ராஷ்மிகாவை தொடர்ந்து கேத்ரீனா கைஃப்: அச்சுறுத்தும் ‘டீப் ஃபேக்’ அத்துமீறல்
12 Nov,2023
.
‘டீப் ஃபேக்’ மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலியான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், தற்போது பாலிவுட் நடிகை கேத்ரீனா கைஃப்பின் போலியான புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.
‘டீப் ஃபேக்’ என்ற ஏஐ தொழில்நுட்பம் மூலம் உண்மையை போலவே தோற்றமளிக்கும் போலி வீடியோக்களும், புகைப்படங்களும் பரவி வருகின்றன. அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வேறொரு பெண்ணின் உடலோடு பொருத்திய போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக ராஷ்மிகா கவலை தெரிவித்திருந்தார். இந்நிலையில், அந்த ‘டீப் ஃபேக்’ மூலம் நடிகை கேத்ரீனா கைஃப்பின் போலி புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.
அவரது நடிப்பில் அடுத்ததாக ‘டைகர் 3’ படம் நவம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் சல்மான் கான் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் இந்தப் படத்தில் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளருடன் குளியலறையில் வெள்ளை நிற துண்டை அணிந்து சண்டையிடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் கேத்ரீனா. மேலும், இந்தக் காட்சி படமாக்கப்பட்டபோது தான் சந்தித்த சவால்கள் குறித்தும் அவர் அதில் தெரிவிந்திருந்தார்.
தற்போது அவரின் அந்த ஒரிஜினல் புகைப்படத்தை யாரோ ஒருவர் ‘டீப் ஃபேக்’ தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரவச் செய்துள்ளார். இந்தப் போலிப் புகைப்படம் வைரலாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எச்சரிக்கை: ‘டீப் ஃபேக்’ தொடர்பாக மத்திய தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தின் பக்கத்தில், "பிரதமர் மோடி தலைமையிலான அரசு இணைய பயன்பாட்டாளர்கள் பாதுகாப்பை உறுதிபடுத்தி வருகிறது. ஐடி விதிகளின்படி சமூக வலைதளங்கள் உண்மையான பதிவுகள் பகிரப்படுகிறதா என்பதை உறுதிபடுத்த வேண்டும். தவறானவை பகிரப்பட்டால் 36 மணி நேரங்களில் அவை நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். சமூக ஊடகங்கள் விதிகளை மதிக்காவிட்டால், அவர்களுக்கு எதிராக விதி 7 பயன்படுத்தப்படும். ஐபிசி விதிகளின் கீழ் அந்த நபர் குறிப்பிட்ட சமூக வலைதளம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். டீப் ஃபேக் வீடியோக்கள் மிகவும் மோசமானவை" என்று குறிப்பிட்டுள்ளார்.