படப்பிடிப்பில் ஸ்டன்ட் கலைஞர் உயிரிழப்பு: ‘சர்தார் 2’ படக்குழு இரங்கல்
17 Jul,2024
சென்னை: கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவத்துக்கு படக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.
படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “எங்கள் ‘சர்தார் 2’ படத்தில் ஸ்டன்ட் கலைஞராக பணியாற்றிய ஸ்டன்ட் யூனியனைச் சேர்ந்த ஏழுமலை மறைவுச் செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நேற்று (ஜூலை 16) மாலை ஸ்டன்ட் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு படப்பிடிப்புப் பணிகளை நிறைவு செய்யும் வேலையில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அப்போது ஏழுமலை 20 அடி உயரம் கொண்ட ஒரு மேடையிலிருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயம் அடைந்தார்.
உடனடியாக அவரை அருகில் இருந்த பன்னோக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு மருத்துவர் குழு அவரை பரிசோதித்து சிகிச்சை அளித்தது. எனினும் இரவு 11.30 மணியளவில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், ஏழுமலை துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.
ஏழுமலையில் குடும்பத்தினருக்கு எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயரமான தருணத்தில் நாங்கள் அவர்களோடு உறுதுணையாக நிற்கிறோம்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சர்தார் 2’. இந்தப் படத்தில் கார்த்தி இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் ரூ.100 கோடி வசூலித்து வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நேற்று நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பில் இந்த விபத்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது