சித்ரா வழக்கில் திருவள்ளூர் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி ரேவதி தீர்ப்பு வழங்கினார்.
10 Aug,2024
பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020 டிசம்பர் 9-ம்தேதி சென்னை பூந்தமல்லி அடுத்தநசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக சித்ராவின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில், அவர் 2020 டிசம்பர்15-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர், 2021 மார்ச் 2-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், கடந்த 25ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஹேம்நாத் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், நானும் என் மனைவி சித்ராவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தோம். மேலும், என் மனைவி சித்ரா இறந்த உடனே நானும் இறந்து விடலாம் என்ற நோக்கில் இருந்தேன். ஆனால் என் மனைவியை கொலை செய்தது நான் தான் என என்மீது பழி சுமத்தியவர்கள் முன் நான் குற்றம் செய்யாதவன் என்பதை நிருபிக்கவே உயிரோடு இருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் காவல்துறையினர் சின்னத்திரை நடிகை சித்ராவுடன் தொழில் ரீதியாக தொடர்பில் இருந்த அரசியல், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் யார் என்பதை பட்டியலிட்டுள்ளனர். இவர்களை போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வந்து தீவிரமாக விசாரித்தனர். இந்த வழக்கின் விசாரணையானது திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் நிரபராதி எனவும் இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக கூறி திருவள்ளூர் மகிளா விரைவு நீதிமன்ற.ம் நீதிபதி ரேவதி தீர்ப்பளித்தார்.