அம்மாவைப் பற்றி பேசி காயப்படுத்தினார்கள்... நடிகை ஜான்வி கபூர் வருத்தம்!
24 May,2024
”அம்மா நினைவுகளை திடீரென ஒளிபரப்பு செய்ததும் கதறி அழ ஆரம்பித்து விட்டேன். அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டேன்” என நடிகை ஜான்வி கபூர் மறைந்த தனது அம்மா ஸ்ரீதேவி பற்றி பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் எண்பதுகளில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு பெண் குழந்தைகள். தன் அழகின் மீதும், உடல் நலத்தின் மீதும் அதீத அக்கறை கொண்டவரான ஸ்ரீதேவி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் குளியலறையில் மூழ்கி எதிர்பாராத விதமாக உயிரிழந்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், ஜான்வி கபூர் ‘தடக்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றிருக்கிறார். அப்போது நிகழ்ச்சி குழுவினர் ஜான்வி கபூருக்கு முன்கூட்டியே எதுவும் சொல்லாமல் ஸ்ரீதேவி குறித்த நெகிழ்ச்சியான நினைவலைகளை வீடியோ காட்சிகளாக ஒளிபரப்பியுள்ளனர்.
இது ஜான்வியை எமோஷனலாக்கியுள்ளது. இதுபற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ள ஜான்வி, “நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. அம்மா பற்றிய நினைவலைகள் வந்ததும் என்னால் அங்கிருக்க முடியவில்லை. கதறி அழுதுகொண்டே கேரவனுக்குள் சென்று விட்டேன். பேனிக் அட்டாக் வந்துவிட்டது. ஆனால், அதை எல்லாம் கட் செய்துவிட்டு அம்மாவின் நினைவலைகள் வந்த போது நான் புன்னகைத்து, கைத்தட்டி ரசிப்பது போன்று எடிட் செய்து ஒளிபரப்பினார்கள்.
இதைப் பார்த்தப் பலரும் ’அம்மாவின் இறப்பு என்னை பாதிக்கவில்லை. ஜாலியாக இருக்கிறேன்’ என்று சொல்லி காயப்படுத்தினார்கள்.
பேட்டிகளில் அம்மாவைப் பற்றி உருக்கமாக எதுவும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றால் எனக்கு வருத்தமில்லை என்று சொல்லி விமர்சிப்பார்கள். நான் நடந்ததை ஏற்றுக் கொண்டு சந்தோஷமாக இருக்க முயற்சிக்கிறேன். ஆனால், என்னை காயப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.