விரைவில் நடிகை ராக்கி சாவந்த் கைது செய்யப்படுவார்,
23 Apr,2024
,
தனது முன்னாள் மனைவி ராக்கி சாவந்த் துபாயில் இருந்து இந்தியா திரும்பியவுடன் கைது செய்யப்படுவார் என்று உறுதியாக நம்புவதாக அவரது முன்னாள் கணவர் ஆதில் கான் துரானி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
நடிகையும், மாடல் அழகியுமான ஷெர்லின் சோப்ரா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பை அம்போலி போலீஸில் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், தனது ஆபாச படங்களை நடிகை ராக்கி சாவந்த் சமூகவலைதளங்களில் முறைகேடாக பரப்பியதாக கூறியிருந்தார். இந்த புகார் தொடர்பாக போலீஸார் ராக்கி மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க, முன்ஜாமீன் கோரிய ராக்கியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதாக அவரது முன்னாள் கணவர் ஆதில் கூறினார். மேலும், ராக்கி நான்கு வாரங்களுக்குள் மும்பை காவல்துறையில் சரணடையுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
ஆதில் மேலும் கூறியதாவது, “முதலில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி ராக்கி விண்ணப்பித்தார். ஆனால், அது நிராகரிக்கப்பட்டது. பின்னர், அவரது மனு உயர்நீதிமன்றத்தில் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றனர். இப்போது அதுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
நான்கு வாரங்களில் ராக்கி சரணடையுமாறு நீதிமன்றம் கூறியுள்ளது. இல்லையென்றால், துபாயில் இருந்து ராக்கி திரும்பியவுடன் கைது செய்யப்படுவார்” என்றார்.
ராக்கி சாவந்த் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) முறையே அவதூறு மற்றும் குற்ற நோக்கத்திற்கு உடந்தையாக இருப்பது தொடர்பான பிரிவுகள் 500, 504 மற்றும் 34, தகவல் மற்றும் தொழில்நுட்பச் சட்டம் (ஐடி சட்டம்) பிரிவு 67 (ஏ) ஆகியவற்றின் கீழ் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ராக்கி -ஆதில் இருவரும் கடந்த வருடம் ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணமான ஒரே மாதத்தில் ஆதிலுக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் ராக்கி குற்றம் சாட்டி பல வழக்குகளைத் தொடர்ந்தார். ஆனால், ஆதில் அதனை மறுத்தார்.
இந்த வழக்கு குறித்து ஆதில், “நான் குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் கூறவில்லை. ஆனால் ராக்கியும் சமமான குற்றவாளி. எனவே அவர் சரணடைய வேண்டும். ராக்கி துபாயில் தலைமறைவாகிவிட்டார். அவளுக்கு எதிராக வாரண்ட் உள்ளது. அவள் மீது பல வழக்குகள் உள்ளன. அவள் இந்தியா வந்தவுடன் கைது செய்யப்படுவாள்” என்றார்.