நடிகர் சல்மான்கானை கொல்ல கூலிப்படைக்கு ரூ25 லட்சம்.. தமிழகம் வழியே இலங்கை தப்ப ஸ்கெட்ச்!
03 Jul,2024
பாலிவுட் நடிகர் சல்மான்கானை படுகொலை செய்ய சிறையில் இருந்து கொண்டே தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூலிப்படைக்கு ரூ25 லட்சம் கொடுத்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சல்மான்கானை மைனர் சிறுவர்களை வைத்து படுகொலை செய்து விட்டு
தமிழ்நாட்டுக்கு வந்து இலங்கைக்கு தப்பிச் செல்லவும், திட்டம் தீட்டப்பட்டதாக மும்பை போலீசார் தாக்கல் செய்த 350 பக்க குற்றப்பத்திரிகையில் பகீர் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மும்பையில் நடிகர் சல்மான்கான் வீடு மீது கடந்த ஏப்ரல் 14-ந் தேதி மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். மகாராஷ்டிரா மாநிலத்தை அதிரவைத்த இந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் குஜராத்தைச் சேர்ந்த விக்கி குப்தா, சாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு துப்பாக்கிகளை சப்ளை செய்ததாக சோனு பிஷ்னோய், அனுஜ் தாபன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் போலீஸ் லாக்கப்பில் அனுஜ் தாபன் தற்கொலை செய்து கொண்டார்.
சல்மான் கானை கொல்ல பகீர் பிளான் இந்த வழக்கின் தொடர்ச்சியான விசாரணையில் மும்பை சிறையில் இருக்கும் நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் உட்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில்தான் மும்பை போலீசார் பல அதிர்ச்சித் தகவல்களுடன் 350 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். மும்பை போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், சிறையில் இருந்தபடியே சல்மான்கானை கொலை செய்த லாரன்ஸ் பிஷ்னோய்தான் ரூ25 லட்சத்தை கூலிப்படைக்கு
ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். சினிமா படப்பிடிப்பு தளங்கள் அல்லது பொது இடங்களில் சல்மான்கானை கொலை செய்வதுதான் திட்டமாம். இதற்காக மைனர் சிறுவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. ஏகே 47 ரக துப்பாக்கிகளைப் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரவும் திட்டமிட்டிருந்தனராம். மேலும் சல்மான்கானை படுகொலை செய்துவிட்டு மகாராஷ்டிராவில் இருந்து தமிழ்நாட்டு தப்பி ஓடி வந்து பின்னர் இலங்கைக்கு கடல்வழியே சென்று தலைமறைவாகவும் திட்டம் தீட்டப்பட்டிருந்ததது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.