தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்!
27 Apr,2024
திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் அவரது மனைவி நேகா மீதும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் வீட்டுப் பணிப்பெண் லட்சுமியை தற்கொலைக்குத் தூண்டியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
’ஸ்டுடியோ கிரீன்’ தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டுப் பணிப்பெண் லட்சுமி நேற்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. தி. நகரில் வசித்து வரும் ஞானவேல்ராஜா மனைவி மேகாவின் தங்க நகைகள் காணவில்லை என அவரது மேலாளர் தினேஷ் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
மேலும், தங்கள் வீட்டில் வசித்து வரும் லட்சுமி என்ற பணிப்பெண் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்கள். ஆனால்,தான் எந்தப் பொருட்களையும் எடுக்கவில்லை என லட்சுமி கூறினார். ஆனாலும், அவரை விசாரணைக்கு வரச்சொல்லி இருக்கிறார்கள்.
இதனால் மன உளைச்சல் அடைந்த லட்சுமி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட நிலையில், அவரை மீட்டு சென்னை, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதனை அடுத்து, தனது தாயை தற்கொலைக்குத் தூண்டியதாக லட்சுமியின் மகள் மாம்பலம் காவல்நிலையத்தில் ஞானவேல்ராஜா மற்றும் அவரது மனைவி மீது புகார் கொடுத்திருக்கிறார்.
விசாரணை என்ற பெயரில் தனது தாயை சித்திரவதை செய்ததாகவும் அதனால்தான் அவர் தற்கொலைக்கு முயன்றார் என்றும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் ’பருத்தி வீரன்’ பட தயாரிப்பில், இயக்குநர் அமீரை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஏமாற்றியதாக சர்ச்சையில் சிக்கியதை அவரது பணிப்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவத்தில் அடுத்த சர்ச்சை கிளம்பியுள்ளது.