-
படப்பிடிப்பு நிறுத்தம் நடைபெற கூடாது என்பது தான் நடிகர் சங்கத்தின் நிலைப்பாடு.இது தொடர்பாக இந்த வாரத்தில் தயாரிப்பாளர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது - நடிகர் சங்க செயற்குழு கூட்டத்திற்கு பிறகு தலைவர் நாசர், துணை தலைவர் பூச்சி முருகன் பேட்டி
தயாரிப்பாளர் சங்கத்துக்கும் நடிகர் சங்கத்துக்கும் உள்ள பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராயர் நகர், அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடத்தில் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் நேரில் பங்கேற்காத பொதுச்செயலாளர் விஷால் மற்றும் துணைத் தலைவர் கருணாஸ் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்கின்றனர்.
செயற்குழு கூட்டத்தில், நடிகர்கள் தனுஷ், விஷால், கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் படங்களுக்கு கட்டுப்பாடு, நடிகர்களின் சம்பள பிரச்சினை, ஆகஸ்ட் 16 முதல் புதிய படம் தொடங்க கூடாது, நவம்பர் 1ம் தேதி முதல் படப்பிடிப்பு நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்த தீர்மானம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த, நடிகர் சங்க தலைவர் நாசர், திரைப்படத் துறை மேலும் மேலும் உயர்ந்த தளத்திற்கு கொண்டு சேர்ப்பது குறித்து ஆலோசனை செய்தோம். இந்த செயற்குழு கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம் குறித்து சில நல்ல முடிவுகள் எடுத்துள்ளோம். அதை அவர்களுடன் பகிர்ந்துக்கொள்ள இருக்கிறோம்.தயாரிப்பாளர் சங்கத்துடனான பிரச்சனைகள் குறித்து அவர்களிடம் தான் தெரிவிக்க முடியும் பத்திரிக்கை மூலமாக தெரிவிப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
அதனை தொடர்ந்து பேசிய துணைத் தலைவர் பூச்சி முருகன், பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என தயாரிப்பாளர் சங்கம் எங்களுக்கு கடிதம் எழுதி உள்ளது. நாங்களும், தயாரிப்பாளர் சங்கமும் நட்புணர்வுடன் இருக்கிறோம்,எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை.
அவர்கள் சில நடிகர்கள் மீது எங்களிடம் புகார் கொடுப்பதும் நாங்கள் அதற்கு பதில் கொடுப்பதும் வழக்கமாக நடைபெறும் ஒரு விசயம் தான். எதுவாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள வேண்டும் என நாங்கள் தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை வைத்தோம்.அவர்களும் அதனை ஆமோதித்து நேற்று எங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு கடிதம் கொடுத்துள்ளார்கள்.
செப்டம்பர் 8 ஆம் தேதி நடிகர் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.