தெலுங்கு சினிமாவில் நடிப்பது கஷ்டம்.-. பரபரப்பைக் கிளப்பிய தனுஷ் பட நடிகை!
11 May,2024
மலையாள சினிமாவைக் காட்டிலும் தெலுங்கு சினிமாவில் நடிப்பது சிரமமாக இருக்கிறது என நடிகை சம்யுக்தா மேனன் ஷாக் ஸ்டேட்மென்ட் கொடுத்திருப்பது பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது.
தமிழில் தனுஷ் நடித்த ‘வாத்தி’ படம் மூலம் பிரபலமானார் சம்யுக்தா மேனன். கேரளா, பாலக்காட்டைச் சேர்ந்த இவர் தொடர்ச்சியாக மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். மலையாள சினிமாவில் நடிப்பது தான் தனக்கு எளிது எனவும் தெலுங்கு படங்களில் நடிப்பது தனக்கு சிரமமான விஷயம் எனவும் அவர் பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சமீபத்திய பேட்டியில், “மலையாளப் படங்களில் கதைதான் ஹீரோ. அதனால், அங்கு மேக்கப், காஸ்ட்யூம் இதைக்காட்டிலும் நடிப்பிற்குதான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், தெலுங்கு சினிமா அப்படி இல்லை. அங்கு கமர்ஷியல் விஷயங்கள் தான் எடுபடும் என்பதால் அங்கு மேக்கப், காஸ்ட்யூம் மீது அதிகம் கவனம் செலுத்த வைக்கிறார்கள்.
தெலுங்கு படம் ஒன்றில் ஒரு காட்சிக்கு நடிக்கத் தயாராகிக் கொண்டிருந்தேன். நடிக்க கேமரா முன்னால் நின்றபோது திடீரென காஸ்ட்யூமர் வந்து என் சேலை சரியில்லை என்று சொல்லி சரி செய்ய ஆரம்பித்து விட்டார்.
நான் நடிக்க வேண்டிய காட்சியே மறந்து போய், அதில் என் கவனம் சென்று விட்டது. இது சொல்லும்போது சாதாரணமாக இருக்கலாம். ஆனால், இதுதான் உண்மை” என்று பேசியிருக்கிறார் சம்யுக்தா. கடந்த வருடம் இவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘விருபாக்ஷா’ படம் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.