
ஹூப்ளியில் கல்லூரி வளாகத்திற்குள் மாணவி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கர்நாடக திரையுல நட்சத்திரங்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
கர்நாடகா மாநிலம், ஹூப்ளியில் உள்ள சவடத்தி தாலுகாவில் உள்ள முனவல்லியைச் சேர்ந்தவர் ஃபயாஸ். இவர் ஹூப்ளியில் உள்ள பிவிபி கல்லூரியில் பிசிஏ படித்து வந்தார்.
இதே கல்லூரியில் மாநகராட்சி உறுப்பினரான நிரஞ்சன் ஹிரேமத்தின் மகள் நேஹா எம்சிஏ படித்து வந்தார். கடந்த ஆறு மாதங்களாக ஃபயாசும், நேஹாவும் நண்பர்களாக பழகியுள்ளனர்.இந்த நிலையில் நேஹாவை ஃபயாஸ் ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்துள்ளார்.
இது சம்பந்தமாக நேஹாவிடம் அவர் கூறியுள்ளார். ஆனால், அவருடைய காதலை நேஹா ஏற்கவில்லை. அத்துடன் ஃபயாஸிடம் இருந்து விலக ஆரம்பித்தார். இதன் காரணமாக அவரை நேற்று முன்தினம் கல்லூரி கேன்டீனில் வைத்து ஃபாயஸ் கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நேஹா பரிதாபமாக உயிரிழந்தார். அவரைக் கொலை செய்த ஃபயாஸை போலீஸார் கைது செய்துள்ளனர். காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், கர்நாடகா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நேஹாவை கொலை செய்த ஃபயாஸ்க்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கர்நாடகாவைச் சேர்ந்த திரையுலக பிரபலங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து நடிகர் துருவா சர்ஜா தனது எக்ஸ் தளத்தில், “சகோதரி நேஹா ஹிரேமத் கொல்லப்பட்டது மிகவும் கேவலமான செயல். கல்லூரி வளாகத்தில் கொலை செய்வது மிகவும் கவலை அளிக்கிறது. இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றி அரசு விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். ஜெய் ஆஞ்சநேயா' என பதிவிட்டுள்ளார்.
இக்கொலை தொடர்பாக நடிகை பிரியா சவடி கூறுகையில், முஸ்லிம்கள் தங்கள் பெண் குழந்தைகளைத் தெருவில் விடுகிறார்களா? ஆனால், அவர்களது பையன்பளுக்கு நல்ல பெண்கள் தேவை. அரசாங்கங்கள் ஐந்து அல்லது பத்து வருடங்கள் ஆட்சியில் இருக்கும். அவர்களுக்கு இதுபோன் சம்பவங்கள் நினைவில் கூட இருக்காது. அனைத்தையும் மறைத்து விடுவார்கள் என்று ஆவேசமாக கூறினார்.
நடிகை காவ்யா சாஸ்திரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நேஹா ஹிரேமத்தின் கொலை கண்டிக்கத்தக்கது. அவளைக் கொன்றவனை யார் தண்டிப்பது? அவன் வீட்டில் யாரும் இல்லையா? கொலையாளி ஃபயாஸ் என்கவுன்டர் செய்யப்பட வேண்டும். அவருக்கு இரக்கம் தேவையில்லை. கொலையாளிக்கு வழங்கப்படும் தண்டனை அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.