட்டணியில் உருவாகியிருப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதனால் இதற்கான ப்ரோமஷன் வேலைகள் நடந்து வருகிறது. அதன்படி நேற்று மாலை மதகஜ ராஜா படத்தின் ப்ரீ ரிலீஷ் ஷோ நடந்தது.
இந்த விழாவில் இயக்குனர் சுந்தர் சி, நடிகர் விஷால், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மற்றும் நடிகை குஷ்பு உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று இருந்தனர். அப்போது விஷால் பேசும்போது ஒருவித நடுக்கத்துடன் அவரது பேச்சு இருந்தது. மேலும் மைக்கை பிடித்திருந்த கையானது படபடவென நடுங்கியது. வழக்கத்துக்கு மாறாக விஷால் காணப்பட்டார். அவரது பேச்சு மற்றும் கைகள் நடுக்கத்துடன் இருந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். விஷாலுக்கு என்ன ஆச்சு என்று பதறினர். நிகழ்ச்சியிலும் விஷால் பேசும் போது தடுமாறியதால் விழா ஏற்பாட்டாளர்கள் அவரை உட்கார வைத்து நிகழ்ச்சியை தொடங்கினர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தான் விஷாலுக்கு குளிர் காய்ச்சல் இருப்பதாகவும் ,படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சிக்காக தான் இங்கு வந்திருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
எப்படி இருப்பினும் விஷாலை இப்படி பார்த்ததில்லை என்று கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள் விரைவில் அவர் மீண்டு வர வேண்டும் என்று இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் விஷால் உடல்நிலை குறித்த அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கை ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், நடிகர் விஷால் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சுந்தர் சி, விஷாலின் கடின உழைப்பை மக்களுக்கு காட்டுவதற்காகவே இந்த படமானது மீண்டும் திரையிட முயற்சி செய்தோம். அவரை சும்மா ஒன்று சொன்னாலே அதற்காக அப்படியே மாறிவிடுவார். அப்படித்தான் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்கு சிக்ஸ் பேக்ஸ் வைக்க வேண்டும் என்று சொன்னேன்.
அதற்காக விஷால், ஒரு ஆண்டுக்கு சாப்பாடை குறைத்து தண்ணீர் மட்டுமே குடித்து வந்தார். அவரது உழைப்பை மக்கள் பார்க்க வேண்டும் என்றும் பிடித்து இருந்தால் ஏற்றுக்கொள்ளட்டும், இல்லையென்றால் பரவாயில்லை என்று கூறினார்.