மன்னர் கூடசேர்த்த அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள்.. நடிகை கஸ்தூரி பேச்சால் 'பரபர'!
04 Nov,2024
300 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்களின் அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள் தெலுங்கர்கள்; அவர்கள் இன்று தமிழர்கள் இனம் என சொல்லும் போது எப்பவோ வந்த பிரமாணர்களை தமிழர்களே இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? என்று நடிகை கஸ்தூரி பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆந்திராவில் இருந்து மலம் அள்ள வந்தவர்கள் அருந்ததியர்கள் என பேசிய பஞ்சாயத்தே முடியாத நிலையில் அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள் என பேசியிருப்பது கடும் சர்ச்சையாகி இருக்கிறது.
ஆரியர்கள் வருகை தந்தது உண்மை: பிராமணர்கள் பாதுகாப்பு கோரும் ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசியது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி பேசியதாவது: சுதந்திரப் போராட்டத்தில் உயிரைக் கொடுத்தவர்கள் பெரும்பாலானவர்கள் அந்தணர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் அந்தணர்கள். தமிழர்கள். ஆரிய வந்தேறி.. ஆரிய வந்தேறி என்கிறார்கள்.. யார் ஆரிய வந்தேறி? கைபர் போலன் வழியாக பல மதத்தினர் வந்தாங்க.. அதை எல்லாம் பேச ஆரம்பிச்சா உங்க ஓட்டுதானே குறையும்.. 4,000 வருஷத்துக்கு முன்னாடி வந்ததாக சொல்லப்படுவதைப் பற்றி சொல்றீங்களே.. ஆரியர்கள் இங்கே வருகை தந்த போது ஷத்ரியர்கள் இடத்தில் வன்னியர்கள் இணைந்து கொண்டார்களோ, வைசியர் பாகுபாட்டில் செட்டியார்கள், முதலியார்கள், வேளாளர்கள் இணைந்து கொண்டார்களோ கோவில் பணிகளைச் செய்கிறவர்களில் சிவாச்சாரியார்கள், ஐயர்கள், ஐயங்கார்கள் , பண்டாரங்கள் போன்றவர்கள் இணைந்து கொண்டார்கள்.
அந்தப்புர சேவைக்கு வந்த தெலுங்கர்கள்: அதை எல்லாம் மறந்துவிட்டு தெரியாமத்தான் கேட்கிறேன்.. 300 வருஷம் முன்னாடி ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிரோ சேவைகள் செய்ய வந்தவர்கள் எல்லாம் தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை நீங்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்? நீங்கள் யார் தமிழர்கள்?. அதனால்தானே தமிழர் முன்னேற்றக் கழகம்னு பெயர் வைக்க முடியமலை.. திராவிடர்கள் பெயர் கண்டுபிடிச்சீங்க.. இவ்வாறு கஸ்தூரி பேசினார்.
சீமான் போல பேச்சு: நடிகை கஸ்தூரியின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆந்திராவில் இருந்து மலம் அள்ள வந்தவர்கள் அருந்ததியர்கள் என பேசியது சர்ச்சையானது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. தற்போது சீமானைத் தொடர்ந்து தெலுங்கர்களை தமிழ்நாட்டு மன்னர்களின் அந்தப்புர பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் என நடிகை கஸ்தூரி பேசியிருப்பது புதிய பஞ்சாயத்தை கிளப்பிவிட்டிருக்கிறது.