திரைப்பட தயாரிப்பாளர் ராஜ்குமார் கோலி காலமானார்!
24 Nov,2023
நடிகர் அர்மான் கோலியின் தந்தையும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ராஜ்குமார் கோலி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பிரபல பாலிவுட் மூத்தத் தயாரிப்பாளரும், இயக்குநருமான ராஜ்மார் கோலி தனது 95-வது வயதில் திடீர் என ஏற்பட்ட மாரடைப்பால் இன்று காலை மும்பையில் காலமானார். இதனை அவரது மகனான அர்மான் கோலியின் மக்கள் தொடர்பாளர் விஜய் குரோவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ராஜி இன்று காலை காலமானார். காலை 8 மணியளவில் குளிக்கச் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.
எனவே, அர்மான் விரைந்து சென்று குளியலறையின் கதவை உடைத்து பார்த்தபோது, அவர் மயங்கி விழுந்து கிடந்ததைக் கண்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை மருத்துவர்களும் உறுதி செய்தனர். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும்” என்றார்.
ரீனா ராய், சுனில் தத், ஃபெரோஸ் கான், சஞ்சய் கான், ரேகா மற்றும் மும்தாஜ் நடித்த ’நாகின்’ (1976) போன்ற பல பெரிய பட்ஜெட் படங்களை ராஜ்குமார் கோலி இயக்கியுள்ளார். பின்னர், ரீனா ராய், நீது சிங், சுனில் தத், சஞ்சீவ் குமார், ஜீதேந்திரா மற்றும் சத்ருகன் சின்ஹா நடிப்பில் அவர் 'ஜானி துஷ்மன்’ என்ற படத்தை 1979 ஆம் ஆண்டு இயக்கினார்.
மிதுன் சக்ரவர்த்தி, டிம்பிள் கபாடியா, மீனாட்சி சேஷாத்ரி மற்றும் வினோத் மெஹ்ரா நடித்த ’பீஸ் சால் பாத்’ அவரின் வெற்றிப்படங்களில் ஒன்று. தயாரிப்பாளராகவும் அவர் பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார்.