இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி.. 'அப்பா' எனும் படத்திற்கு பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'திரு. மாணிக்கம்' எனும் திரைப்படம்- நேர்மையை உறுதியாக பின்பற்றி வாழும் எளிய மனிதரின் வாழ்வியலை பேசும் படைப்பு என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநரும், நடிகருமான நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'திரு .மாணிக்கம்' எனும் திரைப்படத்தில் சமுத்திரக்கனி, நாசர், 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா, கருணாகரன், அனன்யா ,தம்பி ராமையா, வடிவுக்கரசி, ஸ்ரீ மன், இளவரசு, சின்னி ஜெயந்த் ,சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.
பீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை ஜி பி ஆர் கே மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜி பி ரவிக்குமார்- சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி -ராஜா செந்தில் - ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதான பிரத்யேக விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் விக்ரமன்- லிங்குசாமி -அமீர் -ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி பேசுகையில், '' இயக்குநர் நந்தா பெரியசாமியின் திறமை மீது எமக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. இப்படத்தின் கதையை எம்மிடம் விவரித்த போது முதலில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் சொல்லி அவரிடம் சம்மதம் கேளுங்கள் என தெரிவித்தேன்.
அவர் சம்மதம் தெரிவித்த உடன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. 'நாடோடிகள்' படத்திற்காக அனன்யாவை நாங்கள் தேடி கண்டுபிடித்து அறிமுகப்படுத்தினோம். அவர் இந்த படத்தில் எமக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்தின் உணர்வைத் துல்லியமாக அவதானித்து அவர் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படம் நேர்மையாக வாழும் ஒரு மனிதனை பற்றியது. நேர்மை என்றால் இயல்பான மனிதநேயத்துடன் வாழ்வது என பொருள் கொள்ளலாம். இந்த காலத்தில் நேர்மையுடன் வாழ்வதற்கு வேறு பொருள் தருகிறார்கள்.
அதாவது நேர்மையுடன் வாழ்வதைவிட புத்திசாலித்தனமாக வாழ வேண்டும் என்பதைத்தான் இந்த சமூகம் கற்பித்து தருகிறது. படத்தின் கதை, திரைக்கதை அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இயக்குநர் உருவாக்கி இருக்கிறார். குறிப்பாக உச்சகட்ட காட்சி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என உறுதியாக நம்புகிறேன்.'' என்றார்