கருத்துகளைக் கருத்துகளாக எதிர்கொள்வதை தவிர்த்துவிட்டு, இன்று சமூக வலைதளங்களில் ‘கருத்து சுதந்திரம்’ என்ற பெயரில் தனிமனித தாக்குதல்கள் அதிகரித்து விட்டன. இந்த தனிமனித தாக்குதல்களுக்கும், கொச்சையான வார்த்தைகளுக்கும் இரையாகி இருக்கிறார் நடிகை கஸ்தூரி.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு, தெலுங்கு மொழி பேசுபவர்கள் குறித்து சொன்ன கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த சர்ச்சைகளுக்கு நவம்பர் 4-ம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார் கஸ்தூரி.
தொடர்ந்து ‘அமரன்’ படத்தின் பிராமணர் அடையாளம் மறைக்கப்பட்டது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். “சூரரைப் போற்று படத்தில் கேப்டன் கோபிநாத்தை மாறன் எனப் பெயர் மாற்றி, அவருடைய அடையாளத்தை மாற்றி படத்தில் காட்சிப்படுத்தினார்கள். ஆனால், வில்லனை மட்டும் பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகக் காட்சிப்படுத்துகிறார்கள்” என்ற வாதத்தை முன்வைத்தார். இது பலராலும் பொதுவாக எழுப்பப்பட்ட கேள்வி.
ஒரு கட்டத்தில் தெலுங்கு மக்கள் குறித்து தான் பேசிய கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று கூறி வருத்தம் தெரிவித்த கஸ்தூரி, தன்னுடைய பேச்சை வாபஸ் வாங்கி கொள்வதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பக்கத்தில், “நான் வெளிப்படுத்திய கருத்துகள் குறிப்பிட்ட சூழல் சார்ந்து சில நபர்கள் குறித்து பேசியவையே தவிர, பெரும்பான்மையான தெலுங்கு சமூகத்தை குறிவைத்து சொல்லபட்டவை அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். குடும்பம் போன்ற எனது தெலுங்கு சமூகத்தை புண்படுத்துவதோ, காயப்படுத்துவதோ என்னுடைய நோக்கமல்ல. கவனக்குறைவாக அப்படி எதுவும் நடந்திருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
மேலும் நவம்பர் 6-ம் தேதி வெளியிட்ட மற்றொரு பதிவில், “மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் என்றும் அடிபணியேன். பின்வாங்கவே மாட்டேன் என்ற என் பிடிவாதம் சகோதர மனப்பான்மையுடன் அறிவுறித்தியதால் தளர்ந்தது. மீண்டும் மீண்டும் சொல்கிறேன். தெலுங்கர் என்றோ தெலுங்கு மக்கள் குறித்தோ பேசவேயில்லை இல்லை இல்லை. தெலுங்கு என்று பேசியதை வாபஸ் பெறுகிறேன்” என்றும் தெரிவித்திருந்தார்.
தனிமனித தாக்குதல்கள்: ‘நான் பேசிய கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. நான் அவ்வாறு பேசவில்லை’ என்று விளக்கம் அளித்து, வருத்தம் தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரியை விடாது கருப்பாக துரத்துகிறது தனி மனித தாக்குதல்கள். குறிப்பாக பெண் என்பதாலேயே அவர் மீதான தாக்குதல்கள் இன்னும் தீவிரமடைந்துள்ளதை காண முடிகிறது.
சமூக வலைதளங்களில் 'பாப்பாத்தி' போன்ற சாதி ரீதியிலான விமர்சனம் தொடங்கி அச்சில் கூட ஏற்ற முடியாத அளவுக்கு ஆபாச வார்த்தைகள், கொச்சையான கமென்ட்ஸ்கள் வரை பதிவு செய்வது வருகின்றனர் ஒரு சிலர். இந்த அருவருக்கத்தக்க ஆபாச தாக்குதல்களை குறித்து எதிர்ப்பு தெரிவிக்காமல் சமூக ஆர்வலர்களும் பெண்ணுரிமை பேசுபவர்களும் கண்டும் காணாமல் கடக்கின்றனர் என்றும் கள்ளமௌனம் சாதிக்கின்றனர் என்றும் விமர்சனம் சமூகவலைத்தளங்களில் காணப்படுகிறது.
மேலும், கஸ்தூரியின் தனிமனித ஒழுக்கம் சார்ந்த கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. ஒரு பெண் பொதுவெளியில் களமிறங்கி தன்னுடைய கருத்துகளை துணிச்சலாக முன்வைக்கும்போது, அவரை ஒடுக்க இச்சமூகம் கையிலெடுக்கும் மோசமான ஆயுதம், அவரின் தனிமனித ஒழுக்கமும், அந்தரங்கம் சார்ந்த துலாவலும்!
கல்வியறிவில் முன்னேறி, நாகரிகமடைந்த தமிழ் சமூகத்தின் இத்தகைய மோசமான செயல்பாடுகள், சம்பந்தப்பட்டவரின் உளவியலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தோ, பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையில் ஏற்படுத்தும் தீவிர பாதிப்பு குறித்தோ கவலைப்படுவதில்லை.
முற்போக்காக தன்னை காட்டிக்கொள்ளும் கூட்டமும் இத்தகைய அறிவிலித் தனத்தில் மூழ்கி கிடப்பது தான் வேடிக்கை. பெரியார், அம்பேத்கரை தனது ஆசானாக கொண்ட சிலரும், மாற்று கருத்துகள், கொள்கை முரண்களின் வழி பேசி எதிர்கொள்ளாமல், கும்பலோடு கோவிந்தாவாக பெண்ணின் நடத்தையையும், அவரின் தனிமனித ஒழுக்கத்தையும் கிண்டலும், கேலியும் செய்வது அபத்தம்.
இங்கே கஸ்தூரியின் கருத்தில் உள்ள முரண்களை விமர்சிக்கலாம், அதற்கு மாற்று கருத்தை முன்வைப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், அதன் எல்லை தனிமனித தாக்குதலாகவும், பெண்ணின் நடத்தை சார்ந்தும் விரிவடைவது ஆபத்தானது. இது அரசியல் களத்திலும், பொது வெளியிலும் பெண்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக சொல்ல முடியாத சூழலை உருவாக்கி முடக்கிவிடும் அபாயத்துக்கு கொண்டு செல்லும் என்பதை சமூகவலைதள சமூகம் புரிந்துகொள்வது நல்லது.