மக்களுக்கு நல்லது செய்வதற்கு எதற்குப் பயப்பட வேண்டும்?. நடிகர் விஜய் ஆண்டனி ஓபன் டாக்!
14 Apr,2024
"எதிர்காலத்தில் அரசியல் வருவது தொடர்பான யோசனை இல்லை. ஆனால் இல்லை என்பதும் உறுதியாக சொல்லவில்லை" என்று நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'ரோமியோ' திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இதையடுத்து மதுரையில் இத்திரைப்படம் வெளியான கோபுரம் சினிமாஸ் திரையரங்குக்கு விஜய் ஆண்டனி இன்று சென்றார். ரசிகர்களோடு திரைப்படத்தை பார்த்த அவர், பின்னர் அவர்களுடன் கேக் வெட்டி வெற்றியைக் கொண்டாடினார்.
இதன் பின் அவர் செய்தியாளர்களிடம், "ஓட்டுக்குப் பணம் வாங்குவது சரி என்று சொல்லவில்லை. வறுமையில் இருப்பவர்களுக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று தான் சொன்னேன். நான் சாதாரணமாக பேசுவது சர்ச்சையாக்கப்படுகிறது. அந்த சிந்தனைகள் எனக்கு கிடையாது. அரசியல் சாதாரணமான விஷயம் அல்ல.
ரஷ்யா - உக்ரைன் போரைப் பாருங்கள். நமது நாடு எப்படி அமைதியாக இருக்கிறது என்பதை வெளிநாடுகளுக்கு சென்று பாருங்கள் தெரியும். யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவை அமைதியாகதான் வைத்துக் கொள்கிறார்கள். சுதந்திரத்திற்கு பின்பு போர் நடந்திருக்கிறதா? சிலர் தவறு செய்திருக்கலாம். அதனால் ஆட்சியை தவறு என சொல்ல முடியாது. வருங்காலத்தில் அரசியல் வருவது தொடர்பான யோசனை இல்லை. ஆனால் இல்லை என்பதும் உறுதியாக சொல்லவில்லை. எனது வேலையைப் பார்ப்பதற்கு நேரம் சரியாக இருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்வதற்கு எதற்குப் பயப்பட வேண்டும். வேண்டாம் என்பது இல்லை. இப்போதைக்கு யோசனை இல்லை" என்றார்.