பிரபல இயக்குனர் 'பசி’ துரை காலமானார்!
22 Apr,2024
தமிழ் திரையுலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற பசி திரைப்படத்தின் இயக்குனர் துரை உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 84.
1979 ம் ஆண்டு டிசம்பர் 21 ம் தேதி வெளியான திரைப்படம் ‘பசி’. சென்னையின் கூவம் ஆற்றின் கரையோரம் வாழும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.
சிறந்த இயக்குனர், திரைப்படம், சிறந்த நடிகை என்று மூன்று தேசிய விருதுகளோடு மாநில அரசு விருதுகள், பிலிம்பேர் விருதுகள் என பல்வேறு விருதுகளை குவித்த எதார்த்த திரைப்படம். ஜெயபாரதி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்த திரைப்படத்தின் இயக்குனர் துரை, ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்கப்பட்டார்.
இயக்குநர் மட்டுமன்றி கதாசிரியர், தயாரிப்பாளர் என்ற பன்முகத் திறமை கொண்டவர் துரை. ஏழை மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக திரைப்படங்களில் எடுத்து கூறியதற்கு இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இவருடைய இயற்பெயர் செல்லதுரை. 25.02.1940-ம் வருடம் தந்தை சாமுவேல் ஜாக்கப், தாய் - ராஜம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர். சிறு வயதிலேயே சினிமா பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. ஓட்டேரியிலுள்ள ஒரு பள்ளியில்தான் படித்தார். படிப்பில் சிறிதும் ஆர்வமில்லை. அதனால் சினிமா சம்பந்தப்பட்ட வேலைகளில் சேர்ந்தவர் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து திரைப்பட இயக்குனர் ஆனார்.
பசி திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அதே போன்ற படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குனரான இவர் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
கமலின் நீயா, ரஜினியின் ஆயிரம் ஜென்மங்கள், சிவாஜியின் துணை உட்பட தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்கள் அனைவரையும் வைத்து திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடந்த பல வருடங்களாக திரையுலகில் இருந்து ஒதுங்கி சென்னையிலேயே வாழ்ந்து வந்த இவருக்கு மனைவி இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அவர் இன்று உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு திரை உலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.