குளிர்பானத்தில் மயக்க மருந்து.. அம்பத்தூர் சினிமா தயாரிப்பாளர் கைது
03 Jun,2024
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண்ணை நாசம் செய்த சினிமா தயாரிப்பாளர் ஒருவர், அதனை இண்டர்நெட்டில் விடப்போவதாக மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கொளத்தூரைச் சேர்ந்த 30 வயதாகும் முகமது அலி என்பவர் சினிமா தயாரிப்பாளர் ஆவார். அவர் சென்னை கீழ் அயனம்பாக்கத்தில் ஆபிஸ் வைத்து நடத்தி வருகிறார். இவருடை ஆபிஸில் சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அந்த இளம் பெண்ணை திருமண ஆசை காட்டியும், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தும் பலாத்காரம் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த பெண் சென்னை அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் இளம் பெண் கூறியிருப்பதாவது: சினிமா தயாரிப்பாளர் முகமது அலி தனக்கு திருமணம் ஆனதை மறைத்துவிட்டார். அத்துடன் என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகளை என்னிடம் கூறினார். ஒரு நாள் எனக்கு குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். அதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டார். இதில் கர்ப்பமான எனக்கு, சத்து மாத்திரைகள் எனக்கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கருவை கலைக்க வைத்தார். கருக்கலைப்பு குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும், என்னை பாலியல் பலாத்காரம் செய்தபோது எடுத்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.5 லட்சம் கேட்டும் மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அந்த புகார் மனுவில் அந்த இளம் பெண் கூறியிருந்தார்.
அதன்பேரில் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணின் குற்றச்சாட்டுகள் உண்மை என்பது தெரிய வந்தது. இதையடுத்து சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் மகளிர் போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இந்த சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.