குஷ்பு மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுங்கள்- விசிக
24 Nov,2023
தலித் மக்கள் பேசும் மொழியை வன்மம் கொண்ட மொழி, தீண்டத்தகாத மொழி என குஷ்பு இழிவுப்படுத்தி பேசியதாகவும், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா குறித்து அவருடன் லியோ படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு நடிகை குஷ்பு கடும் கட்டணத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் இணையவாசி ஒருவர் குஷ்புவிடம் சரமாரியாக கேள்வி கேட்டு பதிவிட்டிருந்தார்.
இதற்கு எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்த குஷ்பு, 'திமுகவினர் இப்படித்தான் தவறான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இதுதான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்கவும், மன்னிக்கவும் உங்களது சேரி மொழியில் பேச முடியாது' என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சேரி என்றால் அன்பு என்று பொருள் என பின் வாங்கினார்.
இந்த நிலையில், தலித் மக்கள் பேசும் மொழியை வன்மம் கொண்ட மொழி, தீண்டத்தகாத மொழி என குஷ்பு இழிவுப்படுத்தி பேசியுள்ளார். அதனால் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.