திடீரென அடித்த ராட்சத அலை.. நடிகை பரிதாபமாக பலி 
                  
                     03 Dec,2024
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 அழகிய கடற்கரையில் அமர்ந்து பிரபல ரஷ்ய நடிகை ஒருவர் யோகா செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக ராட்சத அலை ஏற்பட்டுள்ளது. இந்த அலையில் ரஷ்ய நடிகை சிக்கிய நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இயற்கை தான் இங்கே எல்லாரையும் விட வலிமையானது. நாம் என்ன தான் புதிய புதிய கருவிகளைக் கண்டுபிடித்து இயற்கையை வென்றுவிட்டதாக 
	 
	நினைத்தாலும், அவை அனைத்தையும் ஒரே நொடியில் இயற்கை காலி செய்துவிடும். குறிப்பாகக் கடலின் வலிமையை நாம் எப்போதும் குறைத்து மதிப்பிடவே கூடாது. அப்படி தான் இங்கு ரஷ்ய நடிகை ஒருவர் கடலுக்கு மிக அருகே அமர்ந்து யோகா செய்த நிலையில், அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். விபத்து: ஒவ்வொரு ஆண்டும் தாய்லாந்தில் உள்ள அழகிய கடற்கரை பிரமிக்க வைக்கும் இயற்கையைக் கண்டு ரசிக்கப் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் அங்குச் செல்வார்கள். அப்படி தான் பிரபல ரஷ்ய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா அங்குச் சென்று இருந்தார்.
	 
	 
	அங்குள்ள கோ சாமுய் தீவு அதன் அழகிய கடற்கரைக்குப் பெயர்போனது. அந்த கடற்கரையில் உள்ள பாறை ஒன்றில் அமர்ந்து நடிகை கமிலா யோகா செய்து கொண்டு இருந்தார். அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் அங்கு திடீரென ராட்சத அலை ஏற்பட்டுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட இந்த அலையில் அடித்துச் செல்லப்பட்ட நடிகை கமிலா பரிதாபமாக உயிரிழந்தார். என்ன நடந்தது: 24 வயதான கமிலா விடுமுறையைக் கொண்டாடத் தனது காதலனுடன் தாய்லாந்து சென்றுள்ளார். அப்போது தான் இந்த கொடூரம் 
	 
	அரங்கேறியுள்ளது.. ராட்சத அலை தாக்குவதற்கு சில நொடிகளுக்கு முன்பு அவர் யோகா செய்து கொண்டு இருந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அவர் பாறையின் மேல் பிங்க் நிற யோகா மேட்டில் வெள்ளை நிற உடை அணிந்து அமர்ந்து யோகா செய்து வருகிறார். அவர் தியானத்தில் ஆழ்ந்திருந்த போது எதிர்பாராத விதமாக அலை தாக்கியுள்ளது. அலையில் இருந்து தப்ப அவர் எழுந்து நிற்க முயல்கிறார். இருப்பினும், 
	 
	அலையின் வலிமையால் அவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டார். அருகே இருந்த ஒருவரும் கமிலாவை காக்க முற்பட்டார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரை காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து கமிலாவை தேடும் பணி தொடங்கப்பட்டது. பல்வேறு இடங்களிலும் தேடிய பிறகு இறுதியில் அவர் அடித்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து சில கிமீ தொலைவில் அவரது உடல் மீட்கப்பட்டது. முதல்முறை இல்லை: இந்த குறிப்பிட்ட இடத்திற்கு அவர் வருவது இது முதல்முறை இல்லை. அவர் அடிக்கடி வரும் இடமாகவே இது இருந்துள்ளது. அவரது சமூக வலைத்தள பக்கங்களைப் பார்த்தால் அவர் பல முறை இந்த குறிப்பிட்ட இடத்தில் வந்து தியானம் செய்துள்ளது தெரிகிறது. இதன் காரணமாகவே ஒரே நம்பிக்கையில் அவர் அங்கு ஆழ்ந்த தியானம் செய்துள்ளார். இருப்பினும், எதிர்பாராத விதமாக ராட்சத அலை புரட்டிப் போட்டுவிட்டது.
	 
	 நடிகை கடலில் அடித்துச் செல்லப்பட்டது தொடர்பாக உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மீட்புக் குழுவினர் வெறும் 15 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்புப் பணிகளையும் தொடங்கினர். இருப்பினும், அப்போது அலை தொடர்ச்சியாகப் பயங்கரமாக எழுந்ததால் மீட்புப் பணிகளைத் தொடர முடியவில்லை. இதன் காரணமாகவே மீட்புப் படையினரால் நடிகை கமிலாவை காப்பாற்ற முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது